வேலை வாங்கி தருவதாக 3.28 கோடி மோசடி: அண்ணா பல்கலை. துணை பதிவாளர் பார்த்தசாரதி கைது: போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடி : மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

சென்னை: பல்கலையில் பல்வேறு பதவிகளுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி 3.28 கோடி வாங்கிக் கொண்டு, 25 பேருக்கு போலி பணி நியமன ஆணை வழங்கியதாக, அண்ணா பல்கலைக்கழக துணை பதிவாளர் பார்த்தசாரதியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலையில் இருப்பதை பலர் கவுரவமாக கருதுகின்றனர். இதனால் இங்கு பணியில் சேர பலத்த போட்டி இருக்கும். இந்நிலையில் பல்கலையில் காலியாக உள்ள பேராசிரியர் மற்றும் துணை பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த பணியிடங்களுக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விக்னேஷ்வரன் உள்ளிட்ட 25 பேர் பரபரப்பு புகார் ஒன்று அளித்தனர்.

அந்த புகாரில், அண்ணா பல்லைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர், துணை பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் காலி பணியிடங்களுக்கு நாங்கள் விண்ணப்பித்தோம். அதேபோல் மற்ற அரசு துறை வேலைகளுக்கும் நாங்கள் விண்ணப்பித்தோம். அப்போது அண்ணா பல்கலைக்கழக துணை பதிவாளர் பார்த்தசாரதியின் நட்பு எங்களுக்கு கிடைத்தது. அவர், தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் குரோம்பேட்டை எம்ஐடியில் துணை பதிவாளராக இருக்கிறார். அவர், எங்கள் 25 பேரிடம் வேலை வாங்கி தருவதாக மொத்தம் 3.28 கோடி பணம் வாங்கினார். பின்னர், எங்களுக்கு பணி நியமன ஆணையை அனுப்பினார். அந்த பணிநியமன ஆணைப்படி நாங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தை அணுகியபோது, அது போலி பணி நியமன ஆணை என தெரியவந்தது.

இதேபோல் மற்ற அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான பணி நியமன ஆணையும் போலியானது என தெரியவந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட நாங்கள் துணை பதிவாளர் பார்த்தசாரதியிடம் கேட்ட போது உரிய பதில் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டு தர வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தனர். புகாரின்படி விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அண்ணா பல்கலைக்கழகத்தில் துணை பதிவாளராக பணியாற்றி வரும் பார்த்தசாரதி பல்வேறு அரசு பணியிடங்களுக்கு தனது மகன் விஸ்வேஷ்வரனுடன் சேர்ந்து அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பல அரசு துறைகளின் போலியான பணி நியமன ஆணைகளை வாங்கி 3.28 கோடி பணம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.

அதைதொடர்ந்து நேற்று அதிகாலை அண்ணா பல்கலைக்கழக துணை பதிவாளர் பார்த்தசாரதியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்து வந்து மோசடி தொடர்பாக விசாரணை நடத்தினர். அதில் இதுபோல் தமிழகம் முழுவதும் பட்டதாரிகளிடம் அரசு வேலை வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் பணம் பெற்று போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடி செய்தது தெரியவந்தது. இந்த மோசடியில் ஆளுங்கட்சி அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் கைது செய்யப்பட்ட பார்த்தசாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2019ம் ஆண்டு அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் பார்த்தசாரதி மகன் விஸ்வேஷ்வரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மோசடி வழக்கில் அண்ணா பல்கலைக்கழக துணை பதிவாளருமான பார்த்தசாரதி கைது செய்யப்பட்ட சம்பவம் பல்கலைக்கழக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எந்த பதவிக்கு எவ்வளவு?

அண்ணா யூனிவர்சி்ட்டி பிஆர்ஓ    15 லட்சம்

மின்வாரிய ஏஇ பதவி        10 லட்சம்

மின்வாரிய ஜெஏ பதவி        8 லட்சம்

மின்வாரிய உதவியாளர்        3 லட்சம்

ஆசிரியர் வேலை        10 லட்சம்

Related Stories:

>