×

தமிழகம்-புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் திமுகவில் நேர்காணல் தொடங்கியது: இன்று 6 மாவட்டங்களுக்கு நடக்கிறது

சென்னை: தமிழகம்-புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நேற்று நேர்காணல் துவங்கியது. முதல் நாளான நேற்று கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். இன்று 6 மாவட்டங்களுக்கு நேர்காணல் நடக்கிறது. தமிழகம், புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் கடந்த மாதம் 17ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடந்தது. விருப்ப மனு தாக்கல் தொடங்கிய நாள் முதல் ஆயிரக்கணக்கானோர் போட்டி போட்டு விண்ணப்பித்தனர். மொத்தம் 8,388 பேர் விருப்ப மனுக்களை வாங்கினர். இதில் 7,967 பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர்.

விருப்ப மனு அளித்தவர்களிடம் மார்ச் 2ம் தேதி(நேற்று) முதல் வரும் 6ம் தேதி வரை நேர்காணல் நடைபெறும் என்று திமுக அறிவித்தது. அதன்படி நேற்று காலை 9 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நேர்காணல் தொடங்கியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த நேர்காணல் நடந்தது. அப்போது பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர்கள் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். நேற்று காலையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான நேர்காணல் நடந்தது.

இதில், விருப்ப மனு தாக்கல் செய்தவர்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். அதில், கட்சியில் எவ்வளவு ஆண்டுகளாக இருக்கிறீர்கள், கட்சிக்காக உங்களின் பங்களிப்பு எந்தளவில் உள்ளது, என்ன படித்துள்ளீர்கள், எந்தெந்த போராட்டங்களில் பங்கேற்றீர்கள், தொகுதியில் திமுகவின் வெற்றி வாய்ப்பு எந்தளவில் உள்ளது. தொகுதியில் உங்களுக்கு எந்த அளவில் செல்வாக்கு உள்ளது. கூட்டணி கட்சிகளில் செல்வாக்கு எவ்வாறு உள்ளது?. ஆளுங்கட்சியின் செல்வாக்கு எந்தளவில் உள்ளது. திமுக குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் உள்ளிட்ட கேள்விகளை கேட்டார். உங்கள் தொகுதியை கூட்டணி தொகுதிக்கு ஒதுக்கும் போது சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று அறிவுரை வழங்கியதாக தெரிகிறது.

தொடர்ந்து பிற்பகல் 4 மணியளவில் விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களுக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான நேர்காணல் நடைபெற்றது. நேர்காணலில் பங்கேற்க வந்தவர்கள், திமுக தொண்டர்களால் அண்ணா அறிவாலயம் நிரம்பி வழிந்தது. இன்று காலை 9 மணிக்கு மதுரை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களுக்கும், மாலை 4 மணியளவில் திருப்பூர், கோவை, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடைபெறுகிறது. தொடர்ச்சியாக வரும் 6ம் தேதி வரை நேர்காணல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Tamilnad- ,Vavachcheri Sattaberwa Elections ,Timu , Tamil Nadu-Puducherry Assembly elections Interview started in DMK: Today is going on for 6 districts
× RELATED மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய தலைவரை...