3வது டி20ல் இன்று நியூசிலாந்துடன் ஆஸி. மோதல்

வெலிங்கடன்: நியூசிலாந்து - ஆஸ்திரேலியா மோதும் 3வது  டி20 போட்டி, வெலிங்டனில் இன்று நடைபெறுகிறது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த முதல் போட்டியில் 53 ரன் வித்தியாசத்திலும், டுனெடினில் நடந்த 2வது போட்டியில் 4 ரன் வித்தியாசத்திலும் வென்ற நியூசிலாந்து 2-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 3வது போட்டி வெலிங்டனில் இன்று நடக்கிறது.  ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்ற நியூசிலாந்து அணியும், வாய்ப்பை தக்கவைக்க ஆஸ்திரேலியாவும் வரிந்துகட்டுகின்றன.

ஆக்லாந்து உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பரவல் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, மார்ச் 5ல் ஆக்லாந்தில் நடக்க வேண்டிய 4வது போட்டியும் வெலிங்டனிலேயே நடைபெறும்.  மார்ச் 7ல் தவுரங்காவில் நடக்க இருந்த 5வது போட்டி மவுன்ட் மவுங்கானுயில் நடக்கும். கடைசி 3 போட்டிக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அடுத்து வங்கதேசத்திற்கு எதிராக நடக்க உள்ள தொடரும் (3 டி20, 3 ஒருநாள்) ஒரே நகரில்,  பூட்டிய அரங்கில் நடைபெற உள்ளது.

Related Stories:

>