×

சட்டமன்ற தேர்தலுக்கு பின் எடப்பாடியை ஓரங்கட்ட பாஜ ரகசிய திட்டம் அம்பலமானது: சசிகலா - அதிமுக தலைவர்களை மோதவிட்டு ரசிக்கும் டெல்லி தலைவர்கள்

சென்னை: வெளிப்படையாக சசிகலா-எடப்பாடியை மோதவிட்டு ரசித்த பாஜ, இருவரையும் ஒரே கூட்டணியில் கொண்டுவர திட்டமிட்டது ஏன் என்ற ‘திடுக்’ தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. தமிழகத்தில் எடப்பாடியையும், அதிமுகவையும் ஓரங்கட்டவே பாஜ திட்டமிட்டுள்ள ரகசிய திட்டம் தற்போது அம்பலமாகிவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதிமுகவை பொறுத்தவரை, கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி வைத்துக்கொண்ட பாமக, பாஜ, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகளுடன் வருகிற சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி வைத்துக்கொள்ள முடிவு செய்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. முன்னதாக, அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்றும், கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை பாஜ தலைவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்து வந்தனர்.

ஒரு கட்டத்தில் பாஜவின் 2ம் கட்ட தலைவர்கள் எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வதாக அறிவித்தாலும், பகிரங்கமாக அறிவிக்க தயக்கம் காட்டினார். தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் கூட, பாஜ தலைமையில் தான் தமிழகத்தில் கூட்டணி அமையும். முதல்வர் வேட்பாளரை டெல்லி தலைமைதான் அறிவிக்கும் என்றார். பின்னர் சில நாட்களாக இரு கட்சிகளின் தலைவர்களும் மோதல் போக்கில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் என்ன நினைத்தார்களோ அந்த கருத்தில் இருந்து பாஜ பின்வாங்கியது. அப்போதுதான் அதிமுக தலைவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில்தான் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் முதல் கட்சியாக பாமகவுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த கட்சிக்கு 23 சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், பாஜ தலைவர்கள் பல கட்டமாக அதிமுக தலைவர்களை சந்தித்து பேசினர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து பேசியும் உடன்பாடு ஏற்படவில்லை.

முன்னதாக, தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் வரை, அதிமுக கூட்டணியில் பாஜவுக்கு 20 முதல் 25 இடங்கள் வரை போதும் என்ற மாயையைத்தான் பாஜ தலைவர்கள் உருவாக்கியிருந்தனர். எப்படியாவது பெரிய கட்சியுடன் கூட்டணி வைத்து, சட்டப்பேரவைக்குள் செல்ல வேண்டும் என்பதே அவர்களின் குறியாகத்தான் இருந்தது. ஆனால் தேர்தல் தேதி அறிவித்த பிறகு பாஜவின் நிலை வேறு மாதிரியாக மாறிவிட்டது. காரணம், தமிழகத்தில் தற்போதுள்ள அதிமுக ஆட்சிக்கு நல்ல பெயர் இல்லை. இவர்களுடன் கூட்டணி வைத்தால் வெற்றிபெற முடியாது என்ற நிலைக்கு வந்துள்ளது. அதனால் ரஜினியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட பாஜ ரகசிய திட்டம் போட்டது. ஆனால், ரஜினிகாந்த் திடீரென அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்தார். இந்த நிலையில்தான், தற்போது சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலாவுக்கு ஆதரவாக பாஜ செயல்பட தொடங்கி உள்ளது. அதாவது, அதிமுக கூட்டணியில் சசிகலா மற்றும் டிடிவிதினகரன் கட்சியான அமமுகவை சேர்க்க வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் அதிமுக கூட்டணி கனிசமான இடங்களை வெற்றிபெற வேண்டும் என்று பாஜ மேலிட தலைவர்கள் முதல்வர் எடப்பாடிக்கு அழுத்தம் கொடுத்தனர்.

இதன்மூலம் பாஜவின் சூழ்ச்சி வலை வெளியே தெரியவந்தது. ஒரு கட்டத்தில் சசிகலாவை கூட்டணியில் சேர்க்க முடியாது என்று எடப்பாடி, ஓபிஎஸ் ஆகியோர் உறுதியாக கூறினாலும், பாஜ சின்னத்தில் அமமுகவை நிற்க வைக்கிறோம் என்ற புதிய பார்முலாவை அதிமுகவிடம் முன் வைத்தது பாஜ. கடந்த 2017ம் ஆண்டு சசிகலா தமிழக முதல்வராக வர முயற்சி செய்தார். அதை தடுத்து நிறுத்தி, அவரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டாம் என்று கவர்னருக்கு நெருக்கடி கொடுத்தது இதே பாஜதான். பின்னர் சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளி வந்தது. சசிகலாவை பெங்களூர் சிறையில் 4 வருடம் அடைக்க முக்கிய காரணமாக இருந்தது பாஜ தான். சசிகலா மற்றும் அவர்களது உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி ₹5 ஆயிரம் கோடிக்கு சொத்துக்களை கண்டுபிடித்து வழக்கும் போட்டனர். அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. அவர்களது சொத்துக்கள் எல்லாம் அரசு முடக்கியது. முன்னதாக ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் தேர்தலில் நின்றபோது ₹64 கோடி செலவு செய்ததற்கான ஆவணங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி கைப்பற்ற வைத்தது.

இதன்மூலம் எடப்பாடி பழனிசாமியை மிரட்டித்தான், இருவரையும் பிரித்தனர். இவ்வளவு வேலைகளையும் செய்துவிட்டு, இப்போது சசிகலா மீது பாஜ தலைவர்களுக்கு திடீர் கரிசனம் ஏற்பட காரணம் என்ன என்று அதிமுக தலைவர்களை யோசிக்க வைத்துள்ளது. பிரித்தவர்களே இருவரையும் சேர்த்து வைக்க வேண்டிய காரணம் என்ன என்றும் அதிமுக தொண்டர்கள் எண்ணத் தொடங்கி விட்டனர். இப்போதுதான் பாஜவின் ரகசிய திட்டம் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. அதாவது, அதிமுகவிடம் இந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 40 இடங்கள் எப்படியாவது வாங்கிவிட வேண்டும். பின்னர், இதில் கணிசமான இடங்களை அமமுகவுக்கு ஒதுக்குவது. அமமுக வேட்பாளர்களை தாமரை சின்னத்தில் போட்டியிட வைப்பது.  பின்னர் தேர்தலில் வெற்றிபெற்ற அமமுக எம்எல்ஏக்களை அப்படியே பாஜவுக்கு இழுத்துவிட வேண்டும். இதைத்தொடர்ந்து, அதிமுக எம்எல்ஏக்களையும் பாஜவுக்கு இழுக்க வேண்டும். இதன்மூலம் தமிழகத்தில் அதிமுக கட்சியை காலி செய்ய பாஜ திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஏற்கனவே அதிமுக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் கடந்த 4 ஆண்டுகளாக பனிப்போர் நடந்து வருகிறது. எடப்பாடி, கொங்கு மண்டல அமைச்சர்களை பலப்படுத்துவதிலேயே முக்கியத்துவம் அளித்தார். அதில் தங்கமணி, வேலுமணி ஆகிய 2 அமைச்சர்களுக்கும் தனி அதிகாரம் கொடுத்து வைத்துள்ளார். அந்த இரண்டு அமைச்சர்கள் வைப்பதுதான் சட்டம் என்ற நிலை தற்போது அதிமுகவில் உள்ளது. அவர்கள் ஆட்டம் அதிகளவில் உள்ளதாக அதிமுக கட்சியினரே கூறும் அளவுக்கு உள்ளது. எடப்பாடி கொடுத்த சுதந்திரத்தால் அந்த இரண்டு அமைச்சர்களும் இன்று எங்கோ சென்று விட்டார்கள். இதற்கான ஆதங்கம் ஓ.பன்னீர்செல்வத்திடம் நிரம்பி உள்ளதாக கூறப்படுகிறது. தென்மாவட்ட அமைச்சர்களுக்கும் இந்த ஆதங்கம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில்தான் பாஜ தலைவர்கள், முதல்வர் எடப்பாடியை ஓரங்கட்ட எடுத்து வரும் முயற்சிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ரகசிய ஆதரவு தெரிவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தலுக்குப் பின்னர் தங்களுடைய முயற்சிக்கு ஓ.பன்னீர்செல்வத்தையும் தங்கள் பக்கம் இழுக்க பாஜ ரகசிய திட்டம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டம் வெற்றிபெற்றால் தமிழகத்தில் அதிமுகவுக்கு பொதுச் செயலாளராகிவிடலாம் அல்லது எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தாவது கிடைக்கும் என்ற எடப்பாடியின் திட்டம் தகர்ந்து விடும்.

அதேநேரம், பாஜ திட்டம் வெற்றிபெற்றால், அதிமுகவையும், எடப்பாடியின் எண்ணங்களும் புதைக்குழிக்குள் கொண்டு சென்று விடும்.  இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் பாஜவும் புதிய உத்வேகத்துடன் வளர முடியும் என்று டெல்லி தலைவர்கள் நினைப்பதாக கூறப்படுகிறது. அதனால்தான், தற்போது அதிமுகவிடம் பாஜ 40 சீட் வேண்டும் என்று பேரம் பேச தொடங்கியுள்ளது. இதில் பாஜ மற்றும் அமமுக கட்சியினர் போட்டியிடுவார்கள். அனைவருமே தாமரை சின்னத்தில் நிற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதேநேரம், டெல்லி பாஜ தலைவர்களால் சிறைக்கு போன சசிகலா மீது ஏன் இந்த திடீர் கரிசனம் என்று தற்போதுதான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி யோசிக்க தொடங்கியுள்ளார். பாஜகவின் ரகசிய திட்டத்தை தெரிந்து கொண்டுதான், அதிமுக கூட்டணியில் சசிகலாவை சேர்க்கவே முடியாது என்று திட்டவட்டமாக மறுத்து வருகிறார். தொடர்ந்து இதே நிலையை கடைபிடிப்பாரா? அல்லது பாஜவால் புதைகுழிக்குள் அதிமுகவை தள்ளும் முடிவை எடப்பாடி எடுப்பாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக தற்போது எழுந்துள்ளது.



Tags : Baja ,Sasikala - Delhi , BJP's secret plan to sideline Edappadi after Assembly polls exposed: Sasikala-Delhi leaders clash over AIADMK leaders
× RELATED வடமாநில நபர்களின் வாக்குகளை...