×

வடகிழக்கு பருவமழை மூலம் கிடைத்த நீரை கூட சேமிக்க முடியாமல் போனது நீர் மேலாண்மையில் கோட்டை விட்ட தமிழக அரசு

* காவிரி, பாலாறு, தாமிரபரணி ஆற்றில் ஒவ்வொரு ஆண்டும் மழை நீர் வீணாக கடலில் கலக்கும் அவலம்
* தூர்வாரியதாக கூறப்பட்ட நிலையில் 403 ஏரிகளில் ஒரு ெசாட்டு நீர் கூட இல்லை
* குடிமராமத்து திட்டத்தில் தூர்வாருவதாக ஆளும் கட்சி நிர்வாகிகள் மணல் கொள்ளை


சென்னை: நீர் மேலாண்மையில் கோட்டை விட்டதால், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மூலம் கிடைத்த நீரை கூட சேமிக்க முடியாமல் விட்டதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் காவிரி, பாலாறு, தாமிரபரணி ஆற்றில்  மழை நீர் வீணாக கடல் கலக்கும் அவல நிலை தான் உள்ளது. 


தமிழகத்துக்கு ஆண்டுக்கு 200 டிஎம்சி நீர் குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கு தேவைப்படுகிறது. மேலும், 130 லட்சம் ஏக்கரில்  விவசாய நிலங்கள் உள்ளது. ஆற்றுக்கால்வாய்கள் மூலம் 20 லட்சம் ஏக்கர், ஏரி, குளங்கள் மூலம் 15 லட்சம் ஏக்கர், கிணறுகள் மூலம் 45 லட்சம் ஏக்கர் என மொத்தம் 75 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இவற்றுக்கு ஆண்டுக்கு நீர் தேவை 1,500 டிஎம்சி தண்ணீரும், தொழிற்சாலைகள், குடிநீர் தேவைக்கு 200 டிஎம்சி தண்ணீரையும் சேர்த்தால் தமிழகத்தின் ஆண்டு தண்ணீர் தேவை 1,700 டிஎம்சி.

இதற்கு தமிழகம் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழையை தான் நம்பி உள்ளது. திறம்பட செயல்பட்டால் இந்த நீரை சேமிக்க முடியும். ஆனால், மழை நீரை சேமித்து வைக்க அரசு எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை.  இதனால், முக்கிய ஆறுகள் மூலம் 400 டிஎம்சி தண்ணீர் கடலில் வீணாக கலக்கிறது. இதனால் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சியை தமிழகம் 2016ல் சந்தித்தது. 2015ல் நல்ல மழை பெய்தும் அதை சேமிக்க முடியாமல், கடும் வறட்சியில் சிக்கி தவித்தோம். இதில், நாம் பாடம் கற்ற பிறகு கூட தொடர்ந்து மழைநீர் கட்டமைப்பு பணிகளை மேம்படுத்தாததால் மழை நீர் தொடர்ந்து கடலில் கலந்து வருகிறது. 2020ம் ஆண்டும் காவிரி ஆற்று தண்ணீர் வீணாக கடலில் கலந்தது. 

alignment=



மேட்டூர் அணையில் இருந்து உபரி நீரை நதி இணைப்பு திட்டம் மூலம் திருப்பி விடுவது, சேலம் மாவட்டத்தின் ஏரி, குளங்களுக்கு திருப்பி விடும் திட்டம் கொண்டு வர அரசு முடிவு செய்தது. இதில், சேலம் மாவட்டத்துக்கு திருப்பி விடும் திட்டம் தற்போது தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு அடிக்கல் மட்டுமே நாட்டப்பட்டுள்ளது. இது செயல்பாட்டுக்கு வருமா என்பது இப்போது தெரியாது.
மேலும், குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.1418 கோடியில் இதுவரை 6211 ஏரிகள் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், ரூ.5586 ஏரிகள் புனரமைப்பு பணி முடிக்கப்பட்டுள்ளது. இந்த ஏரிகளில் தூர்வாரி ஆழப்படுத்த முடிவு செய்யப்பட்டன. இந்த ஏரிகளில் இருந்து அள்ளப்படும் மணல் விவசாயிகளுக்கு தேவை என்றால் எடுத்து செல்லலாம் என்று கூறப்பட்டன. 


alignment=



இதை தொடர்ந்து அந்த ஏரிகளில் ஆளும் கட்சி உள்ளூர் நிர்வாகிகள் தங்களது இஷ்டத்திற்கு ஏரிகளில் பல அடி தூரம் தோண்டி மண்ணை அள்ளி சென்றதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டியதாகவும் தெரிகிறது. குறிப்பாக, ஏரிகளை தூர்வார ஒதுக்கிய நிதியை விட அவர்கள் பெற்ற வருவாய் தான் அதிகம் என்று கூறப்படுகிறது. இதை தடுக்க வேண்டிய அரசு வேடிக்கை பார்த்ததன் விளைவாக ஏரிகளில் பல அடி தூரம் தோண்டி விட்டனர். இதனால், ஏரிகளில் நீரை உறிஞ்சும் தன்மை பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், அந்த ஏரிகளில் பல அடி தூரம் தோண்டி விட்டதால் குடிநீருக்காக ஆடு, மாடுகள் தண்ணீர் பருகாத முடியாத நிலை ஏற்பட்டது. அதே போன்று நீர்வளநில வளத்திட்டத்தின் கீழ் 2,500 ஏரிகள் புனரமைக்கப்பட்டதாக பொதுப்பணித்துறை கூறுகிறது.

ஆனால், ஏரிகள் முறையாக புனரமைக்காத நிலையில் வரத்து கால்வாய்கள் சரி செய்யப்படாததால்  வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்தும் ஏரிகளுக்கு தண்ணீர் வரவில்லை என்று விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளார். குறிப்பாக, மாநிலம் முழுவதும் 14,139 ஏரிகளில் 403 ஏரிகளில் ஒரு சொட்டு நீர் கூட இல்லை. 1819 ஏரிகளில் 1 சதவீதம் முதல் 25 சதவீதம் வரையும், 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை 1376 ஏரிகளில் 2214 ஏரிகளுக்கும் நீர் இருப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. இந்த பிரச்னைக்கு, ஏரிகளில் முறையாக புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படாதே முக்கிய காரணம். இந்த நிலையில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 89 அணைகள் உள்ளது. இந்த அணைகள் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் 40 சதவீதம் அளவுக்கு தனது கொள்ளளவை இழந்து தவிக்கிறது.

இந்த அணைகளை தூர்வாரப்படும் என்று கடந்த 2012ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். ஆனால், தற்போது வரை ஒரு அணை கூட தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படவில்லை. இதனால், அணைகளில் வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கும் நீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், ஜலசக்தி அமைச்சகத்தினால், நீர் மேலாண்மையில் சிறப்பாக மேற்கொண்டதாக கடந்த 2019ல் தேசிய நீர் விருதை தமிழக அரசு பெற்றுள்ளது. ஆனால், தமிழக அரசு சார்பில் வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கும் 1000 டிஎம்சி நீரை சேமித்து வைக்க எந்தவொரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என்பதே தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் தேசிய நீர் விருது பெற்றதாக தமிழக அரசு மக்களை ஏமாற்றி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழகத்துக்கு தற்போது ஆண்டுக்கு 54595 மில்லியன் கன மீட்டர் நீர் குடிநீருக்கு தேவையானதாக இருக்கிறது. இதே போன்று 2050ல் தண்ணீர் தேவை ஆண்டுக்கு 57,725 மில்லியன் கன மீட்டராக உயர வாய்ப்புள்ளது. தற்போதைய நிலையில் தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் 40 கோடி லிட்டர் தண்ணீர் தேவை.  2050ல் 11 கோடியாக மக்கள் தொகை உயரும் போது, தினமும் குடிநீர் தேவை 55 கோடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, அதற்கேற்ப குடிநீர் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

மழைநீரை சேமிக்காத தடுப்பணை


alignment=



பாலாறு, பெண்ணையாறு, காவிரி, தாமிரபரணி உட்பட 17 ஆற்றுப்படுகையில் தடுப்பணை அமைத்து தண்ணீரை சேமித்து வைக்கும் திட்டமும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டன. ஒரு தடுப்பணை மூலம் குறைந்தது, 0.30 டிஎம்சி முதல் 1.50 டிஎம்சி சேமிக்க முடியும். ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் 62 தடுப்பணைகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணைகள் சிறியதாகவே அமைக்கப்பட்டுள்ளது. 0.15 டிஎம்சி கூட தேக்கி  வைக்க முடியாது. பாலாற்றில் மட்டுமே அரை டிஎம்சி அளவுக்கு தண்ணீர் சேமித்து வைக்கும் அளவுக்கு 2 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. ஆனால், எனவே, இந்த தடுப்பணைகளால் எந்த வித பயனும் இல்லாமல் போய் விட்டது. மேலும், தடுப்பணைகள் அனைத்தும் தரமில்லாமல் கட்டப்பட்டதால் முழு அளவு நீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

எத்தனை ஏரி, அணைகள்


alignment=



தமிழகத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 89 அணைகள் மூலம் 224 டிஎம்சி நீர் சேமிக்கப்படுகிறது. இதை தவிர்த்து 14,139 குளங்கள், ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 39,242 குளங்கள், 12 லட்சம் கிணறுகள், 39 லட்சம ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் சேமித்து வைக்கப்படுகிறது. இவை தான் பாசனம் மற்றும் குடிநீரின் முக்கிய ஆதாரமாக தமிழகத்துக்கு இருந்து வருகிறது.

எந்த ஆறு... எவ்வளவு வீண்


தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக காவிரி ஆற்றில் 100  டிஎம்சி, பெண்ணை ஆற்றில் 9.09 டிஎம்சி, தாமிரபரணி ஆற்றில் 11.39 டிஎம்சி,  வைப்பாற்றில் 4.73 டிஎம்சி, வெள்ளாறு 21.47 டிஎம்சி, கோதையாறு 14.5 டிஎம்சி, சென்னையில் கூவம், அடையாறு, கொசஸ்தலையாற்றில் 25 டிஎம்சி, வைகையாற்றில் 25 டிஎம்சி, பாலாற்றில் 40 டிஎம்சி, பரம்பிகுளம், ஆழியாற்றில்  50 டிஎம்சி என 17 ஆற்றுப்படுகைகளில் ஒவ்வொரு ஆண்டும் 400 டிஎம்சிக்கு மேல் மழை நீர் வீணாக கடலில் கலக்கிறது.


alignment=



ஆண்டுக்கு 4,343 டிஎம்சி தண்ணீர்


தமிழகத்தில் இயல்பான மழையளவு ஆண்டுக்கு 911.60 மி.மீ ஆகும். இது, 4,343 டிஎம்சிக்கு சமமானது. ஆனால்,  மாநிலத்தின் மொத்த மேற்பரப்பு நீர்வள ஆதாரம் 636 டிஎம்சி ஆகும். அரசின் அலட்சியத்தால் மழைநீர் வீணாக கடலில் கலக்கிறது.



Tags : Tamil ,Nadu , The government of Tamil Nadu, which has lost ground in water management, has not been able to save even the water obtained from the northeast monsoon
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...