திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அணுமின் நிலைய நிலா கமிட்டியை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும். தேவையென்றால் வரும் சட்ட மன்ற தேர்தலையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் சென்னை அணுமின் நிலையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், பாபா அணு ஆராய்ச்சி மையம் உள்பட பல்வேறு பிரிவுகள் உள்ளன. இங்கு, சென்னை அணுமின் நிலையம் 1983ல் துவங்கப்பட்டு சென்னை அணுமின் நிலையம் 1 மற்றும் சென்னை அணுமின் நிலையம் 2 என ஒவ்வொரு அணு உலைகளிலும் தலா 220 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அணுமின் நிலைய பிரிவுகளுக்காக 1983க்கு முன்னரே நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கி, அணுமின் நிலையம் அமைந்துள்ள இடத்தில் இருந்த கிராம மக்களை வெளியேற்றினர். அவர்களை, பல்வேறு மாற்று இடங்களில் அணுமின் நிலைய நிர்வாகம் குடியமர்த்தியது. அப்போது, கிராம மக்கள் அணுசக்தியின் கேடுகளும், அதன் விளைவுகளையும் அறியாமல் இருந்தனர்.
அந்தநேரத்தில் இருந்த அதிகாரிகள் ‘அணுமின் நிலையத்துக்கு இடம் கொடுத்தால், உங்களுக்கு அணுமின் நிலையத்தில் மத்திய அரசு வேலை வழங்கப்படும்’ என உறுதியளித்தனர். ஆனால், இங்குள்ள விஞ்ஞானிகள், பொறியாளர்கள், உயரதிகாரிகள் என 95% வெளி மாநிலத்தவர்களே பணியமர்த்தப்பட்டுள்ளனர். அணுமின் நிலையத்திற்கு நிலம் கொடுத்தவர்கள், அணுமின் நிலையத்தில் இருந்து வெளிவரும் அணு கதிர்வீச்சால் பாதிக்கப்படும் பொதுமக்கள், தொடர்ந்து வேலை வாய்ப்பில் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பது நீண்ட நெடுங்கால ஆதங்க குரலாக உள்ளது. இதற்கிடையில், நிலா கமிட்டி என்ற பெயரில் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள புதுப்பட்டினம், கொக்கிலமேடு, குன்னத்தூர், சதுரங்கபட்டினம், வெங்கப்பாக்கம், நெய்குப்பி, விட்டிலாபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட 14 கிராமங்களை கணக்கீடு செய்து, அணுமின் நிலைய நிர்வாகமே முடிவு செய்து நிலா கமிட்டி என்ற கமிட்டிக்குள் கொண்டு வந்துள்ளது. இந்த கமிட்டிக்குள் வரும் சர்வே எண்களுக்கு வீட்டுமனை அங்கீகாரமோ, கட்டிட அனுமதியோ வழங்கப்படமாட்டாது என்ற நிபந்தனையை உள்ளடக்கி உள்ளதால், கல்பாக்கத்தை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நிலா கமிட்டிக்கு உட்பட்ட சர்வே எண்களை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என கடந்த சில நாட்களுக்கு முன் திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர் பரிமளா, செங்கல்பட்டு மாவட்ட பதிவாளருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். இதனையறிந்த பொதுமக்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பத்திரப்பதிவுக்கு தடை மட்டும் நீக்கப்பட்டது. ஆனாலும், நிலா கமிட்டிக்குள் குறிப்பிட்ட 14 கிராமங்களில் உள்ள சர்வே எண்களுக்கு கட்டிட அனுமதி மற்றும் வீட்டுமனை அங்கீகாரம் மறுக்கப்படும் என கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘அணுக்கதிர்வீச்சால் பாதிப்பை மட்டும் உள்ளூர் மக்கள் அனுபவிக்க வேண்டும், ஆனால், வேலை வாய்ப்பு மற்றும் இதர சலுகைகள் வெளி மாநிலத்தவர்களுக்கு வழங்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த நிலா கமிட்டியை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் பொதுமக்கள் தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவோம். அப்போதும், நடக்காத பட்சத்தில் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்’ என்றனர்.