×

வாள் வீச்சில் இந்தியாவின் ராணி

நன்றி குங்குமம் தோழி

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பெராவில் 2018ம் ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டி நடைபெற்றது. இந்தியா 26 தங்கம் உட்பட 66 பதக்கங்களை வென்று 3வது இடத்தை பிடித்தது. இதில் வாள் சண்டை போட்டியில் சீனியர் ‘சேபர்’ பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை சென்னையைச் சேர்ந்த பவானி தேவி படைத்தார். இவர் இங்கிலாந்து வீராங்கனை எமிராக்சை 15-12 என்ற கணக்கில் வீழ்த்தினார். சென்னை திரும்பிய பவானிதேவி கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த தமிழக மக்களுக்கு தான் பெற்ற தங்கப் பதக்கத்தை அர்ப்பணிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.  

தொடர்ந்து நம்மிடம் பேசிய பவானிதேவி, இந்தியாவில் இருந்து வாள்வீச்சு போட்டிக்காக பெற்ற முதல் தங்கப்பதக்கம் இது என்பதோடு சர்வதேச போட்டிகளில் நான் பெற்ற முதல் தங்கப்பதக்கமும் இதுவாகும் என்றார் இரட்டிப்பு மகிழ்ச்சியோடு. தற்போது இத்தாலி நாட்டில் பயிற்சியில் இருப்பதாக நம்மிடம் தெரிவித்து உரையாடத் தொடங்கினார். ‘‘10ம் வகுப்புவரை சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள முருக தனுஷ்கோடி மகளிர் பள்ளியில்தான் படித்தேன்.

முதலில் வாள்வீச்சு (fencing) என்றால் என்னவென்று தெரியாமலே இந்த விளையாட்டை தொடங்கினேன். அப்போது நான் 6ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். பென்சிங் பயிற்சிக்காக எனது பெயரை பள்ளியில் கொடுத்துவிட்டேன். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் பயிற்சிக்காக பள்ளியில் இருந்து அழைத்துச் சென்றார்கள். அப்போதுதான் பென்சிங் என்றால் வாள்வீச்சு என்றும் அதை விளையாடும்போது அதற்கென உடைகள் மற்றும் முகமூடி (mask) எல்லாம் போட்டு விளையாட வேண்டும் எனத் தெரிய வந்தது. விளையாட்டைப் பற்றி அவர்கள் விளக்கும்போதே  சீக்கிரமாக அந்த வாளை எடுத்து விளையாட வேண்டும் என்கிற ஆசை மட்டுமே என் மனதில் அப்போது இருந்தது.

என் முதல் போட்டி மாநிலங்களிடை யிலான பள்ளி அளவில் நடந்தது. அதில் எனக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பிறகே மிகவும் தீவிரமாக எடுத்து மாவட்ட, மாநில அளவில் பங்கேற்கத் தொடங்கினேன். தொடர்ந்து எனது வெற்றி இலக்கை ஒவ்வொன்றாகத் தொட்டு முன்னேறிக் கொண்டே சென்றேன். அதாவது வாள் வீச்சில் மொத்தம் மூன்று பிரிவுகள் உண்டு. ஃபாயில் (இலகுரக வாள் சண்டை), சேபர் (அடிவாள் சண்டை), எஃப்பி (குத்துவாள் சண்டை). இதில் நான் எடுத்துக்கொண்ட பிரிவு சேபர். 2005ல் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 14 வயதிற்குட்பட்டவர்களுக்கான (sub junior) தேசிய விளையாட்டுப் போட்டி நடந்தது.

அதில் நான் தங்கம் வென்றேன். அதுதான் வாள் வீச்சு போட்டியில் தமிழ்நாட்டில் கிடைத்த முதல் தங்கம். தொடர்ந்து அடுத்தடுத்த ஜூனியர், சீனியர் லெவல் போட்டிகளில் பங்கேற்று பல விருதுகளையும், பதக்கங்களையும் பெற்றேன். அப்போது எனது பயிற்சியாளராக விஸ்வநாதன் சார் இருந் தார்.  வாள்வீச்சில் ‘சேபர் பயிற்சி’ வழங்கு வதில் இந்தியாவில் உள்ள சிறந்த பயிற்சி யாளர்களில் ஒருவர் சாகர் லாகு. இவர் கேரளா ஸ்போர்ட்ஸ்  அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவின் சாய் பயிற்சி மையத்தில் பயிற்சியாளராக இருக்கிறார். தேசிய அளவிலான போட்டிகளில் நான் விளையாடுவதைப் பார்த்தவர், நான் மிகவும் நன்றாக விளையாடுவதாக பாராட்டினார்.

கேரளாவில் இயங்கிய சாய் பயிற்சி மையத்தில் என்னை இணையச் சொல்லி அழைத்தார். இந்தியாவின் மிகச் சிறந்த பயிற்சியாளர் ஒருவர் என்னை அழைத்ததில் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். அவரது அழைப்பை ஏற்று கேரளாவில்  இயங்கும் சாய் பயிற்சி மையத்தில் இணைந்து எனது பயிற்சியைத் தொடர்ந்தேன். இதன் காரணமாக எனது பள்ளி இறுதிப் படிப்பையும், தொடர்ந்து கல்லூரிப் படிப்பையும் கேரள மாநிலம் தலச்சேரியில் முடித்தேன். அவரிடம் பயிற்சி எடுத்த பிறகு சீனியர் அளவிலும், சர்வதேசப் போட்டிகளிலும்  என்னுடைய திறமை வெளிப்படத் தொடங்கியது. இதற்கு முன் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றேன்.

என்னுடைய  தனிப்பட்ட ஜூனியர் போட்டியிலும் இந்தியாவிற்கான முதல் வெண்கல மெடலை நான் தான் வாங்கினேன். அதன் பிறகு தொடர்ந்து வெள்ளி, வெண்கல மெடல்களையும் பெற்றுக் கொடுத்திருக்கிறேன். 2017ம் ஆண்டு ஐஸ்லாந்து நாட்டின் ரேக்ஜாவிக் நகரில் சர்வதேச வாள்வீச்சுப் போட்டி நடைபெற்றது. இதில் இங்கிலாந்து வீராங்கனையான சாரா ஜேன் ஹாம்சனை 15க்கு 13 புள்ளியில் தோற்கடித்து  வாள்வீச்சு போட்டியின் முதல் தங்க மெடலை இந்தியாவிற்காகப் பெற்றேன். முதன் முதலில் இதை நான் நிகழ்த்திக்காட்டி நாட்டிற்கு பெருமை  சேர்த்தேன்.

சர்வதேசப் போட்டியில் கடந்த 2018ல் ஆஸ்திரேலியாவில் நடந்த சீனியர் காமன்வெல்த் சாட்டிலைட் உலகக் கோப்பை வாள்வீச்சு போட்டி  நடைபெற்றது. இந்தப் போட்டியில் எனக்கு தனிப்பட்ட முறையில் தங்கம் கிடைத்தது. காமன்வெல்த் போட்டியிலும் இந்தியாவிற்கு கிடைத்த முதல் தங்கம் இதுவாகும். வாள்வீச்சில் தங்கம் என்பது இந்தியாவிற்கு 44 வருடத்திற்கு பிறகு கிடைத்த முதல் அங்கீகாரம். இந்தியாவின் சார்பில் இந்த சாதனையை இதுவரை யாரும் நிகழ்த்தவில்லை. தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று  வருகிறேன். அடுத்தது எகிப்து, கிரீஸ் போன்ற நாடுகளில் நடைபெறும் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்பதற்கான பயிற்சியில் இருக்கிறேன்.  

பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை விளையாட்டுத் துறையில் ஊக்குவிப்பது என்பது தமிழ்நாட்டில் மிகவும் குறைவு. நான் வாள்வீச்சை முதலில் தேர்ந்தெடுத்த போது இதில் எதிர்காலம் இருக்கிறதா என்பதைப் பற்றி கவலைப்படாமல், எந்த மறுப்பும் தெரிவிக்காமல், என் விருப்பத்திற்காக மட்டுமே சம்மதித்து எனது பெற்றோர்கள் என்னை ஊக்குவித்தது என் வாழ்க்கையில் நடந்த மிகப் பெரிய விசயம். இதில் என்  சாதனையைவிட எனது பெற்றோர்களின் ஒத்துழைப்பே மிகவும் பெரியது. இந்த விசயத்தில் நான் ரொம்பவே கொடுத்து வைத்தவள். துவக்கத்தில் இருந்து இப்போதுவரை நூறு சதவிகிதமும் என்னை முழுமையாக நம்பி எனக்கு பக்கபலமாக இருக்கிறார்கள். என் பெற்றோர்களின் ஒத்துழைப்பை அத்தனை சுலபமாக வார்த்தைகளுக்குள் கொண்டு வர முடியாது’’ என்றவர், இப்போது சென்னை ஜென்ஜோசப் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வருகிறேன்  என்றார்.

‘‘1896 ஒலிம்பிக் விளையாட்டின் துவக்கத்தில் இருந்தே வாள்வீச்சு விளையாட்டும் ஒலிம்பிக்கில் இருக்கிறது. இதுவரை ஒலிம்பிக்கில் இந்தியாவில் இருந்து யாரும் கலந்துகொள்ளவில்லை. நான் பென்சிங் விளையாட ஆரம்பித்த போது அந்த மாதிரியான ஒரு விளை யாட்டு இந்தியாவில் இருப்பது  யாருக்குமே தெரியாது. இப்போது இந்த விளையாட்டு பரவலாக மக்களிடம் சேர்ந்துள்ளது. பென்சிங் வீராங்கனையாக என்னையும் ஓரளவுக்கு மக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். மற்ற மாநிலங்களில் இந்த விளையாட்டை அங்கீகரித்து அரசு பணிகளில் வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகிறது. இந்திய ராணுவத்தில் ஆண்களுக்கு மட்டும் மற்றும் காவல் துறையில் பெண்களுக்கும் சேர்த்து வேலைவாய்ப்பு தரப்படுகிறது.

தமிழ்நாட்டில் இந்த விளையாட்டிற்கென வேலைவாய்ப்பு குறித்து அரசு இதுவரை அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. கேரள அரசால் எனக்கு ஏற்கனவே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில்தான் இருக்க வேண்டும் என்கிற என் முடிவால், தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கிறேன். எனக்கு வேலைவாய்ப்புத் தருவதாக தமிழ்நாடு அரசும் ஏற்கனவே சொல்லி இருக்கிறது. வரும் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் எண்ணத்தில் நம்பிக்கையோடு எனது பயிற்சியை தொடர்ந்து கொண்டிருக்கிறேன். அரசு எங்களைபோன்ற விளை யாட்டு வீரர்களையும் ஊக்குவித்தால்தான் எதிர்காலத்தில் இந்த விளையாட்டுகளைத் தேடியும் இளம் போட்டியாளர்கள் நம்பிக்கையோடு வருவார்கள்’’ என முடித்தார்.

- மகேஸ்வரி

Tags : India ,
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...