குற்றப் பின்னணி பற்றி பத்திரிகைகளில் விளம்பரம் வேட்பாளர்கள், கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கெடுபிடி

புதுடெல்லி: ‘சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் குறித்த விவரங்களை செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்துவதை aஉறுதி செய்ய வேண்டும்,’ என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் உட்பட 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல், இம்மாதம் 27ம் தேதி முதல் நடக்கிறது. இந்நிலையில், குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் தொடர்பாக அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக அவர்களுக்கு அது எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது: குற்றப் பின்னணி குறித்த விவரங்களை வேட்பாளர்களும், அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிகளும் தேசிய அல்லது உள்ளூர் செய்தித்தாள்களில் விரிவாக விளம்பரப்படுத்த வேண்டும். அதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவுகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும். குறிப்பாக, சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ள மாநிலங்களில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத, பதிவு செய்யப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் தலைமை அலுவலகங்களுக்கு இது தொடர்பான கடிதத்தை மாநில தேர்தல் ஆணையம் கட்டாயம் அனுப்பி வைக்க வேண்டும். மேலும், தேர்தலில் போட்டியிடுபவர் தங்களின் குற்றப் பின்னணி, அவர்களின் கட்சி தொடர்பான முழு விவரங்களையும் செய்தித்தாள்களில் வெளியிடும்போது இடம் பெற வேண்டிய எழுத்தின் அளவு குறித்து உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு பிப்ரவரியில் விரிவான தீர்ப்பை வழங்கியுள்ளது.

அதை கண்டிப்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் கடைபிடிக்க வேண்டும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் மீதான கிரிமினல் வழக்குகள் குறித்த விஷயங்களை செய்தித்தாள்களில் விளம்பரம் செய்தது தொடர்பான விவரங்களை சீலிடப்பட்ட உறையில் வைத்து, சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் அதற்கான காலக்கெடுவுக்குள் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு வேட்பாளர்கள் செய்ய தவறும் பட்சத்தில், தேர்தல் அதிகாரிகள் அதனை உரிய நேரத்தில் அவர்களிடம் இருந்து கேட்டுப் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>