×

40 சீட் கேட்டு மிரட்டல் அதிமுக-பாஜ 3வது கட்ட பேச்சும் தோல்வி: அமமுகவுக்கு உள்ஒதுக்கீடு தர அமித்ஷா முடிவு: எடப்பாடி தொடர் எதிர்ப்பால் தொகுதி பங்கீடு முடிவாவதில் சிக்கல்

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைவர்களுடன், பாஜ தலைவர்கள் நேற்று 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. அமமுகவை சேர்க்க வேண்டும் என்று பாஜவும், அவர்களை கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமியும் பிடிவாதமாக இருப்பதால் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடுகிறவர்கள் வருகிற 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளதால் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக, வழக்கம்போல முன்கூட்டியே வந்து பேச்சுவார்த்தை முடித்து விட்டது. அதன்படி, பாமகவுக்கு 23 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. அதோடு தொகுதிக்கான தேர்தல் செலவாக ‘‘பெரிய தொகை 200’’ வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.  அதைத்தொடர்ந்து பாஜவிடம் அதிமுக பேச்சுவார்த்தையை தொடங்கியது. பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழக தேர்தல் பொறுப்பாளர் கிஷன்ரெட்டி, வி.கே.சிங், சி.டி.ரவி ஆகியோர் சென்னை வந்தனர். அவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின்போது தங்களுக்கு 60 தொகுதிகள் ஒதுக்க வேண்டும்.

அதில் 20 தொகுதிகளை நாங்கள் சசிகலாவுக்கு ஒதுக்க முடிவு செய்துள்ளோம் என்று கூறினர். இதற்கு அதிமுக தலைவர்கள் இருவரும் சம்மதிக்கவில்லை. இருவரும் விடாப்பிடியாக சசிகலாவை கூட்டணியில் சேர்க்க முடியாது. இதை நாங்கள் பிரதமர் மோடியிடம் தெரிவித்து விட்டோம் என்று கூறி விட்டனர். இந்த தகவல் கடந்த சனிக்கிழமை சென்னை வந்த அமித்ஷாவிடம், பாஜ மேலிட பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த அமித்ஷா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்திக்க மறுத்து விட்டார். பின்னர் இருவரும் சேர்ந்து சந்திக்க வேண்டும் என்று மீண்டும், மீண்டும் வலியுறுத்தியதால், தனது டெல்லி பயணத்தை தள்ளி வைத்து விட்டு இருவரையும் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு சந்தித்தார். இந்த சந்திப்பு நள்ளிரவு 1 மணி வரை நடந்தது.
 
அதிமுக பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தபோது அத்வானி முதல் பெரிய பெரிய தலைவர்கள் வரை எல்லோரும் அவரது வீடான போயஸ்கார்டனில்தான் சந்திப்பார்கள். ஆனால், இப்போது அமித்ஷாவை சந்திக்க தமிழக தலைவர்கள் இருவரும் நட்சத்திர ஓட்டலில் காத்து கிடந்தனர். அமித்ஷாவும் அதிமுக கூட்டணியில் சசிகலாவை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மறுத்து விட்டனர். அதற்கு பதில் கூடுதல் தொகுதிகள் வேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறோம். 21 சீட் தருவதாக சொன்னோம். இப்போது 30 சீட் தருகிறோம். உங்கள் சின்னத்தில் அமமுக வேட்பாளர்களை நிற்க வையுங்கள் என்றனர்.

இதனால் 40 சீட் வேண்டும் என்று அமித்ஷா கூறியதோடு, நாங்கள் அமமுகவுக்கு சீட் ஒதுக்கி எங்கள் சின்னத்தில் போட்டியிட வைக்க முயற்சிக்கிறோம். இல்லாவிட்டால் அவர்களை எப்படியாவது கூட்டணியில் சேர்க்க வேண்டும். மக்களவை தேர்தலின்போது, அவர்கள் 52 சட்டப்பேரவை தொகுதியில் கணிசமான வாக்கு பெற்றுள்ளனர். அவர்களை தனியாக போட்டியிட வைத்தால் ஆபத்து என்றார். ஆனால் சசிகலாவை கூட்டணியில் சேர்க்க வேண்டாம். பாஜ சின்னத்தில் போட்டியிட்டால் எங்களுக்கு பிரச்னை இல்லை என்று அதிமுக தலைவர்களும் கூறினர்.

இதனால் அன்று கூட்டணி முடிவாகவில்லை. இந்த நிலையில் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, எம்பிக்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரை நேற்று மாலை 3 மணிக்கு சென்னை, எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர ஓட்ட தமிழக பாஜ தலைவர் எல்.முருகன், பொன் ராதாகிருஷ்ணன், கிஷன்ரெட்டி, வி.கே.சிங், கேசவவிநாயகம் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. இது அதிமுக - பாஜ தலைவர்கள் இடையே நடைபெறும் 3வது சந்திப்பாகும். இந்த சந்திப்பின்போது, 40 தொகுதிகளுக்கான பட்டியலை அதிமுக தலைவர்களிடம் தமிழக பாஜ தலைவர்கள் வழங்கினர். அதில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் 5 சீட், வடமாவட்டங்களில் 5, ெகாங்கு மண்டலத்தில் 5, தென் தமிழகத்தில் 15, மத்திய மாவட்டங்களில் 10 சீட் கேட்டிருந்தனர்.

தென்தமிழகத்தில் விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் அதிக சீட் கேட்டு வருகின்றனர். குறிப்பாக அதிமுகவின் முக்கிய தொகுதியான சேலம், கோவை, திருப்பூர் தொகுதிகளும் அடங்கும். இதனால் அதிமுக தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாஜவினர் பெரும்பாலும் அதிமுக எம்எல்ஏக்கள் தற்போது வெற்றிபெற்றுள்ள தொகுதிகளை கேட்டு வருகின்றனர். இதனால் அதில் ஒரு சில தொகுதிகளை விட்டுக் கொடுக்க விருப்பம் தெரிவித்த தலைவர்கள் பெரும்பாலான தொகுதிகளை தங்களுக்கே வழங்கும்படி கேட்டு வருகின்றனர். அதிமுக சீட் ஒதுக்குவதற்கு பதில் பாஜவிடம் கேட்டு பெறும் நிலை உள்ளதால், பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை.

ஆனாலும் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் இரு கட்சிகளுக்கும் இடையே சுமூகமாகவே இருந்ததாக வெளியில் வந்து தெரிவித்தனர். ஆனால் அமமுக விவகாரத்தில் முடிவு எடுக்கப்படாததால் தொகுதிப் பங்கீடு இன்னும் முடிவடையாமல் உள்ளது. இதனால் மீண்டும் பேச திட்டமிட்டுள்ளனர். அதிமுக- பாஜ இடையேயான பேச்சு வார்த்தை முடிந்து தொகுதிகள் இன்று முடிவாகும் என்று தெரிகிறது.

* சென்னை மற்றும் புறநகர் பகுதியில் 5 சீட், வடமாவட்டங்களில் 5, கொங்கு மண்டலத்தில் 5, தென் தமிழகத்தில் 15, மத்திய மாவட்டங்களில் 10 சீட் பாஜ கேட்கிறது

Tags : AIADMK-BJP 3rd phase talks fail, intimidation for 40 seats: Amitsha decides to allot seats to AIADMK
× RELATED நீங்கள் செய்த பாவங்களுக்கு காங்கிரசை...