கல்லூரி, பள்ளி மாணவர்கள் மறியல், கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் வன்னியர் உள்ஒதுக்கீட்டை கண்டித்து போராட்டம் வெடித்தது

சென்னை: வன்னியருக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசை கண்டித்து, தமிழகத்தில் பல இடங்களில் நேற்று பல்வேறு சமூகத்தினர் போராட்டம் நடத்தினர். கல்லூரி, பள்ளி மாணவர்களும் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  தமிழக அரசு தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவை சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு சமூகத்தினர் தங்களுக்கும் உரிய இடஒதுக்கீடு கோரி போராட்டத்தில் குதித்தனர்.

 

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேட்டில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவுக்கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று, வன்னியருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசை கண்டித்தும். மேலும் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி டி.என்.டி பிரிவினருக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தக் கோரியும், 500க்கும் மேற்பட்டோர் கல்லூரியை புறக்கணித்து,  சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் கமுதி- முதுகுளத்தூர் சாலையில் போக்குவரத்து நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது. போலீசார் சமரசத்துக்கு பின் மனு அளித்து விட்டு, மாணவ, மாணவிகள் கலைந்து சென்றனர்.

உசிலம்பட்டியிலும் மறியல் : இதே கோரிக்கையை வலியுறுத்தி மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி மாணவ, மாணவிகளில் சிலர், நேற்று மதுரை - தேனி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, ‘முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த இடஒதுக்கீடு, எங்களைப் போன்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் சமூகத்தை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எங்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். டிஎன்டி சான்று வழங்க வேண்டும்’ என்றனர்.  சங்கரன்கோவில்: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே இருமன்குளம் கிராமத்தில் முக்குலத்தோர் அமைப்பை சேர்ந்த 800 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீட்டை கண்டித்து அங்குள்ள மரத்தடியில் இவர்களும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் கருப்பு கொடியுடன் திரண்டனர். அவர்கள் தமிழக அரசை கண்டித்தும், வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாகவும் கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் செம்மநாட்டார் தேவர் சமுதாய நலச் சங்கத்தினர் கருப்புக் கொடியேற்றி எதிர்ப்பு தெரிவித்தனர். கழுகுமலை முத்தையன் சேர்வைத் தெரு முழுவதும் கருப்புக் கொடிகளை கட்டி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தொடர்ந்து கழுகுமலை போலீஸாரும், தேர்தல் பறக்கும் படையினரும் சென்று விசாரித்தபோது கொடிகளை அகற்ற யாரும் முன் வராத நிலையில் போலீசாரே கொடிகள் அனைத்தையும் அகற்றினர்.

Related Stories: