×

நாலா பக்கம்: புதுவை - கேரளா - மேற்கு வங்கம் -அசாம்

ரூட்டை மாற்றிய ரங்கசாமி அடைக்கலம் தரும் அமமுக
புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ரங்கசாமியை கழற்றி விட பாஜ கிட்டத்தட்ட முடிவு செய்து விட்டதாக கூறப்படும் நிலையில், அடுத்த கட்ட நகர்வுகளை என்ஆர்  காங்கிரஸ் செய்து வருகிறது. ஆனால், அக்கட்சியில்  தேர்தல் செலவுக்கு பணம் இல்லாததது மிகப்பெரிய குறையாக இருக்கிறதாம். இப்பிரச்னையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல், அக்கட்சி தலைவர்கள் புலம்பிக் கொண்டு இருக்கிறார்களாம்.
 பணப் பிரச்னையை சரிகட்டுவதற்காக, அமமுக.வுடன் ரங்கசாமி  தரப்பு ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசியல் வட்டாரத்தில் தகவல்  உலாவுகிறது.

புதுச்சேரியில் புதிய அணியை உருவாக்கலாம் என அமமுக தரப்பு  பச்சைக்கொடி காட்டியதோடு, மற்ற பிரச்னைகளையும் அமர்ந்து பேசி தீர்த்துக்  கொள்ளலாம் என உறுதி அளித்து இருக்கிறதாம். இதனால். இத்தேர்தலில் பாஜ.வில் ஐக்கியமாகி  தனக்கே வேட்டு வைத்த நமச்சிவாயத்துக்கு எதிராக, புது ரூட்டில் ரங்கசாமி  பயணித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கின்றனர் புதுச்சேரி அரசியல் பார்வையாளர்கள்.

பம்பர் பரிசு அடித்த மகிழ்ச்சியில் இளசுகள்
ஒரு பக்கம் கேரளாவில் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் காங்கிரஸ் மும்முரமாக இருந்தாலும், மறுபுறம் வெற்றி வாய்ப்பு, தொகுதியின் கள நிலவரம் உள்ளிட்ட இதர விவரங்களையும் திரட்டி வருகிறது. இதனால், பெண்கள், புது முகங்களுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. அதிலும், பெரும்பாலான தொகுதிகளில் 50 வயதுக்கு குறைந்தவர்களேயே வேட்பாளராக நிறுத்தவும் காங்கிரஸ் ஆலோசித்து வருவதால், தங்களுக்கு சீட்’ கிடைக்காது என்று காங்கிரஸ் பெரிய தலைகள் இப்போதே முணுமுணுக்க தொடங்கி விட்டனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒரு பெண் வேட்பாளர், 40 வயதுக்குட்பட்ட 2 வேட்பாளர்களை களமிறக்க காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளது. பாஜ.வில் 70 வயது கடந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படுவது இல்லை. ஆனால், காங்கிரசில் 50 வயதிலேயே வாய்ப்பு கொடுக்கப் போவதில்லை என்பது, அக்கட்சி இளம் வட்டங்களுக்கு பம்பர் பரிசு அடித்தது போல் இருக்கிறதாம்.

புதியன வருதலும்... பழையன கழிதலும்..
கடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜ.வுடன் கூட்டணி அமைத்திருந்தது போடோலாந்து மக்கள் முன்னணி (பிபிஎப்). குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்ட விரிசல், போடோலாந்து பிராந்திய கவுன்சில் தேர்தலில் பெரும் மனக்கசப்பாக மாறியது. இதனால், யுபிபிஎல் என்கிற சுதந்திர ஐக்கிய மக்கள் கட்சியுடன் சேர்ந்து ஆட்சியைப் பிடித்தது பாஜ. பழைய நிகழ்வுகளை மறந்து சட்டசபை கூட்டணிக்கு அழைப்பார்கள் என்று காத்திருந்தது பிபிஎப். ஆனால், ‘வாய்ப்பில்ல ராஜா’ என்று பாஜ தெளிவாகக் கூறிவிட்டது. இதன் பிறகே, காங்கிரஸ் கூட்டணியில் இணைந்துள்ளது பிபிஎப்.

இக்கட்சியை பாஜ அலட்சியமாக டீல் பண்ணியதற்கு காரணம் இல்லாமல் இல்லை. போடோலாந்து பிராந்தியத்தில் வாக்கு வங்கி உள்ள கட்சியாக யுபிபிஎல் வளர்ந்து வருகிறது. ஞான சுரக்ஷா கட்சியும் இங்கு அறிமுகமான கட்சியாக உள்ளது. இந்த நம்பிக்கையிலேயே பிபிஎப் நமக்கு அவசியம் இல்லை என்று பாஜ கழட்டி விட்டுள்ளது.

வாழ வைத்த வீட்டுக்கே உலை வைக்கும் நல்லவர்
மேற்கு வங்கத்தில் இழந்து போன தனது செல்வாக்கை நிலைநாட்ட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டின் இடது முன்னணியுடன் கூட்டணி அமைத்துள்ளது காங்கிரஸ். ‘மதச்சார்பற்ற கூட்டணி’ என கூறப்பட்டு வரும் இதில், இஸ்லாமிய மதத் தலைவரான அப்பாஸ் சித்திக்கின் ‘இந்திய மதச்சார்பற்ற முன்னணி’யுடன் (ஐஎஸ்எப்) கூட்டணி அமைத்துள்ளது காங்கிரஸ். அதோடு, தனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் சிலவற்றையும் இக்கட்சிக்கு கொடுத்து, இஸ்லாமியர்கள் வாக்கை பெற வியூகம் வகுத்துள்ளது. காங்கிரசின் 23 அதிருப்தி தலைவர்கள் குழுவை சேர்ந்தவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா, காங்கிரசின் இந்த முடிவை கடுமையாக சாடியுள்ளார்.

‘காந்தி, நேருவின் மதச்சார்பற்ற நிலைக்கு எதிராக செயல்படுவதா?,’ என வெளிப்படையாகவே குற்றம்சாட்டியது, கட்சி தலைமைக்கு சங்கடத்தை அளித்துள்ளது. இதனால் கொந்தளித்துள்ள இம்மாநில காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, ‘ஆனந்த சர்மா ஜி... உண்மை தெரியாமல் உளறாதீர்கள். மேற்கு வங்கத்தில் பாஜ,வின் பிரிவினை, மதவாத அரசியலை வீழ்த்த காங்கிரஸ் போராடுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்,’ என்று பதிலடி கொடுத்துள்ளார். ‘தேர்தல் நேரத்தில் தன்னை வாழ வைத்த வீட்டுக்கே உலை வைக்க பார்க்கிறாரே சர்மா,’ என காங்கிரசார் நொந்து போயுள்ளனர்.

Tags : Nala ,Kerala ,West Bengal ,Assam , Nala Page: New - Kerala - West Bengal - Assam
× RELATED சந்தேஷ்காலி விவகாரம் சிபிஐ...