மாநிலத்தில் இதுவரை 8.25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுள்ளனர்: சுகாதாரத் துறை தகவல்

பெங்களூரு: மாநிலத்தில் இதுவரை 8.25 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக அரசு சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் முதல் உலக மக்கள் அனைவரும் கொரோனா தொற்றில் சிக்கி தவித்து வருகின்றனர். தற்போது இதில் இருந்து தப்பிக்க தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. முதல்கட்டமாக கொரோனா வாரியர்களுக்கு போடப்பட்டது. தற்போது இரண்டாம் கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேல் நோய் வாய் பட்டவர்களுக்கும் கடந்த 1-ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதற்கு ஆர்வமுள்ளவர்கள் தங்களின் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளுடன் பதிவு செய்து தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம். மேலும் ஒரு தடுப்பூசியின் விலை ரூ.250 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் அதிக பணம் வசூலிக்கும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மாநிலத்தில் இதுவரை சுமார் 8.25 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 1ம் தேதி மாநிலம் முழுவதும் 199 மருத்துவமனைகளில் 60 வயதுக்கு மேற்பட்டபவர்கள் 2264 பேருக்கும், 45 வயதுக்குமேற்பட்ட நோய்வாய் பட்டவர்கள் 624 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 6,760 பயனாளிகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்துடன் நேற்று  82 அமர்வு தளங்களில் தடுப்பூசி போடப்பட்டது. இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்தி, அவரது மனைவி சுதா மூர்த்தி, மற்றொரு கோஃபவுண்டர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன், உள்ளிட்டோர் தடுப்பூசியை போட்டுக்கொண்டனர்.

* முதல் தடுப்பூசி

மாநிலத்தில் 1ம் தேதி பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் மணிப்பால் தனியார் மருத்துவமனையில் ராமசாமி பார்த்தசாரதி (97 வயது) முதியவர் முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்டார். தொடர்ந்து திங்கள்,புதன்,வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனையில் அனைத்து நாட்களிலும் தடுப்பூசி போடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>