×

விமான நிலையத்தில் சந்திரபாபு தர்ணா: ஆந்திராவில் பரபரப்பு

திருமலை: சித்தூரில் ஆளும்கட்சியை கண்டித்து நடைபெறும் போராட்டத்திற்கு வந்த எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபுவை விமான நிலையத்தில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர் தர்ணாவில் ஈடுபட்டார். ஆந்திராவில் கிராம பஞ்சாயத்து தலைவர், ஜில்லா மற்றும் மண்டல பரிஷத் தேர்தல்கள் நடந்து முடிந்தது. நகராட்சி, மாநகராட்சி தேர்தல் வரும் 10ம்தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், பல இடங்களில் ஆளும் கட்சியினர், எதிர்க்கட்சி வேட்பாளர்களை மிரட்டி போட்டியின்றி தேர்வு செய்வதாகவும், சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும் கூறி சித்தூர் காந்தி சிலை முன்பு நேற்று தெலுங்கு தேசம் கட்சி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. ஆனால் கொரோனா மற்றம் தேர்தல் நடப்பதால் போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

இதற்கிடையில் இதில் பங்கேற்க தெலுங்குதேசம் கட்சி தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சந்திரபாபு தெலங்கானா மாநிலம் ஐதராபாத் விமான நிலையத்திலிருந்து திருப்பதி அடுத்த ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு நேற்று காலை வந்தார். அவரை அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி, போராட்டத்திற்கு அனுமதியில்லாததால் மீண்டும் ஐதராபாத் செல்லும்படி கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சந்திரபாபு விமான நிலையத்திலேயே தர்ணாவில் ஈடுபட்டார். அவரை போலீசார் சமாதானம் செய்தனர்.

அதற்கு சந்திரபாபு, ‘மாநில அரசின் அராஜக போக்கை உலகம் அறிய வேண்டும். நான் 14 ஆண்டுகள் முதல்வராக இருந்திருக்கிறேன். என்னை ஏன் தடுக்கிறீர்கள் என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து இரவு 7.30 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்ட சந்திரபாபு பின்னர் ஐதராபாத்துக்கு விமானத்தில் சென்றார். இதையறிந்த அவரது கட்சியினர் ஏராளமானோர் விமான நிலையத்திற்கு விரைந்து வந்தனர். அவர்களை போலீசார் கைது செய்வோம் எனக்கூறி எச்சரித்தனர். ஆனால் அவர்கள் சந்திரபாபு சென்றபிறகு கலைந்து சென்றனர்.

Tags : Chandrababu ,Andhra , Chandrababu Dharna at the airport: Tensions in Andhra Pradesh
× RELATED முதல்வர் ஜெகன் மோகன் தாக்கப்பட்ட...