×

வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பை முழுமையாக முடிக்காமல் உள்ஒதுக்கீடு வழங்க கூடாது. தேர்தல் நேரத்தில் அரசியல் லாபத்துக்காக உள்ஒதுக்கீடு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ள 20% இடஒதுக்கீட்டில் 10.5% உள்ஒதுக்கீடு வழங்கி கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் தற்காலிக சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து தென்னாடு மக்கள் கட்சி நிறுவனர் கணேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். அதில் மிகவும் பிற்ப்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 20% இடஒதுக்கீட்டில் வன்னியர், வன்னிய கவுண்டர், வன்னியர்குல சாஸ்திரியர் என 7 பிரிவினருக்கு 10.5% வழங்கி சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். ஜாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு பணிகள் துவங்கியுள்ளதால் 6 மாதங்களுக்கு தற்காலிகமாக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளதாகவும் ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிக்காமல் எப்படி இந்த சட்டம் இயற்றப்பட்டது எனவும் அவர் மனுவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20% இடஒதுக்கீட்டில் சீர் மரபினருக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கி வரும் நிலையில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்டுள்ள பிரிவுகளில் உள்ள 22 ஜாதிகளுக்கு வெறும் 2.5% இடஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உண்மையிலேயே வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அதனை முன்கூட்டியே செய்திருக்க வேண்டும் எனவும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியல் லாபத்திற்காக இந்த சட்டம் இயற்றப்பட்டதாகவும் மனுவில் சுட்டிக்காட்டி இருக்கிறார். இந்த சட்டத்தின் அடிப்படையில் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என உத்தரவிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Icort ,Vannians , Vanniyar, highCourt, case, subdivision
× RELATED வன்னியர்கள் இடஒதுக்கீடு தொடர்பாக...