×

வன்னியர் சமூகத்தினருக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு: தங்களுக்கும் இட ஒதுக்கீடு கோரி பல்வேறு சமூகத்தினர் போராட்டம்

தேனி: மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் வன்னியர் சமூகத்தினருக்கு மட்டும் உள் ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. வன்னியர் சமுதாயத்தினருக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சமீபத்தில் தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தங்களது சமூகத்திற்கு இட ஒதுக்கீடு வழங்க கோரியும் பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சீர் மரபினர் உட்பட 68 சமுதாய மக்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கம் கல்லூரி மாணவர்கள் மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.

வன்னியர் சமூகத்தினருக்கு அளிக்கப்பட்டுள்ள உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம் கமுதியிலும் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இருமன்குளம் கிராமமக்கள் 500 பேர் முக்குலத்தோர் சமுதாய மக்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கறுப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20% இட ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி இருப்பதாக குற்றம் சாட்டி நெல்லையில் வழக்கறிஞர்களும் ஆர்ப்பாட்டம் செய்தனர். வன்னியர் சமுதாயத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள உள் ஒதுக்கீட்டை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று பல்வேறு சமூகத்தினரும் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர். தவறினால் சட்டமன்ற தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் எச்சரித்தனர்.

Tags : Vannier , Reservation
× RELATED பாமக செயற்குழு கூட்டம்