×

வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் விழிப்புணர்வின்றி அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்: ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல்கள்

வேலூர்: நமது நாட்டில் திருமண வயது நிரம்பாத சிறுவர், சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் கலாசாரம் பெரும் சாபக்கேடாக உள்ளது. சிறு  வயது திருமணம் என்பது மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. உலகில் நடைபெறும் திருமணங்களில், மூன்றில் ஒரு பங்கு குழந்தைத்  திருமணமாகும் என்று யுனிசெப் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நம் நாட்டில் சிறுவர் திருமணத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக  மாநில அரசுகள் மூலம் குழந்தை திருமணங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

குழந்தைத் திருமணத்துக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது என்னவெனில், வறுமை, போதிய கல்வியறிவு இல்லாமை, பெண் குழந்தைகளை குடும்ப  சுமையாகக் கருதுவது போன்றவைதான். இளவயது திருமணங்களைத் தவிர்க்க பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. தமிழகத்தைப்  பொருத்தவரை சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர் போன்ற மாவட்டங்களில் குழந்தைத் திருமணங்கள் அதிகளவில்  நடைபெறுகின்றன. திருவண்ணாமலை மாவட்டத்தைப் பொருத்தவரை திருவண்ணாமலை, செங்கம், தண்டராம்பட்டு, கலசப்பாக்கம், போளூர், செய்யாறு,  வந்தவாசி, ஆரணி ஆகிய பகுதிகளில்தான் அதிகளவில் குழந்தைத் திருமணங்கள் நடைபெறுகின்றன.

குழந்தைத் திருமணங்கள் எங்கு நடைபெற்றாலும், அந்த இடத்துக்கு சமூகநலத் துறை அதிகாரிகள் விரைந்து சென்று பெற்றோர்களுக்கு அறிவுரைகள்  கூறி, குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்தி வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 468 குழந்தைத் திருமணங்கள் தடுத்து  நிறுத்தப்பட்டுள்ளன. சமூகநலத் துறை, குழந்தைகள் பாதுகாப்பு மையம், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு ஆகியவை இணைந்து குழந்தைத்  திருமணத்தை தடுத்து நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன. என்னதான் அதிகாரிகள் பெற்றோரிடம் அறிவுரைகள் கூறினாலும், திருவண்ணாமலை  மாவட்டத்தில் எங்காவது ஒரு கிராமத்தில் இன்னமும் குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன என்று ஆய்வுகள்  கூறுகின்றன.

குழந்தைத் திருமணத்தைத் தடுக்க வேண்டுமெனில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதேபோல் பள்ளிகளிலும் இதுகுறித்த  விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். உரிய வயதை அடைந்தவுடன்தான் (21 வயது) திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது குறித்து  குழந்தைகளுக்கு விளக்க வேண்டும். தங்களது பெண் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்துவைக்கும் பெற்றோருக்கு கவுன்சலிங்  வைக்க வேண்டும்.அனைவரும் முழு ஒத்துழைப்பு தந்தால் மட்டுமே குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்த முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து. பதின்  பருவத்தில் அதாவது 19 வயதுக்கு முன் ஒரு பெண் கருவுற்றால், அதை ”டீன் ஏஜ்’ கர்ப்பம் என்கிறோம்.

இந்தியா போன்ற நாட்டில் இளம் வயது கர்ப்பம் நிகழ பல காரணங்கள் உள்ளன. முதலில், ஒரு பெண் பருவம் அடைந்த உடனேயே அவள்  திருமணத்துக்குத் தயாராகிவிட்டாள் என்ற எண்ணத்தில் சிறு வயதிலேயே திருமணம் செய்கின்றனர். இரண்டாவது, போதுமான கல்வியறிவு   இல்லாமல் குழந்தைப்பேறு என்பதும், தகவல் அறிவு இல்லாதது போன்றவை மூன்றாவது காரணமாகவும் சொல்லப்படுகிறது.உடல்நலம் சார்ந்த பிரச்னைகள், மனநலம் சார்ந்த பிரச்னைகள், சமூகம் சார்ந்த பிரச்னைகள் என மூன்று விதங்களில் இளம்வயது கர்ப்பம்  பெண்களைப் பெரிதும் பாதிக்கிறது. அதுவும் குழந்தை பெற்ற பிறகு வரக்கூடிய அழுத்தம் இன்னும் அதிகமாகிறது. தன்னையும் பார்த்துக் கொள்ள  வேண்டும், குழந்தையையும் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்ற மனவேதனையை பெண்களுக்கு அதிகம் கொடுக்கும் எனச் சில ஆய்வுகள்  தெரிவிக்கின்றன.

சிறு  வயதில் கர்ப்பம் அடைவது இளம் பெண்களுக்குப் பிரச்னைகளைத் தருவதோடு அவர்கள் பெற்றெடுக்கும் குழந்தைக்கும் சிக்கல்களை ஏற்படுத்தும்.  குழந்தை குறைந்த எடையுடன் பிறக்கும். ஏனெனில், முழுமையான வளர்ச்சி அடையாத நிலையில் இளம் வயதுப் பெண்கள் கர்ப்பம் தரிக்கும்போது  கர்ப்பத்தை ஒட்டி நிகழக்கூடிய எடை அதிகரிப்பு அவ்வளவாக நடக்காது. ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ரத்த சோகை போன்ற சிக்கல்கள் வரலாம்  என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.சிறுவயதில் திருமணம் ஆகும் பெண்களின் உடல் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படும். சமுதாயத்தில் உரிய அந்தஸ்து, அதிகாரம், அறிவு முதிர்ச்சி  போன்றவை இல்லாமல் சிறுவயதிலேயே திருமண பந்தத்துக்கு உள்ளாகும் பெண்கள் பெரும்பாலும் வீட்டில் வன்முறைக்கு உள்ளாகின்றனர். மேலும்,  பாலியல் துன்புறுத்தலாலும் சமுதாயத்தில் தனிமைபடுத்தப்பட்டும் வருந்துகிறார்கள். சிறு வயது திருமணத்தால் சிறுமிகளுக்கு கல்வியும்,  பொருத்தமான வேலைவாய்ப்பும் மறுக்கப்படுகிறது. இதனால், அவர்கள் தொடர்ந்து வறுமையில் வாட வேண்டிய சூழல் உருவாகிறது.

 சிறு வயதில் நடைபெறும் திருமணத்தினால் முழு உடல் வளர்ச்சி பெறாத நிலையில் தாயும், சேயும் மகப்பேறின்போது இறக்கும் சதவீதம் மிக  அதிகமாக உள்ளது. குழந்தைத் திருமணத்தை நடத்தி வைக்கும் பெற்றோர், பாதுகாவலர்கள், மாப்பிள்ளை திருமணத்தை நடத்தும் புரோகிதர், பூசாரி, திருமணத்தில்  பங்கேற்றவர்கள் நண்பர்கள், அக்கம்பக்கத்தினர், திருமணத்தை முன்னின்று நடத்தும் சமுதாயத் தலைவர்கள், நிச்சயித்த நபர்கள், அமைப்புகள்,  தரகர்கள், சமையலாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகிய அனைவரும் குழந்தைத் திருமண தடை சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்தவர்களாகக்  கருதப்படுவார்கள். தவறு புரிந்தவர்களுக்கு ஜாமீனில் வெளிவர முடியாதபடி இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அல்லது 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.  மொத்தத்தில் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்த முடியும்.

3 ஆண்டுகளில் 1,458 திருமணம் தடுத்து நிறுத்தம்
கடந்த 3 ஆண்டுகளில் 2020ம் ஆண்டு டிசம்பர் வரை சேலம், தர்மபுரி, சென்னை, திண்டுக்கல், ராமநாதபுரம், திருவள்ளுர், திருவண்ணாமலை, திருச்சி,  வேலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 1,458 குழந்தைகள் திருமண வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக திருநெல்வேலி  சுற்றுவட்டாரப் பகுதியில் அதிகமான வழக்குகள் பதிவாகின்றன.

Tags : Vallur ,Tiruvannalayan , Child marriages on the rise in Vellore and Thiruvannamalai districts without awareness: shocking information at the end of the study
× RELATED வல்லூர் அனல் மின்நிலைய தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்