இரு மாநில எல்லை சோதனைச்சாவடியில் கரும்பு லாரியை எதிர்பார்த்து காத்திருக்கும் ஒற்றை யானை: வாகன ஓட்டிகள் அச்சம்

சத்தியமங்கலம்:  காரப்பள்ளம் வன சோதனைச்சாவடியில் கரும்பு லாரியை எதிர்பார்த்து காத்திருக்கும் காட்டு யானையால் வாகன ஓட்டிகள்  அச்சமடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனப்பகுதியில் யானைகள்  அதிகளவில் வசிக்கின்றன. தமிழகம்-கர்நாடக  மாநிலத்தை இணைக்கும் முக்கிய  வழித்தடமாக உள்ள சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் யானைகள்  தீவனம் மற்றும் குடிநீர்  தேடி அடிக்கடி சாலையை கடந்து செல்வது வழக்கம்.  

தற்போதுல வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுகிறது. கர்நாடகத்தில் இருந்து  கரும்பு  பாரம் ஏற்றிய லாரிகள் அதிக பாரம் காரணமாக சாலையோரத்தில்  வீசியெறியும் கரும்புதுண்டுகளை காட்டு யானைகள் சாப்பிட்டு பழகியதால், சில   யானைகள் கரும்பு லாரியை எதிர்பார்த்து தேசிய நெடுஞ்சாலையில் சாலையில்  சுற்றித்திரிகின்றன. இதில் ஒற்றை ஆண் யானை ஒன்று தினமும்  காரப்பள்ளம் வன  சோதனைச்சாவடி பகுதியில் பகல் நேரத்தில் முகாமிட்டு கரும்பு லாரியை  எதிர்பார்த்து நிற்கிறது. அதிக உயரம் பாரம் ஏற்றும்  லாரியை கட்டுப்படுத்த  அமைக்கப்பட்ட உயரத்தடுப்பு கம்பி அருகே யானை நகராமல் நிற்பதால், வாகன  ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.

இந்நிலையில், நேற்று மதியம் சோதனைச்சாவடி வந்த ஒற்றை  ஆண் யானை நீண்ட நேரமாக கரும்பு லாரியை எதிர்பார்த்து காத்திருந்தது.   யானையை பார்த்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வாகனங்களை இயக்காமல்  நிறுத்தினர். சோதனைச்சாவடியில் பணியில் இருந்த  வனத்துறையினர் வாகன  ஓட்டிகளிடம் யானை தொந்தரவு செய்யாமல், அமைதியாக நிற்பதால், தொடர்ந்து  செல்லுமாறு அறிவுறுத்தினர்.

Related Stories:

>