×

கூடலூரில் இரண்டு வாரமாக குடிநீர் சப்ளை ‘கட்’ காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்

கூடலூர்: கூடலூரில் குடிநீர் கேட்டு, பெண்கள் காலிக்குடங்களுடன் தெருவை மறித்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.கம்பம் அருகே, இரண்டாம் நிலை நகராட்சியான கூடலூரில் 21 வார்டுகள் உள்ளன. இவ்வூர் பொதுமக்களுக்குலோயர்கேம்ப் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், லோயர்கேம்ப் நீரேற்று நிலையத்தில் மின்மோட்டார்  பழுதால், கடந்த சில தினங்களாக கூடலூரில் குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நகரில் 18 மற்றும் 19 வார்டுகளில் உள்ள வடக்கு  ரத வீதி, ஆசாரிமார் தெருக்களில், கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் இல்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில்,  பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக குடிநீர் வழங்கக் கோரி, அப்பகுதி பெண்கள் நேற்று தெருச்சாலை சந்திப்பில் காலிக்குடங்களுடன், கற்களையும்  வைத்து, தெரு வழியாக வாகனங்கள் செல்லாதவாறு பாதையை மறித்து போராட்டம் நடத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நகராட்சி  ஆணையர் ஆறுமுகம், பொறியாளர் ராமசுப்பிரமணியன், கூடலூர் இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் ஜெயராஜ் ஆகியோர் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதில், அப்பகுதிக்கு விரைவில் குடிநீர் சப்ளை செய்யப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து, பெண்கள் கலைந்து சென்றனர்.

இது குறித்து நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம் கூறுகையில், ‘லோயர்கேம்ப் நீரேற்று நிலையத்தில் மின்மோட்டார் பழுதால், கடந்த சில தினங்களாக  4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இப்பகுதிக்கு தண்ணீர் வரவில்லை என்கின்றனர். பொதுமக்களின் நலன்  கருதி உடனடியாக குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீரேற்று நிலையத்தில் பழுது சீரமைக்கப்பட்ட உடன் வழக்கம்போல்  தொடர்ந்து குடிநீர் சப்ளை செய்யப்படும்’ என்றார்.



Tags : Güdallur , Drinking water supply cut off for two weeks in Cuddalore Stir in women with calves
× RELATED நீலகிரி மாவட்டம் கூடலூரில் 4 பேரை...