×

போட்டியிட விருப்ப மனு அளித்த தேமுதிகவினரிடம் 6ம் தேதி முதல் நேர்காணல்: விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேர்காணல் குறித்து அறிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தொகுதிகளில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து கடந்த 25ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டு வருகிறது. வருகிற 5ம் தேதி மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது. ஆனால், விருப்ப மனு அளிக்க தொடங்கிய நாளன்று கூட்டம் காணப்பட்டது. அதன் பிறகு போட்டியிட தொண்டர்களிடையே ஆர்வம் இல்லாத நிலை தான் நீடித்து வந்ததாக கூறப்படுகிறது. பெயரளவுக்கு வந்து தான் விருப்ப மனுக்களை ஒரு சிலர் வாங்கி சென்றுள்ளனர்.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் குறிப்பிட்ட சில தொகுதிகளுக்கு மட்டும் தான் கட்சியினர் விருப்ப மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலான தொகுதிகளில் போட்டியிட யாரும் விருப்ப மனுவை அளிக்கவில்லை. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 234 பேர் கூட விருப்ப மனு அளிக்கவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. விஜயகாந்த் செல்வாக்குடன் இருந்தபோது விருப்ப மனு தாக்கலின் போது கட்சி அலுவலகம் முழுவதும் வாகனங்களாக காணப்படும். அந்த வழியாக செல்லவே முடியாத அளவுக்கு கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால், அந்த நிலை தற்போது மாறியுள்ளது. குறைவானவர்கள் வந்து செல்வதை பார்த்து உண்மையான தேமுதிக தொண்டர்கள் கடும் மனவருத்தத்தில்  இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் விருப்ப மனு அளித்தவர்களிடம் இருந்து வருகிற 26ம் தேதி முதல் நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிவிப்பு: நடைபெறவுள்ள 2021 தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் தேமுதிக தலைமை கழகத்தால் நேர்காணல் வருகிற 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெறும். 6ம் தேதி(சனிக்கிழமை) காலை 10.35 மணிக்கு கோவை, நீலகிரி, ஈரோடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, இராமநாதபுரம், தேனி. மதியம் 2 மணி- கரூர்,  புதுக்கோட்டை, சிவகங்கை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர். 7ம் தேதி(ஞாயிற்றுகிழமை) காலை 9 மணிக்கு தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், திருப்பூர், நாமக்கல், கள்ளக்குறிச்சி. மதியம் 2 மணி- தஞ்சாவூர், சேலம், திருச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், செங்கல்பட்டு. 8ம் தேதி(திங்கள் கிழமை) காலை 9 மணி- மதுரை, திண்டுக்கல், தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், மதியம் 2 மணி- திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னைக்கும் நேர்காணல் நடைபெறும்.

Tags : Tehmārī ,Vijayakanth , dmdk , Optional Petition, Vijayakant, Notice
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு போலீஸ்...