×

ஜிஎஸ்டியை கண்டித்து 5ம் தேதி முதல் நாடு தழுவிய ‘ஸ்டிரைக்’: அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு அறிவிப்பு

புதுடெல்லி: வெளிநாட்டு இ-வர்த்தக நிறுவனங்களின் ஜிஎஸ்டி திருத்தங்கள் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக வரும் மார்ச் 5ம் தேதி முதல் நாடு  தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்த அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு,  சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) சிக்கல் போன்வற்றை எதிர்த்து அகில இந்திய வர்த்தகர்  கூட்டமைப்பு (சிஏஐடி) கடந்த பிப். 26ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தியது. இந்நிலையில், வெளிநாட்டு இ-வர்த்தக  நிறுவனங்களின் ஜிஎஸ்டி திருத்தங்கள் மற்றும் முறைகேடுகளை கண்டித்து வரும் மார்ச் 5ம் தேதி முதல் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம்  நடத்தவுள்ளதாக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘வரும் மார்ச் 5ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி வரை வெளிநாட்டு இ-வர்த்தக  நிறுவனங்களின் ஜிஎஸ்டி திருத்தங்கள் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும். புதிய திருத்தங்களால் சுமார் 8  கோடி வர்த்தகர்கள் பாதிக்கப்படுவர். ஜிஎஸ்டி விதிகள் மற்றும் இ-வர்த்தகம் ஆகியவற்றால் இந்திய வர்த்தகர்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த சிக்கல்களைத் தீர்க்க வேண்டும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லாவிட்டால் தங்கள் நிறுவனங்களை மூட வேண்டிய கட்டாயத்திற்கு  தள்ளப்படுவர்’ என கூறப்பட்டுள்ளது.

Tags : All India Chamber of Commerce , GST
× RELATED தூத்துக்குடியில்இந்தியா-கானா வர்த்தகபரிமாற்ற கருத்தரங்கு