×

நமது முதல்வர் விஜயகாந்த், சின்னம் முரசு என்று திடீர் அறிவிப்பு: தேமுதிக தனித்து போட்டியா?: எல்.கே.சுதீஷின் பேஸ்புக் பதிவால் பரபரப்பு: அதிமுகவை மிரட்ட பதிவிட்டாரா? பரபரப்பு தகவல்

சென்னை: ‘‘நமது முதல்வர் விஜயகாந்த், சின்னம் முரசு’’ என்று எல்.கே.சுதீஷ் தனது பேஸ்புக்கில் திடீரென பதிவிட்டுள்ளார். இதனால்  சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட போகிறதா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் அதிமுகவை மிரட்டுவதற்காக  இதுபோன்று பதிவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவுக்கு 4  தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதுவும் கேட்டதை வழங்கவில்லை. இதுதான் தோல்விக்கு முக்கிய காரணம்  என தேமுதிக குற்றம் சாட்டியது.  தேர்தலுக்கு பிறகு கேட்ட மாநிலங்களவை எம்பி பதவி வழங்கவில்லை என்றும் தேமுதிகவினர், அதிமுக மீது கடும் கோபத்தில் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தொடர வேண்டும் என்றால் ஜெயலலிதா இருந்தபோது ஒதுக்கிய 41  தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.

அதிர்ச்சியடைந்த அதிமுக அவர்களை கண்டுகொள்ளவில்லை. ஆனால், பாமக, பாஜவுடன் பலகட்ட பேச்சு நடத்தினர். பெயரவுக்கு கூட அவர்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இதனால் கோபமடைந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா, ‘‘விரைவில் அழைத்து பேசவில்லை என்றால் தனித்து  போட்டியிடவும் தயங்க மாட்டோம்’’ என்றார். இதற்கும் அதிமுக அடிபணியவில்லை. இந்நிலையில், கூட்டணியில்  பாமகவுக்கு 23 தொகுதிகளை  அதிமுக ஒதுக்கியது.

மேலும், திடீரென அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் 2 நாட்களுக்கு முன்சாலிகிராமம்   இல்லத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினர். சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாகவும் தொகுதி பங்கீடு தொடர்பாகவும் இரண்டு  கட்சியினரும் பேசினர். தேமுதிக தரப்பில் விஜயகாந்த் கூட்டணி தொடர்பாக தனது கருத்தை தெரிவித்தார். அப்போது, பாமகவுக்கு 23  தொகுதிகொடுத்து உள்ளீர்கள். எங்களுக்கு 20 தொகுதி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு அமைச்சர்கள், ‘‘விஜயகாந்த் பிரசாரத்துக்கு  வந்தால் 14 தொகுதிகள். இல்லாவிட்டால் 10 தொகுதிகள் என்று கறாராக கூறி விட்டனர். உங்கள் முடிவை விரைவில் சொல்லுங்கள் என சொல்லி  விட்டு திரும்பினர். இதனால், விஜயகாந்த் அதிர்ந்து போனார்.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடிக்கு அவரது ஆலோசனை குழுவான எஸ்எம்எஸ் டீம் தேமுதிகவின் நிலை குறித்து ஒரு அறிக்கை ெகாடுத்தது.  அதில் தேமுதிகவுக்கு செல்வாக்கு மிக குறைவாக உள்ளது. அதிக தொகுதி ஒதுக்க வேண்டாம் என்றது. அதே நேரத்தில் தேமுதிகவினர் முதல்வரிடம்  பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தேமுதிக தரப்பில் 3 கோரிக்கைகள் வைக்கப்பட்டது. அதில் ஒரு ராஜ்யசபா எம்பி பதவி வேண்டும். விரும்பும்  தொகுதிகளை ஒதுக்க வேண்டும். தேர்தல் செலவுக்கு பணம் தர வேண்டும் என்பதுதான் அந்த கோரிக்கை. இதை கேட்டு முதல்வர் 10 தொகுதிகள்  தருகிறோம். ராஜ்யசபா எம்பி சீட்டை தேர்தலுக்கு பின் பார்க்கலாம்.

தேர்தல் செலவு தொடர்பாக அமைச்சர் தங்கமணியை போய் பாருங்கள் என கூறிவிட்டார். இதைதொடர்ந்து, தேமுதிகவினர் அமைச்சர் தங்கமணியை  நேற்று முன்தினம் இரவு சந்தித்து பேசினர். அப்போது தேமுதிகவினர் கேட்ட செலவு பணத்தை கொடுக்க முடியாது. குறைவான பணத்தை தருவதாக  அமைச்சர் தங்கமணி கூறியதாக கூறப்படுகிறது. கேட்ட பணம் கிடைக்காததால் இறுதியான பதில் எதுவும் சொல்லவில்லை. மீண்டும் இன்று(நேற்று)  வருவதாக சொல்லி விட்டு சென்றனர். ஆனால் நேற்று பேச்சுவார்த்தைக்கு தேமுதிகவினர் வரவில்லை. இதனால் பேச்சுவார்த்தை ரத்தானது. இந்த  நிலையில் தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் நேற்றிரவு ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அதில், ‘‘நமது முதல்வர் விஜயகாந்த், நமது கொடி என்று தேமுதிகவின் கட்சி கொடியையும், நமது சின்னம் முரசு சின்னம்” என்றும் பதிவிட்டிருந்தார்.  இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக தனித்து போட்டியிட போகிறதா? என்ற கேள்வி உருவானது. அதே நேரத்தில் எல்.கே.சுதீஷ்  ஏதாவது ஒன்றை பதிவிடுவார். பின்னர் அவரே அதை நீக்கி விடுவார் இதனை வழக்கமாக எல்.கே.சுதீஷ் கொண்டுள்ளார் என்று அதிமுக தரப்பில்  கருத்து தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் அதிமுகவை மிரட்டுவதற்காக தான் சுதீஷ் இவ்வாறு செய்திருக்கலாம் என்றும் ஒரு தகவல்  வெளியாகியுள்ளது. அதாவது, தங்களது கோரிக்கைக்கு அதிமுகவை அடிபணிய வைக்க இது போன்று அவர் செய்திருக்கலாம் என்றும் ஒரு தகவல்  கூறப்படுகிறது.

Tags : Chief Minister ,Vijayakanth ,Murasu ,Temutika , Chief Minister Vijayakand, Facebook, excitement
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...