×

மாரி குப்பம்- பெங்களூரு ரயில்களை இயக்க வேண்டும்: தினப்பயணிகள் சங்கம் கோரிக்கை

தங்கவயல்: கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டுள்ள மாரி குப்பம்-பெங்களூரு ரயில்களை  நம்பி உள்ள ஆயிரக்கணக்கான தினசரி பயண தொழிலாளர்களின் வாழ்வாதார நலன் கருதி மீண்டும் ரயிலை இயக்க வேண்டும்’ என்று டாக்டர் அம்பேத்கர் தினசரி ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் முத்துமாணிக்கம்  தலைமையில் நிர்வாகிகள்  தென்மேற்கு ரயில்வே பிரிவு மேலாளருக்கு மனு வழங்கி உள்ளனர். அந்த மனுவில்,”தங்கவயல் தங்க சுரங்கம் மூடப்பட்ட பிறகு, வேலை இழந்த சுரங்க தொழிலாளர்களும், அவர்களின் குடும்பத்தினரும் சுமார் பதினைந்தாயிரம் பேர் தினசரி ரயில் மூலம் பெங்களூரு சென்று பணியாற்றி விட்டு இரவு வீடு திரும்புகின்றனர். மாரிகுப்பம், சாம்பியன், உரிகம்,கோரமாண்டல் மற்றும் பிற இ.எம்.எல்.ரயில் நிலையங்களில் இருந்து மாதாந்திர சீசன் டிக்கெட் பெற்று  பெங்களூரு சென்று பல்வேறு பணிகளை செய்து தங்கள் குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.

அவர்களின் பணி நேரத்திற்கு ஏற்ற வகையில் தினசரி பல்வேறு ரயில்களில் பெங்களூரு சென்று வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக ரயில்கள் நிறுத்தப்பட்டன. தொற்று பரவல் தடுப்பு விதிகள் தளர்த்தப்பட்ட பிறகு மாரி குப்பத்தில் இருந்து காலை 6.20. கிளம்பி காலை 9.20. க்கு பெங்களூரு அடையும் ரயில் மீண்டும் மாலை 6.10.க்கு கிளம்பி இரவு 8.40.க்கு மாரி குப்பம் அடையும் ஒரு ரயில் மட்டுமே இயக்க படுகிறது.  தினசரி ரயில் பயணிகள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் ஏராளமானோர் வேலை இழந்ததோடு, குறித்த நேரத்தில் பணியிடங்களுக்கு செல்ல முடியாமல் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

எனவே மாரி குப்பத்தில் இருந்து காலை 8 மணி , மற்றும் பிற்பகல் 2 மணி ஆகிய நேரங்களில் சென்று கொண்டிருந்த ரயில்களையும் அதே போல் பைப்பனஹள்ளியில் இருந்து 5.15.க்கு புறப்பட்டு இரவு 7.30.மணிக்கு மாரி குப்பம் வந்தடையும் ரயில்களை  மீண்டும் இயக்கி ஆயிரக்கணக்கான தினசரி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு வழி வகை செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Mari Kuppam ,Bangalore ,Daily Passengers Association , Mari Kuppam-Bangalore trains to run: Daily Passengers Association demand
× RELATED பெங்களூரு வணிக வளாகத்தில் தீ விபத்து:...