×

தொழில் நுட்ப பூங்காவான தலைநகர் பெங்களூருவில் உழவனின் பெருமையை நிலைநாட்டும்: மத்திகெரே பூங்கா: விவசாயத்தை ஊக்குவிக்கும் செயற்கை சிற்பத்தின் கம்பீரம்

விவசாயம் மற்றும் காளைகளின் பெருமைகளை போற்றும் வண்ணம் அமைந்துள்ள பெங்களூரு ஜே.பி பார்க். காண்பவர்களின் கண்களை கவரும் வண்ணம் அமைந்துள்ளது மட்டுமின்றி பாரம்பரியத்தை உணர்ந்து, உலக சிறப்பு வாய்ந்த பூங்காக்களில் ஒன்றாக கம்பீரமாக காட்சியளித்து வருகிறது. கர்நாடகத்தில் பெங்களூரு நகரம் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்பம் ஒரு புறம் இருக்க மற்றொரு புறத்தில் இயற்கைகளை பாதுகாத்து ஆங்காங்கே பூங்காக்களை அமைத்து, மக்கள் பயன்பெறும் வண்ணம் முந்தைய அரசுகள் பல செயல்பட்டன. ஆனால் காலப்போக்கில் மரங்கள் அழிக்கப்படுவது, பூங்காக்கள் பராமரிக்கப்படாமல், கிடப்பில் போடப்படுவது. இயற்கையை பாதுகாப்பதில் கவனம் செலுத்தாமல், அவற்றை முடக்கும் செயலில் ஈடுபடுவது என்று பல்வேறு செயல்பாடுகள் நடந்து வருகிறது.  இருப்பினும் மக்கள் தங்கள் தரப்பில் பூங்காக்களை பராமரிக்க வேண்டும். அவற்றின் அழகை மீண்டும் மெருகேற்ற வேண்டுமென்று கோரிக்கை வைத்து வருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் தலைசிறந்த நகரங்கள் பட்டியலில் இருக்கும் பெங்களூருவிற்கு இதற்கு முன்பு நகரில் இருந்த தோட்டக்கலையின் சிறப்பை மீண்டும் நிலை நிறுத்தவேண்டுமென்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்து கொண்டுதான் இருக்கிறது.

ஏனென்றால் வெளியூர்களில் இருந்து பெங்களூருவிற்கு வருபவர்கள் பார்க்க துடிப்பது, சுற்றுலா தலங்களாக விளங்கும் புகழ்பெற்ற கோவில்கள் மற்றும் தோட்டக்கலையின் கீழ் இயங்கி வரும் பூங்காக்களைத்தான். அதே நேரம் தொழில்நுட்ப நகரத்தில் பணியாற்றி வரும் ஐ.டி மக்கள் ஓய்வு மற்றும் தங்கள் பொழுதை கழிக்க வேண்டுமென்றால் , ஷாப்பிங் மால்களுக்கு அடுத்தபடியாக இயற்கை எழில் கொஞ்சும் பூங்காக்களையே தேடி ஓடுகிறார்கள். அதைவிட பூங்காக்களை அதிகளவு நேசிப்பவர்கள் காதலர்கள் என்பது மறக்க முடியாத ஒன்று. இந்த தேடல் தற்போது சாமானிய மக்களிடமும் ஏற்பட்டுள்ளது. அவர்களின் கண்களை குளிர்ச்சி அடைய செய்யும் வகையில் பெங்களூருவில் ஒரு சில பூங்காக்கள் மட்டுமே இயற்கையுடன் சேர்த்து வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தகைய பூங்காக்கள் பட்டியலில் இருப்பதுதான் ஜெயபிரகாஷ் நாராயணா பார்க் என்ற ஜே.பி பார்க் பூங்கா. இதற்கு முன்னதாக லால்பாக், இரண்டாவதாக கப்பன் பூங்கா பெயர் பெற்று விளங்கி வருகிறது. தற்போது இந்த ஜே.பி பூங்காவின் சிறப்பும், அங்கிருக்கும் சிற்பங்களும், இந்த இரண்டு பூங்காக்களையும் மிஞ்சிவிடும் என்று புகழ் பரவி வருகிறது.

ஏனென்றால் அந்த அளவிற்கு தோட்டக்கலையின் கைவண்ணத்தை இந்த பூங்காவில் அதிகளவு பார்க்க முடியும். மாநகராட்சி நிர்வாகத்தை வைத்து பராமரிக்கப்பட்டு வரும் இந்த பூங்கா, வடக்கு மேற்கு பெங்களூரு நியூ பி.இ.எல் ரோட்டை அடுத்த மத்திகெரே பகுதியில் அமைந்துள்ளது. உழவனையும், அவன் பயன்படுத்திய காளைகளையும், மேலும் விவசாயத்தின் பெருமையையும், அவர்கள் செய்த பணிகளையும் தத்துரூபமாக ஞாபகப்படுத்தும் வகையில் இந்த பூங்காக்கள் அமைந்துள்ளது. அதாவது ஐ.டி நகர் பெங்களூருவில் இருப்பவர்கள் கம்ப்யூட்டர் மட்டுமே தெரியும் என்று பொதுவாக கூறப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட இளைஞர்களுக்கு மற்றும் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றும் பட்டதாரிகளுக்கு, உழவனையும், அவன் பயன்படுத்திய பிராணிகளின் பெருமையையும், ஞாபக்கப்படுத்தும் வகையில் இந்த பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது. வெறுமனையே காண்போரின் கண்களை குளிர்ச்சி அடைய செய்வதற்காக மட்டுமின்றி, எவ்வளவு நாட்கள் ஆனாலும், இந்தியாவின் பாரம்பரியத்தையும், இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்தையும் மக்களுக்கு நினைவூட்டவேண்டுமென்ற நோக்கில் பூங்காவை உருவாக்கியுள்ளனர்.

இது தவிர தோட்டங்களில் கூலி வேலை செய்யும் பாட்டாளிகளின் சிலைகளும் தத்துரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது. மண்வெட்டியை பிடித்து, கூலி தொழிலாளர்கள் வயல் வெளிகளில் வேலை பார்ப்பது போன்றும், இயற்கை காட்சிகள் பலவற்றை செயற்கை வடிவில், தோட்டக்கலைத்துறை உருவாக்கியுள்ளது.  இதேபோன்று ஆடு மேய்ப்பவர்கள், வயல் வெளிகளில் ஓரமாக இருக்கும் புற்களில் தங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவது போன்ற சிற்பங்கள், இந்த செயற்கை பூங்காவிற்கு கூடுதல் அழகூட்டியுள்ளது.  விவசாய குடும்பங்கள் ஒன்றாக அமர்ந்து பேசுவது போன்றும், சுற்றுலா பயணிகள் பூங்காவிற்கு வந்தால் அவர்களின் நடவடிக்கை எப்படியெல்லாம் இருக்கும் மற்றும் எப்படியெல்லாம் போட்டோ எடுத்து கொள்ள முயற்சிப்பார்கள் என்பதையும் சிற்பத்தின் வாயிலாக நினைவூட்டியுள்ளனர். அந்த அளவிற்கு இயற்கையை மெருகேற்றி வைத்துள்ளனர்.  இவ்வாறு பல்வேறு இயற்கை காட்சிகள் மற்றும் பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ள இந்த பூங்காவை 2006ம் ஆண்டு முன்னாள் முதல்வர் குமாரசாமி திறந்து வைத்துள்ளார்.  

தோட்டக்கலைத்துறையின் வழிகாட்டுதலின்படி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சுமார் 9 கோடி செலவில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. லால்பாக், கப்பன்பார்க்கிற்கு அடுத்தப்படியாக முக்கியத்துவம் இந்த பூங்காவிற்கு அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் ஆல்மாட்டி பூங்காவிற்கு அடுத்தப்படியாக பாரம்பரியத்தையும், இயற்கைகளை ஞாபகப்படுத்து, பூங்காவின் பட்டியலில் இந்த ஜே.பி பார்க் அமைந்துள்ளது என்று சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர்.  காலையில் 5 மணி முதல் 9 மணி வரையிலும், மாலையில் 4 மணி முதல் 8.30 மணி வரையிலும் மக்கள் பயன்படுத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த காலைநேரம் நடைபயிற்சி செய்பவர்களுக்கு, ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருப்பதாக உடற்பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விரைவில் டாய் ரயில்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்  ஜே பி பூங்காவில் பிரிட்டீஷ் வடிவில் சுமார் 1.4 கோடி செலவில் ரயில் நிலையமும், 8.8 கோடி செலவில் டாய் ரயிலும் இயக்க திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று உள்ளிட்ட சில காரணங்களால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது மீண்டும் உயிர்த்தெழுந்தள்ளது. 4 பெட்டிகள் 36 இருக்கைகளுடன் இந்த ரயில் இயக்கப்படும் என்றும் மொத்தத்தில் 19 கோடி செலவில் திட்டம் உருவாக்கப்பட உள்ளது எனவும் மாநகராட்சி திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

4 ஏரிகளை கொண்ட பூங்கா
மத்திகெரே பகுதியில் பிரமாண்ட தோற்றம் கொண்ட இந்த பூங்கா 85 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 25 ஏக்கரில் 4 ஏரிகள் பூங்காக்களின் உள்ளேயே உள்ளது. மேலும் இயற்கை வளங்களை பாதுகாக்கும் வண்ணம் 250 வகையான மரங்கள் நிறுவப்பட்டுள்ளது. இது தவிர சுற்றுலா பயணிகள் பார்த்தவுடன் செல்பி எடுத்து கொள்ளும் வகையில், வெவ்வேறு வகையான பூச்செடிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் பெரும்பாலான செடிகள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்டு, வளர்க்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அனைத்து இயற்கை மூலிகையுடன் தொடர்புடைய செடிகள் மரங்கள் என்று தோட்டக்கலைத்துறை சேர்ந்தவர்களும், மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த செடி, கொடிகளுடன் முதியவர்கள், இளைஞர்கள் நடைபயிற்சி செய்வதற்கான பாதைகள், குடும்பத்துடன் வந்து அமர்ந்தால், பழமை வாய்ந்த கட்டிடத்தில் அமர்ந்து இருப்பதுபோன்று காட்சியளிக்க கூடிய செயற்கை இருக்கைகள். சிறுவர்கள் ஆனந்தப்படுத்தும் வகையிலான விளையாட்டு உபகரணங்கள் இதனுள் அடங்கியுள்ளது. மேலும் ஏரிகளில் மீன்கள், வாத்துகள், பல்வேறு நீர்வால் பறவைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இவை மாநகராட்சி கட்டுபாட்டில் வைத்து பராமரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.


Tags : Bangalore ,Mathikere Park , Bangalore, the capital of technology, will uphold the pride of the farmer: Mathikere Park: The majesty of the artificial sculpture that promotes agriculture
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் NIA சோதனை