அதிமுகவினருக்கு மட்டும் நகை கடன் கூட்டுறவு கடன் சங்கத்தை பொதுமக்கள் முற்றுகை: முதல்வர் தொகுதியில் பரபரப்பு

இடைப்பாடி: முதல்வர் தொகுதியான இடைப்பாடியில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அதிமுகவினருக்கு மட்டும் நகை கடன் வழங்கியதால், பொதுமக்கள் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம், இடைப்பாடி ஒன்றியம் சித்தூர் ஊராட்சியில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் வாங்கிய நகை கடன்களை தள்ளுபடி செய்து, முதல்வர் அறிவித்தார். இந்நிலையில், இந்த சங்கத்தில் கடந்த 26ம் தேதி இரவு வரை, 40 பேருக்கு நகை கடன் வழங்க பெயர் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, மறுநாள் (27ம் தேதி) அதிமுகவினர், தங்களது உறவினர்களுக்கு 26ம் தேதியே நகைக்கடன் வழங்கியது போல் வழங்கியுள்ளனர். இதையறிந்த அப்பகுதி மக்கள், தாங்களும் நகை கடன் பெறுவதற்காக, கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சென்றனர். அப்போது, சங்கத்தில் பணமில்லை எனக்கூறிய அதிகாரிகள், நேற்று(1ம்தேதி) வருமாறு கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர். இந்நிலையில், நேற்று காலை 10 மணியளவில், பெண்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் சென்றபோது, கூட்டுறவு கடன் சங்க செயலாளர் சேகர், தேர்தல் விதிகளை காரணம் காட்டி நகை கடன் வழங்க முடியாது என மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், சங்கத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக 26ம் தேதி முதல்வர் அறிவித்தார். அதன்பின்னர், 27ம் தேதி கூட்டுறவு அதிகாரிகள், அதிமுகவினர் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு நகை கடன் வழங்கினர். இதனையடுத்து, நாங்கள் சென்று கேட்டபோது பணம் இல்லை என்றும், திங்கட்கிழமை வருமாறும் கூறி அனுப்பினர். அதனால், நாங்கள் இன்று(நேற்று) சென்று கேட்ட போது, தேர்தல் விதிகளை காரணம் காட்டி, எங்களுக்கு நகை கடன் வழங்க மறுக்கின்றனர்.

ஆனால், அதிமுகவினருக்கு மட்டும் நகை கடன் வழங்கியுள்ளனர். எனவே, எங்களுக்கும் நகைக் கடன் வழங்காவிட்டால் இங்கிருந்து செல்ல மாட்டோம்’ என்றனர். தகவலறிந்து வந்த பூலாம்பட்டி போலீசார், பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து பணம் வந்தவுடன், நகை கடன் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால், அப்பகுதியில் 3 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு நிலவியது.

Related Stories:

>