தேர்தல் அதிகாரிகளை ஆணையத்திடம் கலந்தாலோசிக்காமல் இட மாற்றம் செய்ததை எதிர்த்து திமுக வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: தேர்தல் அதிகாரிகளாகவும், உதவி தேர்தல் அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்டவர்களை, தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசிக்காமல் இடமாற்றம் செய்ததற்கு தடை கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழக சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்காக, மாவட்ட தேர்தல் அதிகாரி, தொகுதி தேர்தல் அதிகாரி மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகளை நியமித்து கடந்த ஜனவரி 21ம் தேதி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், அந்த அறிவிப்பில் தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் அதிகாரிகளின் முகவரி, கைப்பேசி எண், வாட்ஸ்அப் எண், மின்னஞ்சல் முகவரி என்பன போன்ற தொடர்பு விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. இதுசம்பந்தமாக தமிழக தலைமைச் தேர்தல் அதிகாரிக்கு மனு அனுப்பினோம்.

மனுவிற்கு பதிலளித்த தலைமை தேர்தல் அதிகாரி, பொதுத்துறை இணையதளத்தில், 234 தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் அதிகாரிகளின் தொடர்பு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால், அந்த பட்டியலில் இடம்பெற்றிருந்த தேர்தல் அதிகாரிகள், தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசிக்காமல், உள்நோக்கத்துடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை இடமாற்றம் செய்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை பிறப்பித்த அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும். அந்த அறிவிப்பை ரத்து செய்து, குறைகளை களைந்து புதிய அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, சம்பந்தப்பட்ட பதவியில் உள்ளவர்களே தேர்தல் அதிகாரிகளாக அறிவிக்கப்படுகிறது.

தற்போது புதிய பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. அதை மனுதாரர் சரிபார்த்து தெரிவிக்கலாம். மூன்று ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்தவர்கள் பணிமாற்றம் செய்யப்படுவது உண்டு. அந்த வகையில் இவர்கள் பணிமாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, புதிய பட்டியலை சரிபார்க்க மனுதாரருக்கு அவகாசம் வழங்கிய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories:

>