×

இரண்டு கூட்டணி கட்சிகளுடன் திமுக தொகுதி உடன்பாடு: முஸ்லிம் லீக்-3, ம.ம.கவுக்கு 2 சீட் ஒதுக்கீடு; மதிமுக, வி.சி.க.வுடன் பேச்சு

சென்னை: திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மமகவுக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுக, விசிக போன்ற கட்சிகளுடன் நேற்று முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.

நேற்று முன்தினம் முதல் கட்டமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியது. தொடர்ந்து இரண்டாவது கட்டமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அதன் தேசிய தலைவர் காதர் மொகைதீன், நவாஸ்கனி எம்பி, எம்எல்ஏ அபூபக்கர், பொருளாளர் எம்.எஸ்.ஷாஜகான் உள்ளிட்ட தலைவர்கள் திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. அதே போல மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, பொதுச்செயலாளர் அப்துல் சமது, பொருளாளர் சபிபுல்லா கான் உள்ளிட்டோரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிலும் உடன்பாடு ஏற்பட்டது.

தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தலைமையில் இரண்டு கட்சிகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. அதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் அளித்த பேட்டி: 2 நாட்கள் பேச்சுவார்த்தையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை பொறுத்தவரையில் 5 தொகுதிகளை எங்களுக்கு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். முத்தமிழறிஞர் காலத்தில் இருந்து திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு தான் முதலிலே கையெழுத்து போடுவது வழக்கம். வரலாறு.

அந்த வரலாற்றை பின்பற்றி இன்றைக்கு திமுக தலைவரும், நானும் தொகுதி பங்கீட்டில் கையெழுத்து போட்டுள்ளோம். எங்களுக்கு 5 தொகுதிகள் தர இயலவில்லை என்றும், பல்வேறு சூழ்நிலை இருக்கிறது என்றும், நாட்டில் நிலவக்கூடிய அரசியல் சூழ்நிலையில் திமுகவுக்கு அதிகமான தொகுதிகளை தர வேண்டியது இருக்கிறது. இந்த கூட்டணியில் போன தடவை இல்லாத கட்சி தோழர்கள்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் நாங்கள் இடங்கள் ஒதுக்கி தர வேண்டும் என்ற முறையில் எங்களுக்கு 5 தொகுதிகள் கொடுக்க முடியாததை சொன்னார்கள். நாங்களும் ஒப்புக்கொண்டு அவர்கள் கொடுத்த 3 தொகுதிகளுக்கு கையெழுத்து போட்டுள்ளோம்.

நாங்கள் போட்டியிடுவது எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஏணி சின்னமான தனி சின்னத்தில் தான். கேரளாவில் ஒதுக்கப்பட்டிருக்கின்ற சின்னம், இந்தியா முழுவதும் அந்த சின்னத்தில் தான் நாங்கள் நிற்க முடியும். அதனால், தான் தமிழகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏணி சின்னத்தில் தான் போட்டியிடுவார்கள். பேச்சுவார்த்தையில் சின்னம் பிரச்னை எழவே இல்லை. பேச்சுவார்த்தையில் 3 தொகுதிகள் மட்டுமே இறுதி செய்யப்பட்டது. எங்களுக்கு விருப்பப்பட்டியல் 25 இருக்கிறது. அதனை கொடுப்போம். எப்போதும் போல் அவர்கள் நிறைவேற்றி கொடுப்பார்கள்.

மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா அளித்த பேட்டி: பாஜக பல்வேறு மாநிலங்களில் அரங்கேற்றி வரக்கூடிய மிக மலிவான, மோசமான அரசியல் வழிகளை எல்லாம் கவனத்தில் எடுத்து கொண்டு, தமிழகத்தில் திமுக அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி கட்டிலில் அமர வேண்டும். அப்போது தான் தமிழகம் தொடர்ந்து சமூக நீதியின் தொட்டிலாக, சமநல்லிணக்கத்தின் பூமியாக, மாநில சுயாட்சியை உரக்க நிலை நாட்டக்கூடிய மாநிலமாக மாறும். பாஜக இடம் பெற்றிருக்க அதிமுக கூட்டணி வருகின்ற தேர்தலில் மிகப்பெரிய அளவுக்கு தோல்வியை தழுவ வேண்டும்.

திமுக கூட்டணி அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக தனிப்பெருன்பான்மையுடன் ஆட்சியில் அமர வேண்டும். திமுக கூட்டணியில் அதிகமான கட்சிகள் இடம் பெற்றிருக்கிறார்கள். அந்த நிலையில் நாட்டின் நலனையும், தமிழகத்தின் நலனையும் எப்போதுமே கவனத்தில் கொண்டு எப்போதுமே தியாக மனப்பான்மையுடன் கூடிய நாங்கள். திமுக தலைவருடன் வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு உடன்பாடு செய்திருக்கிறோம். எங்கள் கூட்டணியில் 2 தொகுதியில் போட்டியிடுகிறோம். எந்த சின்னத்தில் போட்டியிடுவோம் என்பதை அடுத்தக்கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தி அறிவிப்போம். என்னென் தொகுதிகள் என்பது அடுத்தக்கட்டத்தில் தான் நிர்ணயித்து திமுக தலைவர் அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து மதிமுக சார்பில் துணை பொது செயலாளர் மல்லை சி.ஏ.சத்யா, செந்திலதிபன், வழக்கறிஞர் சின்னப்பா, ஆவடி அந்திரிதாஸ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்று திமுக தேர்தல் பங்கீட்டு குழுவுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் மல்லை சத்யா அளித்த பேட்டி, \\” தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது. நாங்கள் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவோம் என்பதை அவர்களிடம் தெரிவித்தோம். அவர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்தார். இதை எங்கள் பொது செயலாளரிடம் தெரிவித்து அடுத்த பேச்சுவார்த்தை நடத்துவோம். தனி சின்னத்தில் நாங்கள் போட்டியிடுவோம்.

தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பொது செயலாளர்கள் ரவிக்குமார் எம்பி, சிந்தனை செல்வன், பொருளாளர் யூசுப் ஆகியோர் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் திருமாவளவன் கூறும்போது, ‘‘திமுகவுடான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. நாளையும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும். எந்தெந்த தொகுதிகள், எந்த சின்னத்தில் போட்டியிடப்படும்’’ என்று இன்று அறிவிக்கப்படும் என்றார். இன்று கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு தொடர்பாக பேச்சு வார்த்தை நடக்கிறது.

* மதிமுக சார்பில் துணை பொது செயலாளர் மல்லை சி.ஏ.சத்யா, செந்திலதிபன், வழக்கறிஞர் சின்னப்பா, ஆவடி அந்திரிதாஸ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
* விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பொது செயலாளர்கள் ரவிக்குமார் எம்பி, சிந்தனை செல்வன், பொருளாளர் யூசுப் ஆகியோர் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
* இன்று கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடக்கிறது.

Tags : DMK ,Muslim League ,3 ,BJP ,Madhimuga ,VCK , DMK constituency agreement with two alliance parties: Muslim League-3, allotment of 2 seats to the BJP; Talk to Madimuga, VCK
× RELATED தண்ணீர் பந்தல் அமைக்க கட்சிகளுக்கு...