×

தலைநகர் டெல்லியில் இரண்டாம்கட்டமாக கோவிட்-19 தடுப்பூசி போடும் பணி துவங்கியது: காலை முதல் வரிசையில் காத்திருந்த முதியவர்கள்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் இரண்டாம்கட்டமாக கோவிட்-19 தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. இதில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் முதல் முறையாக தடுப்பூசிகளை போட்டுக்கொண்டனர். டெல்லியில் முதல்கட்டமாக கடந்த ஜனவர் 6ம் தேதியன்று கோவிட்-19 தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதில் சுகாதாரப்பணியாளர்கள் மற்றும் முன்களபணியாளர்கள் உட்பட சுமார் 3.6 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இந்நிலையில், நேற்று இரண்டாம்கட்டமாக தடுப்பூசி போடும் முகாம் தொடங்கியது. இந்த இரண்டாம்கட்டத்தில் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்கள் மற்றும் இணை நோய் உள்ள  45-59 வயதுக்குட்டவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டது.

இதுபற்றி ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருததுவமனையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘காலையில் சுமார் 15 முதியவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போடுவதற்காக வந்தவர்களில் பெரும்பாலும் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் வந்திருந்தனர். வயதானவர்கள் நோய்தொற்றால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிரிவை சார்ந்தவர்கள் என்பதால் இதுபோன்றவர்கள் ஆர்வத்துடன்  தடுப்பூசி போடுவதற்காக வாக்கிங் ஸ்டிக்குடன் வந்ததைப் பார்க்க மனதிற்கு இதமாக இருந்தது” என்றார். தடுப்பூசி போடும் பணி நண்பகல் 12 மணிக்கு துவங்குவதாக இருந்தது.  ஆனால், மூத்த குடிமக்கள் பலர் காலை 10.30 மணிக்கே வரிசையில் நிற்க தொடங்கினர். எனவே, திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே தடுப்பூசி போடப்பட்டது. இதுதவிர, இரண்டாவது முறையாக 9 பேர் தடுப்பூசிகளை போட்டுக்கொண்டனர்.

இவர்களில் பொதுத்துறை வங்கியின் ஓய்வு பெற்ற மேலாளா் அருண்குமார் குப்தா(66) என்பவர் மூன்று மணிநேரம் வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டதாக பெருமிதம் தெரிவித்தார். டெல்லி அரசாங்கத்தின் கல்வித் துறையிலிருந்து  ஓய்வு பெற்ற ஜகத்புரியில் வசிக்கும் இந்தர் பால்(68) கூறுகையில், ‘‘எனது  மகன் எனது பெயரை ஆன்லைனில் பதிவு செய்திருந்தார். நான் இன்று காலை இங்கு  வந்து பதிவுசெய்த தாளைக் காண்பித்து காலை 11.15 மணியளவில் தடுப்பூசி  பெற்றேன். இதுவரை எந்த பக்க விளைவையும் நான் உணரவில்லை” என்றார்.
    
முக்கிய அம்சங்கள்
* இரண்டாம்கட்ட தடுப்பூசி முகாம்கள் 192 சுகாதார மையங்களிலும், 136 தனியார் மருத்துவமனைகளிலும் மையங்கள் அமைக்கப்பட்டு
இருந்தன.
* தடுப்பூசிக்கு தகுதியானவர்கள் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அட்டை உள்ளிட்ட புகைப்பட அடையாள அட்டைகளையும் எடுத்துச் செல்ல வேண்டும்.
* அரசு வழிகாட்டுதல் படி, இந்த தடுப்பூசி அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார மையங்களில் இலவசமாக போடப்பட்டது. தனியார் மருத்துவமனைகளில் 250 கட்டணத்தில் கோவிட் தடுப்பூசி போடப்பட்டது.
* தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புவோர் கோ-வின் 2.0 போர்ட்டலில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். நான்கு பதிவுகளுக்கு மேல் மொபைல் எண்ணைப் பயன்படுத்த முடியாது.
* தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள 250 கட்டணம் அரசு நிர்ணயித்தது. அதனுடன் சேவை கட்டணம் ₹100 செலுத்த வேண்டும்.
* அதிகாரபூர்வ மதிப்பீடுகளின்படி, 60 அல்லது அதற்கு  மேற்பட்ட வயதுடைய குறிப்பிட்ட முன்னுரிமை பிரிவில் சுமார் 43 லட்சம்  பேரும், டெல்லியில் கொமொர்பிடிட்டிகளுடன் 45-59 ஆண்டுகளுக்குள்  இருப்பவர்களும் உள்ளனர்.

80 சதவீத போலீசாருக்கு தடுப்பூசி
டெல்லி  காவல் துறையில் முதல்கட்டத்தில் 80 சதவீதம் பேர் கோவிட்-19 தடுப்பூசி  போட்டுக்கொண்டதாக மூத்த அதிகாரி தெரிவித்தார். அதாவது, கடந்த வெள்ளிக்கிழமை  வரை சுமார் 66,246 போலீசார் முதல்கட்ட தடுப்பூசியை போட்டுக்கொண்டனர்.  அவர்களில் 15 காவல் மாவட்டங்களை சேர்ந்த டெல்லி போலீஸ், போக்குவரத்து  போலீஸ், குற்றப்பிரிவு, சிறப்பு பிரிவு, பாதுகாப்பு, மெட்ரோ, ரயில்வே  உள்ளிட்ட பிரிவு போலிசாரும் அடங்குவர். டெல்லி போலீசில் சுமார் 80,000 பேர்  உள்ளனர்.

கோ-வின் போர்ட்டல் தளத்தில் தொழில்நுட்ப கோளாறு
அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அரசு அறிவித்ததோடு, தடுப்பூசி போ விரும்புவோர் கோ-வின் போர்டலில் முன்பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது. ஆனால்,  தடுப்பூசி போடுவதற்காக இந்த கோ-வின் தளத்திற்கு சென்று முன்பதிவு செய்ய முன்ற பலருக்கு தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டு பதிவு செய்ய முடியாமல் போனதாக புகார் தெரிவித்தனர். ஆனால், நேரடியாக மருத்துவமனைக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள சென்றவர்களிடம் அங்குள்ள சுகாதாரப்பணியாளர்கள் கோ-வின் செயலியில் முன்பதிவு செய்ய வலியுறுத்தினர். இதனால் பலரும் சிரமத்திற்கு உள்ளானார்கள். மேலும், இன்று முதல் 12 மணிக்கு பதிலாக, காலை 9.30 மணி முதல் தடுப்பூசி போடப்படும் என்று டாக்டர் தினகர் தெரிவித்தார்.


Tags : Delhi , Second phase of Govt-19 vaccination begins in the capital Delhi: Elderly people waiting in line from morning
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...