×

60 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி துவக்கம்: கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: தனியார் மருத்துவமனைகளுக்கு அமைச்சர் சுதாகர் எச்சரிக்கை

பெங்களூரு: அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு 250 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட அதிகமாக வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  அமைச்சர் சுதாகர் அறிவித்தார். கொரோனா வைரஸ் தொற்று கடந்த வருடம் பிப்ரவரி மாதம் கர்நாடக உள்பட இந்தியாவில் பரவ தொடங்கியது. மார்ச், ஏப்ரல் மாதத்தில் இதன் தாக்கம் அதிகரித்த நிலையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையே தடுப்பு மருந்து கண்டு பிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு அதில் வெற்றி பெற்றனர். தடுப்பூசி மருந்து பரிசோதனை பல்வேறு கட்டமாக நடந்த நிலையில் இந்திய மருத்துவ கவுன்சில் கோவாக்சின்,  கோவிஷீல்டு ஆகிய இரண்டு மருந்திற்கு அனுமதி அளித்தது.

கொரோனா தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப்பட்டு அதற்கு அனுமதி கிடைத்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 16ம்தேதி இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக கொரோனா வாரியர்ஸ் என அழைக்கப்படும் ஆஷா ஊழியர்கள், நர்சுகள், டாக்டர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது. பெங்களூரு கேசி ஜெனரல் மருத்துவமனையில் முதல்வர் எடியூரப்பா முன்னிலையில் முன்கள பணியாளருக்கு தடுப்பூசி வழங்கப்
பட்டது. இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி விறுவிறுப்பாக நடந்தது. ஒரு சில இடங்கள் தவிர மற்ற இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி  துரிதமாக நடந்தது. கொரோனா துடுப்பூசி போடப்பட்டதில் கர்நாடகா, இந்தியாவில் முதல் மாநிலம் என்ற சிறப்பையும் பெற்றிருந்தது. முதற்கட்ட கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து வினியோகத்தை தொடர்ந்து வருவாய்த்துறை ஊழியர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது. அதன்பிறகு அடுத்த கட்டமாக மாநிலம் முழுவதும் 270 மருத்துவமனையில் தடுப்பூசி  மூத்த குடிமக்களுக்கு நேற்று தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கியது.

வடகர்நாடக மாவட்டம் சிர்சியில் சுகாதார துறை அமைச்சர் டாக்டர் கே சுதாகர் இதை தொடங்கி வைத்து பேசியதாவது, கொரோனா தடுப்பூசி பெறுவதற்கு யாருக்கும் எவ்வித பயமும் தேவையில்லை. நமது பிரதமர் நரேந்திர மோடி, தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். பிறகு எதற்காக நாம் பயப்படவேண்டும்? எனவே, எவ்வித தயக்கமும் இன்றி அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும். முற்கட்ட கொரோனா தடுப்பூசி பெங்களூருவில் தொடங்கி வைக்கப்பட்டது.
இரண்டாவது கட்ட கொரோனா தடுப்பூசி ஐதராபாத் கர்நாடகாவில் தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது மூன்றாவது கட்ட கொரோனா தடுப்பூசி வடகர்நாடகாவில் தொடங்கியுள்ளது. மூன்றாவது கட்டமாக வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி பெறுவதற்கு அரசு இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். அல்லது அரசு மருத்துவமனைக்கு ஆதார்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணத்தை நேரில் கொண்டு சென்று பதிவு செய்ய முடியும். 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், பணியில் இருந்து ஓய்வு பெற்ற நபர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

அதே நேரம் 45 வயதிற்கு மேற்பட்ட 59 வயதிற்கு உட்பட்ட நபர்கள் அவர்களின் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட நபர்களின் உடல் நிலையை பரிசோதனை செய்து டாக்டர்கள் சான்றிதழ் அளித்தால்,  அவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும். அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ₹250 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட அதிகம் வசூலிக்கப்படக்கூடாது. ஒருவேளை தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு கூடுதல் பணம் வசூலிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர்கள் சமச்சீர் உணவு உட்கொள்ளவேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நபர்களும் சமச்சீர் உணவை எடுத்துக்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள முடியும். தேசிய பொருளாதார அமைப்பு சுகாதார துறைக்கு பட்ஜெட்டில் 8 சதவீதம் நிதி  ஒதுக்கவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி மாநில அரசு கூடுதல் நிதி ஒதுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. கிராமங்களில் பணியாற்றுவதற்காக மாநில அரசு 2150 டாக்டர்களை நியமித்து நடவடிக்கை எடுத்து 24 மணி நேரமும் சுகாதார மையம் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளோம். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யவேண்டும் என்பது கட்டாயம் கிடையாது.  தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பும் நபர்கள் (60 வயதிற்கு மேற்பட்டவர்கள்) ஆதார், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் மையத்திற்கு நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்ளலாம். கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் உருமாற்ற கொரோனா பரவல் தடுப்பில் அண்டை மாநிலங்களுக்கு கர்நாடகா முன்மாதிரியாக திகழ்கிறது’’, என்றார். பேரவை தலைவர் விஸ்வேஸ்வர ஹெக்டே உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

வதந்தியை நம்ப வேண்டாம்
மாநிலத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட 16 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவு செய்த அனைவருக்கும்  குறிப்பிட்ட காலத்திற்குள் தடுப்பூசி வழங்கப்பட்டு விடும். இணையதளத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் எவ்வித பயனும் இல்லை என்பது போன்ற தகவல் பரவி வருகிறது. சமூக வலைதளத்தில் பரவும் வதந்திகளை யாரும் பொருட்படுத்த வேண்டாம் என்று அமைச்சர் சுதாகர் கேட்டுக்கொண்டார்.


Tags : Minister ,Sudhakar , Corona vaccination for over 60s: Additional charges: Minister Sudhakar warns private hospitals
× RELATED டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதை...