மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்: ராகுல் காந்தி அழைப்பு

கன்னியாகுமரி: மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி தமிழகத்தில் மூன்றாவது கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் பிரசாரம் செய்த அவர், இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று காலை 10 மணி அளவில் தென்காசியில் இருந்து புறப்பட்டு கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு ஹாலிகாப்டர் மூலம் ராகுல் காந்தியை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அங்கிருந்து கார் மூலம் புறப்பட்ட ராகுல் காந்தி கன்னியாகுமரி சர்ச் ரோட்டில் பொதுமக்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்டார். அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர்; காமராஜர் காலத்தில் தமிழகம், இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருந்தது என கூறினார். அனைத்து மொழி, கலாச்சாரம் மதங்களை காக்க துணை நிற்பேன் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். இதன் பிறகு தச்சன்குளம் பகுதியில் சாலையோரம் நுங்கு விற்றுக்கொண்டிருந்த கடை அருகே வாகனத்தை நிறுத்திய ராகுல் காந்தி; நுங்கு வாங்கி சாப்பிட்டார். இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பகுதியில் பள்ளி மாணவ, மாணவியருடன் ராகுல் கலந்துரையாடல் நடத்தினார்.

அப்போது பேசிய அவர் மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். சமுதாயத்திற்கும், மக்களின் நலனுக்கும் பாடுபடுவதே தனது பணி என்றும் ராகுல் கூறினார். மாணவர்களுடனான கலந்துரையாடலின் போது ராகுல் காந்தி அவர்களுடன் சேர்ந்து உற்சாக நடனமாடினார்.

Related Stories:

>