×

பாகன்களால் தாக்கப்பட்டயானை ஜெயமால்யதாவை உரிமை கொண்டாடும் அசாம் வனத்துறை : திரும்ப ஒப்படைக்கும்படி வேண்டுகோள்

கோவை: மேட்டுப்பாளையம் புத்துணர்வு முகாமில் பாகன்களால் தாக்குதலுக்கு உள்ளான யானை ஜெயமால்யதாவை, தங்களிடம் திரும்ப ஒப்படைக்கும்படி அசாம் வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கோவை மேட்டுப்பாளையம் தேக்கப்பட்டியில் கோயில் யானைகளுக்கான நலவாழ்வு முகாம் நடந்து வருகிறது. இம்முகாமில் பங்கேற்றுள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதாவை யானை பாகன்கள் சரமாரியாக அடித்த வீடியோ ஒன்று கடந்த வாரம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து, பாகன்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், பாகன்களால் தாக்கப்பட்ட யானை அசாம் மாநிலத்தில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் கொண்டு வரப்பட்டதாகவும், ஒப்பந்த காலம் முடிந்தும் திருப்பி தரவில்லை என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து அசாம் மாநில கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் யாதவா கூறியதாவது: மேட்டுப்பாளையம் தேக்கப்பட்டியில் சமீபத்தில் யானை தாக்கப்பட்ட வீடியோ காட்சி வெளியானது. அந்த யானையை பார்த்தபோது எங்கள் மாநிலத்தை சேர்ந்த யானையாக இருந்தது. விசாரணையில், அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தை சேர்ந்த கிரின்மோரான் என்பவருக்கு சொந்தமான யானை என தெரியவந்தது. இதற்கான ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில், யானை காகபாதர் என்ற பகுதியில் இருந்து பிடிக்கப்பட்டது.

கடந்த 2008ல் ஒப்பந்த அடிப்படையில் யானையை தமிழக அரசு வாங்கியுள்ளது. ஒப்பந்தம் முடிந்தும் திரும்பி கொடுக்காமல் இருப்பதும் தெரியவந்தது.இதுவரை யானை எங்குள்ளது என கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. இந்த வீடியோ மூலம் கண்டுபிடித்துள்ளோம். இது குறித்து தமிழக வனத்துறையினரை தொடர்புகொண்டு தெரிவித்துள்ளோம். மேலும், யானையை எங்களிடம் ஒப்படைக்க கூறியுள்ளோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.



Tags : Asam Forest ,Jayamalyada , ஜெயமால்யதா
× RELATED ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் யானை...