ஆத்தூர் அருகே தனியார் மார்க்கெட்டிங் வங்கியில் திடீர் தீ விபத்து!: முக்கிய ஆவணங்கள் தீக்கிரை.. வாடிக்கையாளர்கள் கலக்கம்..!!

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தனியார் மார்க்கெட்டிங் வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்து கருகியது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புறக்காவல் நிலையம் அருகில் தனியாருக்கு சொந்தமான இண்டூசிந்து மார்க்கெட்டிங் வங்கி இயங்கி வருகின்றது. இந்நிலையில் இன்று காலை வங்கியில் இருந்து திடீரென கரும்புகை வருவதை பார்த்த அப்பகுதி மக்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். தொடர்ந்து வங்கி ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வெளியிலிருந்து தீயை அணைக்க முயற்சித்துள்ளனர்.

இருப்பினரும் தீயானது கட்டுக்கடங்காமல் எரிந்ததால் வங்கியின் முன்பக்க கண்ணாடி கதவினை உடைத்து சென்று தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வங்கியில் இருந்த முக்கிய ஆவணங்கள், கம்ப்யூட்டர்கள் உள்பட பொருட்கள் அனைத்தும்  எரிந்து சேதம் அடைந்தன. ஏ.சியில் ஏற்பட்ட மின்கசிவே திடீர் தீ விபத்துக்கு காரணம் என தீயணைப்புத்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் சேத மதிப்பு சுமார் பல லட்சம் ரூபாய் இருக்கும் என தெரிகிறது. இதனால் வங்கியின் வாடிக்கையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். திடீர் தீ விபத்து குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: