பெரம்பலூர் அருகே சோகம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பயணம் பைக் மீது கார் மோதியதில் 2 குழந்தை உட்பட 5 பேர் பலி

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே பைக் மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் புதுக்காலனியை சேர்ந்தவர் ெசந்தில் (30). இவரது மனைவி பரமேஸ்வரி (27). இவர்களது மகள் செந்நிலா (3), மகன் தமிழ்நிலா(2). செந்தில் வெளிநாட்டில் வேலை செய்கிறார். பரமேஸ்வரி 2 குழந்தைகளுடன் வேப்பூரில் உள்ள தாய் தனம் (60) வீட்டில் வசித்து வந்தார். இவரது தங்கை பச்சையம்மாள் (25), கணவர் அம்பேத்கருடன் கொளப்பாடி கிராமத்தில் வசிக்கிறார்.

தற்போது பச்சையம்மாள் கர்ப்பமாக உள்ளதால், அவரை பார்க்க பரமேஸ்வரி, தாய் தனம் மற்றும் குழந்தைகளுடன் தம்பி சக்திவேல் (21) பைக்கில் நேற்றுமுன்தினம் கொளப்பாடி கிராமத்திற்கு சென்றுள்ளார். நேற்று காலை அங்கிருந்து புறப்பட்டபோது, பச்சையம்மாளின் குழந்தை நந்திதாவும் (2) பாட்டி வீட்டிற்கு செல்ல அடம்பிடித்ததால் அவளையும் சேர்த்து 6 பேரும் ஒரே பைக்கில் வேப்பூருக்கு சென்றனர். பைக் வேட்டக்குடி-வேப்பூர் சாலையில் ஒரு வளைவில் சென்ற போது அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் நிலைதடுமாறி மோதியதில் பைக் ெநாறுங்கி 6 பேரும், 20 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டனர்.

இதில், பரமேஸ்வரி, செந்நிலா, நந்திதா ஆகிய 3 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த தமிழ் நிலா, தனம், சக்திவேல் ஆகியோரை போலீசார் மீட்டு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தனம் உயிரிழந்தார். பின்னர் திருச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சக்திவேலும் இறந்தார். அங்கு சிறுவன் தமிழ் நிலாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்ைத ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து குன்னம் போலீசார் வழக்கு பதிந்து கார் டிரைவர் சக்திவேலை (27) தேடி வருகின்றனர்.

Related Stories:

>