×

நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது மூத்த குடிமக்களுக்கு இன்று முதல் தடுப்பூசி: தனியார் மருத்துமவனைகளில் கட்டணம் செலுத்தியும் போட்டுக் கொள்ளலாம்

புதுடெல்லி: மத்திய சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், இணை நோய் பாதிப்புகள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கவ உள்ளது. இந்த தடுப்பூசியை முன்பதிவு மூலம் அரசு மையங்களில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் ₹250 கட்டணம் செலுத்தியும் போட்டுக் கொள்ளலாம். இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் உட்பட 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த தடுப்பூசி 2 தவணைகளாக போடப்பட்டு வருகிறது. இதற்கிடையே, தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்தும் விதமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய் பாதிப்புள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.

இந்நிலையில், மூத்த குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்குகிறது. நாடு முழுவதும் 27 கோடி மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி போட மதிப்பிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சுமார் 10 கோடி பேருக்கு போடப்படும். தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்புபவர்கள், தங்களது பெயர்களை ‘கோ-வின் 2.0’ இணையதளத்திலும், ‘ஆரோக்கிய சேது’ செயலியிலும் முன்பதிவு செய்யலாம். அதில், தடுப்பூசி போடப்படும் அரசு, தனியார் மருத்துவமனைகளின் பெயர்கள் இடம் பெற்றிருக்கும். அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் கட்டணத்திலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். பயனாளிகள் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, 45 முதல் 59 வயதைக் குறிப்பிடும் மருத்துவரின் சான்றிதழ், புகைப்படத்துடன் கூடிய பணியாளர் அடையாள அட்டை, தொழிலாளர் சான்றிதழ் என இதில் ஏதாவது ஒன்றைக் கொண்டு சென்றும் மாநில அரசு மையங்களில் நேரில் பதிவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும்.

கொரோனா தடுப்பூசி போடும் மையங்களில் போதிய இடவசதி உள்ளதையும், மருந்துகளுக்கான குளிர்சாதனப் பெட்டிகள் இருப்பதையும், போதிய ஊழியர்கள் இருப்பதையும் மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். ஆஷா, மகளிர் சுயஉதவிக் குழுக்கள், பஞ்சாயத்து நிர்வாக பிரதிநிதிகள் ஆகியோரின் உதவியுடனும் கிராமங்களில் உள்ள முதியோரை அழைத்து வந்து குறிப்பிட்ட நாளில் தடுப்பூசி செலுத்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கலாம். கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்த நிலையில் தற்போது தனியார் மருத்துவமனையில் கட்டணம் செலுத்தி போட்டுக் கொள்ளலாம் என்று அறிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘மத்திய சுகாதாரத் துறையின் வழிகாட்டுதலின்படி ​தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசிக்கு ₹250 வரை கட்டணம் வசூலிக்க முடியும். தடுப்பூசி மையத்தின் பயனாளிகள் கட்டணமாக ₹150, தடுப்பூசி சேமிப்பு, பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு நபருக்கு ₹100 வரை வசூலிக்க முடியும். அடுத்த உத்தரவு வரும் வரை, இந்த கட்டணத்தை வசூலிக்க முடியும்’ என்கின்றன.

தனியாருக்கு கோவாக்சின் கிடையாது
தனியார் மருத்துவமனைகளுக்கு முதலில் கோவிஷீல்டு மட்டும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. காரணம், கோவாக்சினை காட்டிலும் கோவிஷீல்டு நிறைய கிடைக்கிறது என்கின்றனர் அதிகாரிகள். கோவாக்சின் மருந்தின் திறன் குறித்து பொதுமக்களிடையே சந்தேகம் எழும் நிலையில் தனியார் மருத்துவமனைக்கு அம்மருந்தை விற்பனைக்கு தராததும் சந்தேகத்தை வலுக்கச் செய்துள்ளது.

20 வகை இணை நோய்க்கு தடுப்பூசி
45 வயதை தாண்டியவர்களுக்கு எந்தெந்த மாதிரியான இணை நோய் இருந்தால் தடுப்பூசி போடலாம் என்பது குறித்து அரசு வெளியிட்டுள்ள பட்டியல்: கடந்த ஓராண்டில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், இதயநோயால் பாதிக்கப்பட்டவர், தமனி நோய், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், நுரையீரல் தமனி உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் ஹெமாட்டோபாய்டிக் ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்பட்ட நோயாளிகள், ஹீமோடையாலிசிஸ் அல்லது சிஏபிடியில் சிறுநீரக நோய் பாதித்தவர்கள், சிதைந்த சிரோசிஸ், கடுமையான சுவாச நோய், லிம்போமா/லுகேமியா/மிலோமா, ஜூலை 1, 2020 அன்று அல்லது அதற்குப் பிறகு புற்றுநோய் பாதிப்பு அல்லது சிகிச்சை பெறுவோர், சிக்கிள் செல் நோய்/போம் மஜ்ஜை பலவீனம்/அப்பிளாஸ்டிக் அனீமியா/தலசீமியா போன்ற நோய்கள், முதன்மை நோய் எதிர்ப்பு குறைபாடுய்/எச்.ஐ.வி தொற்று, இயலாமை/தசைநார் டிஸ்டிராபி/தொழில்நுட்ப குறைபாடுகள்/பார்வை குறைபாடு/ காது கேளாமை போன்றவற்றால் ஏற்பட்ட சுவாச மண்டல குறைபாடு உடையவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின்படி தடுப்பூசி ேபாட்டுக் கொள்ளலாம்.

Tags : Effective across the country The first vaccine for senior citizens today: can also be paid for in private hospitals
× RELATED உபியின் பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பால் மரணம்