தனது ஊழல்களை மறைப்பதற்காகவே மோடியிடம் முதல்வர் எடப்பாடி சரணாகதி: ஆலங்குளத்தில் ராகுல்காந்தி பேச்சு

நெல்லை: தென்மாவட்டங்களில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி எம்பி, நேற்று முன்தினம் தூத்துக்குடியில் பிரசாரத்தை துவங்கினார். 2வது நாளான நேற்று, தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பஸ் நிலையம் அருகே நேற்று ரோடு ஷோ நடத்தி, அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பேசியதாவது: சிறு, குறு தொழில்கள் இந்தியாவின் முதுகெலும்பாகும். ஆனால், மோடி அவைகளை அழித்து வருகிறார். தொழில் வளர்ச்சி அனைத்துமே 3 அல்லது 4 பணக்காரர்களின் கையில் சிக்கியுள்ளது. புதிதாக இயற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்களும் விவசாயத்தை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கின்றன.

தமிழ் கலாசாரம், பண்பாடு, மொழி ஆகியவற்றின் மீது மோடி தாக்குதல் நடத்தி வருகிறார். தமிழ் என்பது இந்திய மொழி இல்லையா? தமிழக வரலாறு இந்திய வரலாறு இல்லையா? தமிழ் கலாசாரம் இந்திய கலாசாரம் இல்லையா? ஆனால், மோடி அதை மறுக்கிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செயல்பாடுகள் நமக்கு ஏமாற்றம் அளிக்கின்றன. அவர் தனது ஊழல்களை மறைப்பதற்காக பிரதமர் மோடியிடம் சரணாகதி அடைந்து விட்டார். மோடி தனது ரிமோட் கண்ட்ரோல் மூலம் அதிமுக ஆட்சியையும், தமிழக மக்களையும் கட்டுப்படுத்த நினைக்கிறார்.

ஆனால் தமிழக மக்கள் அதைக்கண்டு பயப்பட மாட்டார்கள். இங்குள்ள மக்கள் நேர்மையானவர்கள். நல்ல கலாசாரம் மிக்கவர்கள். இதையறிந்து மோடி மக்களை மதிக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்தையும் அவர் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு நல்ல அரசு என்பது ஏழைகளுக்கு, பீடித் தொழிலாளர்களுக்கு, விவசாய தொழிலாளர்களுக்கு உதவி செய்வதாக இருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு அப்படியல்ல. மத்திய, மாநில அரசுகள் ஏழைகளை பாதுகாக்க முன் வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக பாளை. தூய சவேரியார் கல்லூரியில் கல்வியாளர்களுடனான கலந்துரையாடலில் ராகுல் காந்தி பேசியதாவது: புதிய கல்விக்கொள்கை தொடர்பாக கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் மத்திய அரசு முறையாக கருத்துகளை கேட்கவில்லை, பல அம்சங்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். அதை சரி செய்வது அவசியம். கல்வியை பொறுத்தவரை மதச்சார்பின்மையுடன் கருத்துகளை கேட்டு அமல்படுத்துவது அவசியம். 70 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ்காரர்கள் என்ற பெரிய எதிரியை கத்தியின்றி, ரத்தமின்றி நாம் அகிம்சை முறையில் போராடி அவர்களை திருப்பி அனுப்பினோம்.

அதேபோல் நரேந்திர மோடியை அகிம்சை முறையில் நாக்பூருக்கு திருப்பி அனுப்ப வேண்டும். கல்வியை வியாபாரமாக்க கூடாது. தரமான கல்வி அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்று சேர வேண்டும். இந்தியாவில் வேளாண்மை, கல்வி, சுகாதாரம் ஆகியவை வணிகமயமாகிவிட்டது. வணிகம் கல்வியை ஆளக்கூடாது. தரமிக்க கல்வி நிறுவனமாக ஐஐடி உள்ளது. அதுபோன்ற தரமான கல்வியை ஏழைகளுக்கு கிடைக்க செய்வது அவசியம். இதற்கு மத்திய பட்ஜெட்டில் அதிக ஒதுக்கீடு செய்ய வேண்டும். கொரோனா காலத்தில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடியை பெரிய நிறுவனங்களுக்கு சலுகை செய்தனர். அந்த தொகையை கல்விக்கு ஒதுக்கியிருந்தால் முன்னேற்றம் இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

* வெற்றி நடைபோடுவது யார்?

கல்லூரியில் நடந்த கலந்துரையாடலின்போது, பேராசிரியர் நாகராஜன் பேசுகையில், வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற அதிமுக அரசின் விளம்பரம் குறித்து கேட்டார். இதற்கு ராகுல் காந்தி பதிலளிக்கையில், தமிழகம் வெற்றி நடைபோடுகிறது என கூறுபவர்களிடம் யார் வெற்றி நடைபோடுகிறார் என திருப்பிக் கேளுங்கள். இங்கு 2 அல்லது 3 பேர்தான் வெற்றி நடைபோடுகிறார்கள் என்றார். ராகுலின் இந்த பதிலைக் கேட்டு அரங்கமே சிரிப்பலையில் குலுங்கியது.

* நாடாளுமன்றத்தில் பழுதாகும் மைக்

பேராசிரியர் ஒருவர் பேசுகையில், மைக் சரியாக வேலை செய்யவில்லை. அவர் முகக் கவசத்தை அகற்றிவிட்டு மைக்கை சரி செய்ய முயன்றார். இதை பார்த்த ராகுல், மைக்கை என்ன செய்கிறீர்கள். நாடாளுமன்றத்தில் எனது மைக்கும் இப்படித்தான் பழுதாகும் என நகைச்சுவையாக கூறினார்.

* பனங்கொட்டை தவுனை விரும்பி சாப்பிட்ட ராகுல்

நெல்லை டவுன் மேல ரதவீதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலையணிவித்து விட்டு ஆலங்குளம் நகருக்கு வருவதற்கு முன்னதாக குளக்கரையில் திடீரென காரை நிறுத்திய ராகுல், அங்கு இளநீர் விற்றுக் கொண்டிருந்த வியாபாரியிடம் சென்று இளநீர் வாங்கி குடித்தார். அவரிடம் வருமானம் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். மேலும் பனங்கொட்டைக்குள் இருக்கும் தவுனை வாங்கி விரும்பி சாப்பிட்டார். கொஞ்சம் பார்சலாகவும் வாங்கினார். வாங்கிய பொருட்களுக்காக கடைக்காரரிடம் ₹ரூ.500 கொடுத்தார்.

* நெல்லையப்பர் கோயிலில் தரிசனம்

நெல்லையில் நேற்று காலை தேர்தல் பிரசாரத்தை துவங்கிய ராகுல்காந்தி, டவுனில் உள்ள பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். சுவாமி - அம்பாள் பிரகாரங்களை சுற்றிப் பார்த்தார். அப்பகுதியில் ராகுல் காந்திக்கு வெள்ளி செங்கோல் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.

Related Stories:

>