×

மகளிர் சுய உதவிக்குழுவுக்கு முதல்வர் வழங்கிய நிதியில் ரூ.16 லட்சம் முறைகேடு: இயக்க மேலாளர்கள் 5 பேர் டிஸ்மிஸ்; உதவி திட்ட அலுவலர் சஸ்பெண்ட்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுவுக்கு முதல்வர் எடப்பாடி வழங்கிய நிதியில் ரூ.16.12 லட்சம் முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட மகளிர் உதவி திட்ட அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 5 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த டிசம்பர் 17ம் தேதி நடந்த கொரோனா தொற்று தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்திற்கு பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெரம்பலூர் மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் மற்றும் நிதி உதவிக்கான காசோலைகளை வழங்கினார்.

இதையடுத்து வங்கி கணக்கில் அந்த நிதிக்கான தொகை வரவு வைக்கப்பட்டது. சில நாட்களுக்கு பின்னர் மகளிர் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் ரஞ்சிதம், வட்டார இயக்க மேலாளர்கள் அஞ்சுகம், ரமேஷ், நதியா, இளமதி ஆகியோர், மகளிர் சுய உதவி குழுவினர்களை தொடர்பு கொண்டு உங்களது வங்கி கணக்கில் தவறுதலாக நிதி வரவு வைக்கப்பட்டுள்ளது என கூறி அந்த பணத்தை திரும்ப பெற்றுள்ளனர். இது குறித்து மகளிர் சுய உதவிக் குழுவினர், மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் அலுவலகத்தை அணுகி எங்களுக்கு வழங்கப்பட்ட கடனுதவி மற்றும் சுழற்சி நிதியை ஏன் திரும்ப பெற்றுள்ளீர் என கேள்வி எழுப்பினர்.

இதை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் ராஜ்மோகன் நடத்திய விசாரணையில், உதவி திட்ட அலுவலர் மோகன்ரவி உத்தரவின்பேரில் வட்டார ஒருங்கிணைப்பாளர் ரஞ்சிதம் மற்றும் வட்டார இயக்க மேலாளர்கள் ரமேஷ், அஞ்சுகம், நதியா, இளமதி ஆகியோர் மகளிர் திட்ட நிதியில் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த விசாரணை அறிக்கை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் அலுவலகத்திற்கு முறையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட பெரம்பலூர் மாவட்ட மகளிர் திட்ட உதவித்திட்ட அலுவலர் மோகன்ரவியை சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் ஜோதிநிர்மலா உத்தரவிட்டுள்ளார். முறைகேட்டில் ஈடுபட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் ரஞ்சிதம், வட்டார இயக்க மேலாளர்கள் ரமேஷ், அஞ்சுகம், நதியா, இளமதி ஆகிய 5 பேரை டிஸ்மிஸ் செய்து பெரம்பலூர் மாவட்ட திட்ட இயக்குநர் ராஜ்மோகன் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து அவர்களிடமிருந்து மகளிர் சுய உதவி குழுவினரிடம் இருந்து முறைகேடாக பெறப்பட்ட ரூ.16 லட்சத்து 12 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. முதல்வரால் மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு நேரடியாக வழங்கப்பட்ட நிதியையே ஏமாற்றி வேலியே பயிரை மேய்ந்த கதையாக நடந்த சம்பவம் பெரம்பலூர் மாவட்ட மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Principal ,Women's Self-Help Group , Rs 16 lakh misappropriation of funds provided by the Chief Minister to the Women's Self Help Group: 5 operating managers dismissed; Assistant Project Officer Suspended
× RELATED சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிறார் செந்தில் பாலாஜி