×

கோவையில் அதிமுகவினர் பரிசுப்பொருட்கள் விநியோகம்: காவல் நிலையத்தை முற்றுகையிட்ட திமுகவினர்

கோவை: கோவையில் ஓட்டுக்காக அதிமுக வினர் பரிசுப்பொருட்களை வழங்கி வருவதை தடுக்காத போலீசாரை கண்டித்து திமுகவினர் நேற்று தொண்டாமுத்தூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக.வினர் தேர்தலுக்காக பல்வேறு பரிசு பொருட்களை குவித்து வைத்து வீடு வீடாக வழங்கி வருவதாக தெரியவந்துள்ளது. தென்னமநல்லூரில் ஏ.டி காலனியில் 600 பிளாஸ்டிக் சேர், புத்தூர் புதுக்காலனியில் 1000 சேர், கள்ளிமேடு காந்தி காலனியில் 300 சேர், கலிக்கநாயக்கன்பாளையம் சமுதாய கூடத்தில் 500 சேர், பரமேஸ்வரம்பாளையத்தில் 200 சேர், முத்தாலம்மன் காலனியில் 500 சேர், முத்திபாளையம் பகுதியில் 100 சேர், கெம்பனூர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் சேர்கள் குவிக்கப்பட்டு வீடு வீடாக அதிமுகவினர் வழங்கி வருவதாக திமுகவினர் புகார் தெரிவித்தனர்.

ஆனால், இது தொடர்பாக மாவட்ட தேர்தல் பிரிவினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சேர்கள் இருந்த இடம், அதிமுகவினர் பதுக்கி வைத்த பகுதி குறித்து போட்டோ, வீடியோ ஆதாரங்களை அனுப்பியும் யாரும் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், நேற்று தி.மு.க. நிர்வாகிகள் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். சேர் மட்டுமின்றி டேபிள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், பாத்திரங்களை அ.தி.மு.க.வினர் ஓட்டு போட சொல்லி கொடுத்து வருகின்றனர். இதை தடுக்கவில்லை. இரவு நேரத்தில் அ.தி.மு.க.வினர் பரிசு பொருட்களை வாரி வழங்கி வருகின்றனர். இதைத்தடுக்கவேண்டும் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

* மநீம டிசர்ட், பாத்திரங்கள் சிக்கியது
கடலூர் கண்காணிப்பு குழுவினர், நில எடுப்பு வட்டாட்சியர் விஜயா தலைமையில் போலீசாருடன் பெரியகாட்டுப்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், ரூ.1 லட்சம் மதிப்புள்ள மக்கள் நீதி மய்யம் டார்ச்லைட் சின்னம் அச்சிடப்பட்டு ஏம்பலம் தொகுதி வேட்பாளர் பெயருடன் இருந்த பனியன் மற்றும் சில்வர் பாத்திரங்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து கடலூர் வட்டாட்சியர் பலராமனிடம் ஒப்படைத்தனர்.

* தங்கமணி தொகுதியில் பட்டுச்சேலை
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதியில் பகலில் வீடு, வீடாக சென்று பெண்களுக்கு அதிமுகவினர் டோக்கன் வழங்கினர். பின்னர், அந்த டோக்கனை பெற்றுகொண்டு இலவச பட்டுச்சேலைகளை விநியோகம் செய்து வருகிறார்கள். குமாரபாளையம் நகராட்சி 3வது வார்டு பகுதியில், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் தொழிற்சாலையில் வைத்து, டோக்கன் கொண்டு வந்த பெண்களுக்கு தேர்தல் விதிமீறி, நேற்றும் இலவச பட்டுச்சேலைகள் வழங்கப்பட்டது. மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியின் தொகுதியில் நடைபெறும் இந்த தேர்தல் விதிமீறல் குறித்து, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான மெகராஜ் மற்றும் எஸ்பி சக்திகணேசனுக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து, குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மரகதவள்ளி கூறுகையில், ‘பறக்கும்படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.

Tags : Coimbatore , AIADMK distributes gifts in Coimbatore: DMK besieges police station
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு