×

பால் பாக்கெட்டில் அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை கமிஷன்: தமிழ்நாடு பால்வளத்துறை அரசு அலுவலர்கள் சங்க மாநில முன்னாள் தலைவர் விஜயகுமார்

பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியமான பொருட்களில் ஒன்று பால். ஆவினை பொறுத்தவரையில் சொசைட்டி மூலமாக உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் வாங்கப்படுகிறது. பின்னர் அந்த பாலை சொசைட்டியில் இருந்து யூனியனுக்கு சப்ளை செய்கின்றனர். அதன்பிறகு யூனியனில் இருந்து பெடரேஷனுக்கு பால் கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து தான் லோக்கல் விற்பனைக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இவ்வளவு கைமாறி பால் செல்வதால், உற்பத்தியாளர்களுக்கு சரியாக உடனுக்குடன் பணம் போகாது. 3 மாதம் முதல் 4 மாதம் வரை நிலுவை வைத்துள்ளனர்.

கடந்த காலங்களில் ஆவின் நிர்வாகம் சரியாக இருந்ததால் ரூ.300 கோடி வருவாய் இருந்தது. இப்போது நஷ்டத்தில் சென்று கொண்டிருக்கிறது. இன்றைய சூழலில் ரூ.150 கோடி நஷ்டத்தில் செல்கிறது. ஆவினில் நிர்வாக செலவை அதிகமாக காட்டுகின்றனர். காசு கொடுத்தால் போதும் எது வேண்டுமானாலும் செய்யும் நிலை ஆவினில் உள்ளது. ஆவின் நிர்வாகத்தில் தினமும் லட்சக்கணக்கில் பணப்பரிவர்த்தனை நடைபெறுகிறது. இந்த துறையை மேம்படுத்த வேண்டும் என்றால் பணியிடங்களை குறைக்க வேண்டும். இந்த துறை போர்டு கையில் இருப்பதால், தங்களுக்கு தேவை என்று வந்தால் புதிது, புதிதாக பணியிடங்களை உருவாக்கி கொள்கின்றனர்.

மேலாளர், துணை மேலாளர், தரக்கட்டுபாட்டு மேலாளர் என தங்கள் இஷ்டங்களுக்கு ஏற்ப பணியிடங்களை உருவாக்கி கொண்டுள்ளனர். இந்த பணியிடங்களுக்கு ஒரு போஸ்டிங்கு ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை லஞ்சம் பெற்று கொண்டு பணியமர்த்துகின்றனர். இதுதான் கூடுதல் செலவு ஏற்படுவதற்கு காரணம். ஆவின் நிர்வாகத்தில் கட்டுபாடு என்பது இல்லை. எது சொன்னாலும் அமைச்சர் சொன்னார், செயலாளர் சொன்னார் என்று எல்லாம் செய்கின்றனர். தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு நாளில் கூட துணை பொது மேலாளர் ஒருவரை டிரான்ஸ்பர் செய்துள்ளனர். அந்த அதிகாரி எதற்கும் உடன்பட மாட்டார். இதனால், அவருக்கு தேர்தல் விதி அமலில் வந்த அன்று மாலை 5.45 மணிக்கு டிரான்ஸ்பர் ஆணை தந்துள்ளனர்.

ஆவின் நிர்வாகம் என்பது கூட்டுறவு சங்க நிறுவனத்தின் கட்டுபாட்டில் வருகிறது. இந்த சொசைட்டியில் 19 யூனியன் என்று இருந்ததை 24 யூனியனாக அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆவின் கூட்டுறவு சங்கங்கள் எல்லாம் தலைவர் கட்டுபாட்டில் வந்து விடுகிறது. அவர்கள் செலவை அதிகப்படுத்துகின்றனர். இதற்கு, அரசியல் நெருக்கடி இருப்பதால் கீழ் நிலை ஊழியர்களால் எதுவும் செய்ய முடியாது. பால்வளத்துறையில் பணி மாறுதல் என்பது அடிக்கடி நடக்கிறது. திடீர், திடீரென ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்தில் தூக்கியடிப்பது, மீண்டும் அதே இடத்தில் போட வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் லஞ்சம் தர வேண்டும் என்கிற நிலை என்பது உள்ளது.

மாதவரத்தில் ஆவின் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அது தான் நிர்வாக அலுவலகம். ஆனால், சென்னை நந்தனத்தில் ரூ.89 கோடியில் 9 மாடி கட்டிடம் புதிதாக கட்டியுள்ளனர். அதில், 5 தளம் வரை காலியாக உள்ளது. இது தேவையில்லாத செலவு. அந்த மாதிரி தான் தேவையற்ற செலவு செய்து நிதியை வீணடிக்கின்றனர். ஆவினில் எம்டியாக இருப்பவர் தான் பால்வளத்துறை ஆணையராக உள்ளார். எனவே, ஆவின் நிர்வாகத்துக்கு ஏதாவது தேவைக்கு பணம் வேண்டுமென்றால் ஆணையரின் ஒப்புதல் அவசியம் தேவைப்படுகிறது. இதில், பால்வளத்துறை ஆணையரே ஒப்புதல் கொடுத்து விட்டு எம்டியாக மாறி அவரே செலவு செய்கிறார். இவ்வாறு பெறப்படும் பணத்தை தணிக்கை செய்ய யாரும் கிடையாது.

இதில் தான் சிக்கல் இருக்கிறது. எனவே தான் நாங்கள் நீண்ட காலமாக ஆணையர், எம்டி பதவிக்கு தனித்தனியாக ஐஏஎஸ் அதிகாரி நியமிக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். ஆனால், இன்னும் எங்களது கோரிக்கை ஏற்கவில்லை. ஆவின் மற்றும் பால்வளத்துறைக்கு தனித்தனியாக இரண்டு அதிகாரிகள் நியமித்தால் நிர்வாகத்தை மேம்படுத்தலாம். தமிழகத்தில் அடுத்த ஆட்சி மாறினால் கண்டிப்பாக சிறப்பாக இருக்கும். திமுக ஆட்சிக்கு வந்தால் பால்வளத்துறை கட்டுபாட்டில் இருக்கும். இப்போது, அவரவர் தங்களுக்கு இஷ்டம் போல் தனித்தனியாக செயல்படுகின்றனர். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியால் கட்டுபடுத்த முடியவில்லை.

திமுக ஆட்சி அமைந்தவுடன் பால்வளத்துறை ஆணையருக்கு தனியாக ஒரு அதிகாரி, ஆவின் நிர்வாகத்துக்கு தனி ஒரு அதிகாரி கண்டிப்பாக கேட்போம். அப்படி நியமிக்கப்படும் பட்சத்தில் ஆவின், பால்வளத்துறையில் என்னென்ன முறைகேடுகள் நடந்தது என்பதை கண்டுபிடித்து விடலாம். உதாரணத்துக்கு ஆவின் பால்பாக்கெட் கொள்முதல் செய்வதிலேயே மாதம் ரூ.40 லட்சம் கமிஷன் அடிக்கின்றனர். ஒரு நாளைக்கு அரை லிட்டர் மில்க் பாக்கெட் விற்பனை செய்கின்றனர். அந்த பாக்கெட் போட்டு பால் அடைத்து விற்பனை செய்வதற்கு ரூ.40 லட்சம் கமிஷன் அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை எல்லோருக்கும் தான் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

இதை யாராலும் அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது. காரணம் ஒப்பந்த நிறுவனம் தான் அந்த வேலையை செய்கிறது. பால்வளத்துறை ஆணையராக சுனில்பாலிவால் இருக்கும் போது, ரூ.300 கோடி லாபத்தில் வந்தது. அதன்பிறகு காமராஜ் மற்றும் அடுத்தடுத்து ஐஏஎஸ் அதிகாரிகள் வந்த பின்பு ஆவின் நஷ்டத்தில் தான் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை யாரும் ஆவின் நிர்வாகம் லாபத்தில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கவில்லை. அடுத்து வரும் ஆட்சியிலாவது பால்வளத்துறைைக்கு சிறந்த ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து ஆவின் நிறுவனத்தை நஷ்டத்தில் இருந்து மீட்டு லாபத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Tags : Tamil ,Nadu ,Former Chairman of ,Sangha ,State , Commission from Milk Pocket to Ministers to Officials: Vijayakumar, State President, Tamil Nadu Dairy Public Officers Association
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...