×

சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல்: 3வது முறையாக ஒரே தொகுதியில் களம் காண்கிறார்

சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று விருப்ப மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து 3வது முறையாக கொளத்தூர் போட்டியிட அவர் விருப்ப மனு அளித்துள்ளார். விருப்ப மனு அளித்தவர்களிடம் நாளை முதல் நேர்காணல் நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் கடந்த 17ம் தேதி முதல் பெறப்பட்டு வந்தது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு வழங்க தொடங்கிய நாள் முதல் தினமும் ஏராமானோர் போட்டி போட்டுக் கொண்டு விருப்ப மனுக்களை வாங்கினர்.

தொடர்ந்து விருப்ப மனுக்களை தாக்கல் செய்தும் வந்தனர். குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் எங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் போட்டி போட்டு விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் வரை 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விருப்ப மனுக்களை வாங்கி சென்றனர். விருப்பமனுக்களை அளிக்க நேற்று கடைசி நாள். இதனால், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை முதல் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை 11.20 மணியளவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார். அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அண்ணா அறிவாலய மேலாளர் ஆர்.பத்மநாபன், துணை மேலாளர் என்.ஜெயக்குமார் ஆகியோரிடம் மு.க.ஸ்டாலின் மனுவை தாக்கல் செய்தார். மனு தாக்கலின் போது திமுக பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து மு.க.ஸ்டாலினுக்கு கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

மு.க.ஸ்டாலின் கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் இரண்டு முறை தொடர்ச்சியாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது 3வது முறையாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிட மாவட்ட செயலாளர் பி.கே.சேகர் பாபு, மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் ஆண்டிப்பட்டி மற்றும் போடிநாயக்கனூரில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார்.
நேற்று மாலை 5 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. மொத்தம் 8,388 விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டது. இதில் 7,967 பேர்விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக கூறப் படுகிறது.

தொடர்ந்து விருப்ப மனு அளித்தவர்களிடம் நாளை(2ம் தேதி) முதல் மாவட்டம் வாரியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்துகிறார். முதல் நாளன்று காலை 8 மணிக்கு கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு, தூத்துக்குடி வடக்கு, தெற்கு, திருநெல்வேலி கிழக்கு, மத்திய, தென்காசி வடக்கு, தெற்கு ராமநாதபுரம். மாலை 4 மணி விருதுநகர் வடக்கு, தெற்கு, சிவகங்கை, தேனி வடக்கு, தெற்கு, திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்டத்துக்கும் நேர்காணல் நடைபெறுகிறது.
இறுதி நாளான 6ம் தேதி காலை 9 மணி திருவள்ளூர் கிழக்கு, மத்திய, மேற்கு சென்னை வடக்கு, வடகிழக்கு, சென்னை கிழக்கு, தெற்கு, சென்னை மேற்கு, தென்மேற்கு மாவட்டத்திற்கும் நேர்காணல் நடைபெறும். மாலை 4 மணி புதுச்சேரி, காரைக்காலுக்கும் நேர்காணல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : MK Stalin ,Chennai Kolathur , MK Stalin's petition to contest in Kolathur constituency, Chennai: He is contesting from the same constituency for the 3rd time
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...