அதிமுக கூட்டணியில் இருந்து விலகல் கமல்ஹாசனுடன் சரத்குமார் சந்திப்பு: கூட்டணி குறித்து பேச்சு

சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேசி வருகின்றன. இந்தநிலையில், அதிமுகவில் கூட்டணி  பேச்சுவார்த்தை என்பது இழுபறியாக சென்றுகொண்டிருக்கிறது. இதனால், சமத்துவ மக்கள் கட்சியை மீண்டும் கூட்டணியில் சேர்ப்பது குறித்து அதிமுக எந்த வித நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை.  இந்தநிலையில், சமத்துவ மக்கள் கட்சி  தலைவர் சரத்குமார் கடந்த வாரம் சசிகலாவை நேரில் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிைலயில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை  ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலை சந்தித்தார். அப்போது, சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். சுமார் 15 நிமிடமாக இந்த ஆலோசனை  நடத்தப்பட்டது. சந்திப்பிற்கு பிறகு சரத்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சூழலில் நல்லவர்களும், ஒருமித்த கருத்துடையவர்களும், ஒருமித்த எண்ணங்கள் உடையவர்களும் இணைந்தால் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இன்று கமல்ஹாசனை  நேரடியாக சந்தித்தேன். அவரின் கருத்துக்களை கேட்டறிந்தேன். இனிமேல் எப்படி இதை எடுத்துச்செல்வது என்பது குறித்து அவரை சார்ந்த பொறுப்பாளர்கள் அமர்ந்து பேச உள்ளார்கள். ஒரு நல்ல முடிவு வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். 10 ஆண்டுகளாக நான் அதிமுக கூட்டணியுடன் இணைந்து பயணம் செய்தேன். இதனால், அதிமுக கூட்டணி தலைவர்கள் அழைத்து பேசுவார்கள் என்று காத்திருந்தோம். எந்த பேச்சுவார்த்தையும் இல்லாத காரணத்தால் அதிமுக கூட்டணியில்  இருந்து வெளியே வந்து விட்டோம். தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருகிறது. நல்லவர்கள் எல்லாம் இணையலாம் என்ற அடிப்படையில் கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஒருமித்த எண்ணம் கொண்டவர்கள் இணைந்தால்  சிறப்பாக இயக்கும்இவ்வாறு கூறினார்.

Related Stories: