தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக பணியாற்றியுள்ளார்: சபாநாயகர் தனபால் பாராட்டு

சென்னை:  பதினைந்தாவது சட்டமன்ற பேரவையின் இறுதி நாளான நேற்று சபாநாயகர் தனபால் பேசியதாவது: பதினைந்தாவது சட்டமன்ற பேரவையின் 10 கூட்டத்தொடர்கள் 2016ம் ஆண்டு மே மாதம் 25ம் நாள் தொடங்கி நேற்று வரை நடைபெற்றுள்ளன. இதில் பேரவை கூடிய மொத்த நாட்கள் 167 ஆகும். பேரவை கூட்டம் தொடங்கியது முதல் 5 ஆண்டுகளில் உறுப்பினர்களிடமிருந்து 1,30,572 வினாக்கள் வந்துள்ளது. இதில் 82,506 கேள்விகள் அவையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் அதிமுக எம்எல்ஏ பிரபு, 30,962, க.அன்பழகன் (தி.மு.க.) 18,756, கே.எஸ்.மஸ்தான் (திமுக) 18,609 கேள்விகள் கொடுத்துள்ளனர். அதிக கேள்விக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி 103 கேள்விக்கும், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 98 கேள்விக்கும், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் 80 கேள்விக்கும் பதில் அளித்துள்ளனர். முதல்வர் 110 விதியின் கீழ் 77 அறிக்கை வாசித்துள்ளார்.

முதல்வர் அனைத்து நாட்களும் அவைக்கு வருகை தந்து பேரவை கூட்டம் தொடங்கியது முதல் முடியும் வரை அனைத்து விவாதங்களிலும் கலந்துகொண்டு கூட்டம் சிறப்பாக நடைபெற பெரும் பங்காற்றினார். எனக்கென்று ஆசாபாசம், கோபதாபம், விருப்பு, வெறுப்பு கிடையாது. இன்னும் சொல்லப்போனால் என்னை இந்த பதவியில் இருந்து நீக்குவதற்கான தனி தீர்மானமே கொண்டு வரப்பட்டு, தோல்வியடைந்தது. தவறான புரிதல் காரணமாக இருந்தாலும், அதற்காக என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சட்டமன்றம் சுமூகமாக நடைபெற வேண்டும் என்பதற்காக வெளியேற்றம் உட்பட சில நடவடிக்கைகளை நானும் எடுத்திருக்கிறேன். இவ்வாறு என்னால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பேரவையில் மோதல் போக்கு ஏற்படுவதை தவிர்க்கவே என்பதை இந்த மாமன்றத்திற்கு, குறிப்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைக்கு நான் இந்த பதவியில் இருக்கிறேன், நாளை வேறொருவர் இருப்பார். யார் இந்த பதவியில் இருந்தாலும் பேரவையின் உரிமை எந்நாளும் பாதுகாக்கப்பட வேண்டும். பேரவையின் மாண்பு காக்கப்பட வேண்டும். சட்டமன்ற நடவடிக்கைகள் சிறப்பாக திகழ்வதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை எடுத்து வைத்தல் அவசியம். அந்த வகையில் பாராட்ட வேண்டியவை குறித்து பாராட்டியும், குறை கூற வேண்டிய நேரத்தில் சுட்டிக்காட்டியும் எதிர்க்கட்சி தலைவர் (மு.க.ஸ்டாலின்) சிறப்பாக பணியாற்றியுள்ளார். அவருக்கும், அனுபவம் வாய்ந்த எதிர்க்கட்சி துணை தலைவருக்கும், காங்கிரஸ் கட்சி தலைவர் ராமசாமிக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சார்ந்த முஹமது அபூபக்கருக்கும் எனது நன்றி.

நிறைவாக ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். இரண்டாவது உலகப்போரில் வெற்றி உறுதி என நினைத்த சர்ச்சில், வி’ என்றால் வெற்றி என்ற குறியீட்டை அனைவரின் மனங்களிலும் பதிய வைத்தார். அவர் நினைத்தது நனவானது. முதல்வரும் செல்கின்ற இடங்களிலெல்லாம் வி’ என்ற குறியீட்டினை காட்டி பிரசாரம் செய்து வருகிறார். அவர் நினைத்தது நிறைவேறும். அனைவருக்கு வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>