பொது அறக்கட்டளை சட்டம் திரும்ப பெறப்பட்டது: சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவிப்பு

சென்னை: அறக்கட்டளை தொடங்குபவர்கள் 3 மாதத்திற்குள் பொது அறக்கட்டளை சட்டத்திற்குள் பதிவு செய்ய வேண்டும் என கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட பொது அறக்கட்டளை சட்டம்-2020 சட்டப்பேரவையில் திரும்பப் பெறப்பட்டது.

அறக்கட்டளைகளின் கீழ் செயல்படும் பல்வேறு கல்லூரிகள், மருத்துவமனைகள், பள்ளிகள் முறையாக இல்லை எனவும், குற்ற வழக்கு பின்னணி உடையவர்களும் அறக்கட்டளைகளின் பொறுப்புகளில் இருப்பதாகவும், தொடர் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அறக்கட்டளை பதிவுச் சட்டத்தை அமல்படுத்தாதது ஏன் என்று மாநில தலைமைச் செயலாளருக்கு கேள்வி எழுப்பியது.

அதனடிப்படையில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், பொது அறக்கட்டளை பதிவுச் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதனடிப்படையில் அறக்கட்டளை வைத்திருப்போர் 3 மாதத்திற்குள் பொது அறக்கட்டளை சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமானது. இந்நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்து வரும், இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில் 3ம் நாள் பொது விவாதமான நேற்று, கடந்த 16.9.20 அன்று கொண்டுவரப்பட்ட பொது அறக்கட்டளை சட்ட முன்வடிவை திரும்பப் பெற சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் அனுமதி கோரினார். சபாநாயகர் அனுமதியளித்ததை தொடர்ந்து,  உறுப்பினர்களின் குரல் வாக்கெடுப்புக்கு பின், பொது அறக்கட்டளை சட்டம் (எண்: 41/2020) திரும்பப் பெறப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

Related Stories:

>