ஜாக்டோ ஜியோ மாநாடு ஒத்திவைப்பு: தேர்தல் பயிற்சி வகுப்புகளை வேலைநாளில் நடத்த வேண்டும்: இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

சென்னை: தேர்தல் பயிற்சி வகுப்புகளை வேலை நாட்களில் நடத்த வேண்டும் என்றும், இன்று நடைபெற இருந்த ஜாக்டோ ஜியோ மாநாடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செ.மயில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:  உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் திங்கள் முதல் சனி வரை, வாரத்தில் ஆறு நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றி வருகிறார்கள். தற்போது தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதால், மார்ச் மாதம் மூன்று ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.

தேர்தல் பயிற்சிக்கான முதல் வகுப்பு ஆசிரியர்கள் பணிபுரியும் சட்டமன்றத் தொகுதியில் நடைபெறும், இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்புகள், எந்த சட்டமன்றத் தொகுதியில் பணிபுரிய போகிறாரோ, அந்த சட்டமன்றத் தொகுதியில் நடைபெறும். மார்ச் மாதம் முழுவதும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஓய்வின்றி பணி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.  

எனவே தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை உடனே மேற்கொண்டு தேர்தல் பயிற்சி வகுப்புகளை ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து பிற நாட்களில் நடத்திடுமாறும் அல்லது சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை நாளாக அறிவிக்குமாறும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். மேலும் தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. எனவே, இன்று நடைபெற இருந்த ஜாக்டோ ஜியோ மாநில மாநாடு ஒத்திவைக்கப்படுகிறது.  சட்டமன்ற தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்றவுடன் வரும் மே மாதத்தில் ஜாக்டோ ஜியோ கோரிக்கை ஏற்பு மற்றும் உரிமைகள் மீட்கப்பட்ட வெற்றி மாநாடு மிக பிரமாண்டமாக நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>