×

வேலூரில் 2வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் 3 அரசு பஸ் கண்ணாடிகள் உடைப்பு-தற்காலிக டிரைவர்களை நியமிக்க முடிவு

வேலூர் : அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் 2வது நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு பள்ளிகொண்டா அருகே 3 பஸ்களின் கண்ணாடிகளை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், பணிச்சுமை குறைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகளை பல நாட்களாக நிர்வாகத்திடம் எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து நடந்த பல கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றுமுன்தினம் முதல் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் பெரும்பாலான போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 80 சதவீத பஸ்கள் இயக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு பள்ளிகொண்டா அருகே இறைவன்காடு பகுதியில் வேலூரில் இருந்து பேரணாம்பட்டு சென்ற ஒரு அரசு பஸ், சென்னையில் இருந்து சேலம் சென்ற அரசு விரைவு பஸ், வேலூரில் இருந்து ஆம்பூர் சென்ற அரசு பஸ் ஆகிய 3 பஸ்கள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் பஸ்களின் கண்ணாடி உடைந்தது.

தகவலறிந்த பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக அணைக்கட்டு கீழ்கொத்தூரை சேர்ந்த ஓட்டுனர் சரவணன் (42), ஊனை வாணியம்பாடியை சேர்ந்த ஓட்டுநர் செந்தில்குமார்(42), நாராயணபுரத்தை சேர்ந்த நடத்துனர் தனஞ்செழியன் (50) ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 2வது நாளாக நேற்றும் மாவட்டத்தில் ஒருசில பஸ்களை தவிர மற்ற பஸ்கள் அனைத்தும் கொணவட்டம், கிருஷ்ணா நகர் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 50 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

கிராமம், நகரங்களுக்கு செல்லும் பஸ்கள் முழுவதும் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் பஸ் நிலையங்கள், பணிமனைகளில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்காததால் தனியார் பஸ்களில் கூட்டம் அலைமோதியது. படிக்கட்டுகளில் தொங்கியபடி பலர் சென்றனர். ஆனால் கிராமங்கள் மற்றும் தொலை தூரத்தில் இருந்து செல்லும் பெரும்பாலான மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு செல்லவில்லை. ஷேர் ஆட்டோக்களில் கூட்டம் அலைமோதியது. இதை பயன்படுத்திக் கொண்டு ஆட்டோக்களில் கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அரசு பஸ்களை தற்காலிக பஸ் டிரைவர்களை வைத்து இயக்க முடிவு செய்துள்ளனர். அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலம் தனியார் பள்ளி, கல்லூரி பஸ் டிரைவர்கள், லாரி டிரைவர்கள், ஆட்டோ டிரைவர்களை தற்காலிக பஸ் டிரைவர்களாக நியமனம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை போக்குவரத்து துறை தொடங்கி உள்ளது. முன் அனுபவம் இல்லாத டிரைவர்களை நியமனம் செய்வதால் பயணிகளின் உயிருக்கு அச்சுறுதல் ஏற்படும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

Tags : Vallur , Vellore: Government transport workers went on strike for the 2nd day yesterday. Heels last night
× RELATED வல்லூர் அனல் மின்நிலைய தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்