மாசிமக திருவிழாவையொட்டி மகாமக குளத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்-சக்கரபாணி கோயில் தேரோட்டத்தில் திரளானோர் பங்கேற்பு

கும்பகோணம் : கும்பகோணத்தில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு மகாமக குளத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். முன்னதாக நடைபெற்ற சக்கரபாணி கோயிலில் தேரோட்டம் மற்றும் பொற்றாமரை குளத்தில் தெப்ப உற்சவ நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேறனர்.

மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று மாசிமக விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

இதே விழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமக விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாசிமக விழாவினை முன்னிட்டு கடந்த 17ம் தேதி முதல் ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், கும்பகோணம் அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், கவுதமேஸ்வரர், வியாழசோமேஸ்வரர் உள்ளிட்ட 6 சிவாலயங்களில் பத்துநாள் உற்சவம் நடைபெற்றது.

விழாவின் 5ம் நாள் ஓலைச்சப்பரமும், 9 ம் நாள் விழாவில் தேரோட்டம் நடைபெற்றது. மேலும், பாணபுரிஸ்வரர், கம்பட்டவிஸ்வநாதர், கொட்டையூர் கோடீஸ்வரர், சாக்கோட்டை அமிர்தகலசநாதர், ஏகாம்பரேஸ்வரர், நாகேஸ்வரர் ஆகிய 6 சிவன் கோயில்களில் மாசி மகத்தன்று மட்டும் ஏகதினம் உற்சவமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று காலை ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், பாணபுரீஸ்வரர், அமிர்தகலசநாதர், கம்பட்டவிஸ்வநாதர், கோடீஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், நாகேஸ்வரர், சோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் ஆகிய 12 சிவன் கோயிலிருந்து சுவாமிஅம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பட்டு, ரிஷப வாகனங்களில் மகாமக குளத்தின் நான்கு கரையில் எழுந்தருளினர்.

பின்னர் அந்தந்த கோயிலின் அஸ்திரதேவர்களுக்கு 21 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அஸ்திரதேவர்கள் மகாமக குளத்தில் நீராடியதை தொடர்ந்து நான்கு கரைகள் மற்றும் குளத்தில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட அனுமதி இல்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்திருந்தார். இதற்கு பக்தர்கள் தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, நேற்று காலை முதல் பக்தர்கள் நீராட போலீசார் அனுமதி அளித்தனர்.

சக்கரபாணி கோயில் தேரோட்டம்: கும்பகோணத்தில் திருமழிசை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்றதும், பிரம்மதேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டதுமான கும்பகோணம் சக்கரபாணி சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோயிலில் மாசி மக விழா சிறப்பாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இவ்விழாவினை முன்னிட்டு கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

உற்சவத்தின் முக்கிய நாளான நேற்று காலை சக்கரபாணிசுவாமி சுதர்சனவல்லி, விஜயவல்லி தாயாருடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர். பின்னர் காலை 8.30 மணியளவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேர் வடம்பிடித்து இழுத்தனர்.

பொற்றாமரை குளத்தில் தெப்ப உற்சவம்: மாசி மகத்தை முன்னிட்டு கும்பகோணம் பொற்றாமரை குளத்தில் தெப்ப உற்சவம் நேற்று நடைபெற்றது. மாசிமகத்தை முன்னிட்டு கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு 5 நாட்கள் கோயிலுக்குள்ளே உள்புறப்பாடு நடைபெற்றது. இறுதி நாளான மாசி மகத்தன்று, கோயிலின் பின்புறமுள்ள பொற்றாமரை குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதனையடுத்து நேற்று அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் தேவி, பூதேவியுடன் சாரங்கபாணி சுவாமி தெப்பத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.  காலையில் தெப்ப உற்சவமும், இரவில் மின்னொளி அலங்காரத்தில் தெப்ப உற்சவமும் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>