கொரோனா தடுப்பூசி போட விருப்பமா? 60 வயதுக்கு மேற்பட்டோர் 1 முதல் பதிவு செய்யலாம்: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்பும் 60 வயதுக்கு மேற்பட்டோர், இணை நோய்களால் பாதிக்கப்பட்ட 45 வயதுக்கு மேற்பட்டோர் கோ-வின் இணையதளத்தில் மார்ச் 1 முதல் பதிவு செய்யலாம். இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம், கடந்த மாதம் 16ம் தேதி பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இதில், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், இணை நோய்களால் பாதிக்கப்பட்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்ளுக்கும் மார்ச் 1ம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும் என்றும் மத்திய அரசு 2 தினங்களுக்கு முன் அறிவித்தது. இப்பிரிவுகளை சேர்ந்தவர்கள் தடுப்பூசி போட விரும்பினால், முன்கூட்டியே தங்களின் பெயர்களை ‘கோ-வின்’ இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அரசு நேற்று அறிவித்தது.

இதில், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் இணை நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்தால், அதற்கான மருத்துவ சான்றிதழ்களை இந்த இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், இவர்கள் அரசு தடுப்பூசி மையங்களுக்கு நேரடியாக சென்றும் இலவசமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

இன்றும், நாளையும் தடுப்பூசி கிடையாது

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடப்படுவதையும், மருந்து விநியோகிக்கப்படுவதையும் முறைப்படுத்த, ‘கோ-வின் 1.0’ என்ற இணையதளம் பயன்படுத்தப்படுகிறது. தற்போது, 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் பாதித்தவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட இருப்பதால், இந்த இணையதளத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு, ‘கோ-வின் 2.0’-வாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான பணிகள் இன்றும் நாளையும் நடைபெறுவதால், இந்த 2 நாட்களில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும்  பணி  நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

Related Stories:

>