கொரோனாவால் இறப்பவர்களின் உடலை அடக்கம் செய்ய அனுமதி: இம்ரானுக்கு பணிந்தது இலங்கை

கொழும்பு: கொரோனாவால் இறக்கும் சிறுபான்மையினரின் உடலை அடக்கம் செய்ய இலங்கை சம்மதித்துள்ளது. கொரோனா தொற்றால் இறப்பவர்கள்  உடலை எரிக்கும் நடைமுறையை இலங்கை அரசு பின்பற்றி வருகிறது. புதைக்கப்படும் சடலங்களில் உள்ள கொரோனா வைரஸ், பூமியில் உள்ள தண்ணீரில் கலந்து மக்களுக்கு பரவும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் கூறியதால், இலங்கை இவ்வாறு செய்து வருகிறது. இது, சிறுபான்மையினரின் மதவழக்கத்துக்கு எதிரானது என்று இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் பல போராட்டங்களையும் நடத்தினர். ஐநா மனித உரிமைகள் ஆணையமும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இலங்கைக்கு சுற்றுப் பயணமாக சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இலங்கை அரசிடம் இந்த விவகாரம் பற்றி பேசினார். ‘சிறுபான்மை மக்்களின் மத நம்பிக்கைகளுக்கு இலங்கை மரியாதை அளிக்க வேண்டும். சடலத்தை எரியூட்டுவதை இஸ்லாம் ஏற்கவில்லை’ என்று இம்ரான்கான் இலங்கையிடம் வலியுறுத்தினார். இதை ஏற்றுக் கொண்ட இலங்கை, கடந்த 10 மாதங்களாகப் பின்பற்றி வந்த நடைமுறையை மாற்ற முடிவு செய்துள்ளது.

கடந்த வியாழக் கிழமையன்று இது தொடர்பான சட்டத்தையும் இலங்கை அரசு திருத்தியுள்ளது. இறுதிப் போரில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஐநா.வில் தனக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை எதிர்க்கும்படி, உலக இஸ்லாமிய நாடுகளின் அமைப்புக்கு இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதை காரணமாக வைத்தே, இலங்கையை இம்ரான் பணிய வைத்துள்ளார்.

Related Stories:

>