×

வன்னியர்களுக்கு தற்காலிகமாக 10.5 சதவீத உள்ஒதுக்கீடு : மசோதா பேரவையில் தாக்கல்

சென்னை: வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா நேற்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. சாதிவாரி கணக்கெடுப்புக்கு பின் உள்ஒதுக்கீடு 6 மாதத்தில் மாற்றி அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினர் சமூகங்கள் சமச்சீரான வளர்ச்சியைப் பெற்று முன்னேற்றுவதற்காகவும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அவர்களுக்கு உரிய விகிதாச்சார வாய்ப்பினை பெறுவதற்காகவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினருக்குள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவில் சில குறிப்பிட்ட சாதி பிரிவுகளை ஒருங்கிணைத்து அவர்களுக்கு 7 சதவீதமும் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள மற்ற சாதி பிரிவுகளுக்கு 2.5 சதவீதமும் ஆகிய 3 உட்பிரிவுகளுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

 2012ம் ஆண்டு ஜனார்த்தனம் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையிலேயே இந்த சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இந்த ஒதுக்கீடு தற்காலிகமாக வழங்கப்படுகிறது. 6 மாத காலத்திலே சாதிவாரியாக கணக்கெடுப்பதற்காக இன்றைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதற்கான ஆணையம் அமைக்கப்பட்டு அந்தப் பணி தொடங்கப்பட்டு இருக்கிறது. அது ஒவ்வொரு சாதிக்கும் எவ்வளவு பிரதிநிதித்துவம் என்ற அடிப்படையில் வருகின்ற போது அது மாற்றியமைக்கப்படும்.

93 சாதியினருக்கு 7 சதவீத உள்ஒதுக்கீடு மட்டுமே...
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 20 சதவீத இடஒதுக்கீடு 3 ஆக பிரிக்கப்பட்டு வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 9.5 சதவீத ஒதுக்கீட்டில் மீனவர், வலையர், வண்ணார், வேட்டுவ கவுண்டர், கொண்டையம் ேகாட்டை மறவர், கூட்டப்பால் கள்ளர், மறவர்கள், செம்பநாடு மறவர், பரவர், தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 93 சாதியினருக்கு 7 சதவீத உள்ஒதுக்கீடும், எஞ்சியுள்ள பிரிவினருக்கு 2.5 சதவீத உள்ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்படும். இதனால் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள வன்னியர் தவிர்த்து மற்ற சமூகத்தினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

Tags : Vannians ,Bill ,Council , Provisional 10.5 per cent allocation for Vanni: Bill tabled in Assembly
× RELATED வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை...