×

2002ல் குஜராத்தில் நடந்த படுகொலையை இந்தியா மறக்கவில்லை திமுகவை பற்றி பேச மோடிக்கு உரிமை இல்லை: மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

விழுப்புரம்: விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், திண்டிவனம் அடுத்துள்ள தீவனூரில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-
இடைக்கால பட்ஜெட்டில் கற்பனை அறிவிப்புகள் வெளியிட்டுள்ளனர். இந்த அறிவிப்புகள் ஏன் கடந்த ஆண்டுகளில் வெளியிடவில்லை. தமிழகத்தை, 5.70 லட்சம் கோடி கடன் வாங்கியது மட்டுமே இந்த அரசுக்கு தெரிந்த ஒரே நிதி நிர்வாகமாக உள்ளது. 40 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம்விட்டு கஜானாவை காலி செய்து, தமிழகத்தின் வளர்ச்சியை 50 ஆண்டுகளுக்கு பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டனர்.  கடந்த வாரம் வந்த மோடி, பழனிசாமி, பன்னீர்செல்வம் கையை பிடித்து காட்டியது ரெண்டும் ஊழல் கைகள். அதை பிடித்து இந்த ஊழலுக்கு மோடியும் உடந்தை போல காட்டியுள்ளார். தவறான பொருளாதார கொள்கையால் வர்த்தகத்தை சிதைத்துவிட்டார். டெல்லி விவசாயிகள் மீது இரக்கம் காட்டாத மோடி, பிரதமர் என்பதை மறந்து தி.மு.க.வை விமர்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். திமுக ஆட்சியில் அனைத்து மாவட்டங்களிலும் அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டதாக சொல்லியுள்ளார். எந்த ஆதாரத்தை வைத்து பேசுகிறார்.

2002ல் குஜராத்தில் நடந்த பச்சை படுகொலையை இந்தியா இன்னும் மறக்கவில்லையே. தி.மு.க.வை குற்றம் சாட்ட துளி அளவும் இவருக்கு உரிமை கிடையாது. குடியுரிமை சட்டம் மூலம் மக்களை வேதனைக்குள்ளாக்கியது யார்?  பழனிசாமியை மிரட்டி பணியவைத்து, அப்பாவி அ.தி.மு.க. தொண்டர்களின் வாக்கை பாஜவுக்கு திருடி செல்ல வந்துள்ள மோடிக்கு தி.மு.க.வை பற்றி பேச உரிமை இல்லை. சமீபகாலமாக தமிழகம், புதுவையில் பாஜகவில் சேர்ந்த சிலரின் பின்னணியைப் பற்றி மத்திய உளவுத்துறை மூலம் விசாரியுங்கள், உள்துறை அமைச்சரை விசாரிக்க சொல்லுங்கள். (புளியந்தோப்பு அஞ்சலை, புதுவை எழிலரசி, கல்வெட்டு ரவி உட்பட 26 பேரின் பெயர்களை படித்தார்) தி.மு.க.வை பற்றி பேசுவதை இத்தோடு நிறுத்தி கொள்ளுங்கள். ஒரு பெண் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் ஜெயலலிதா என்று நேற்று பேசியுள்ளார். மாநிலங்களில் சிறந்த ஆட்சியை கொடுத்தது தமிழகத்தை சேர்ந்த இந்த லேடியா, குஜராத்தை சேர்ந்த மோடியா என்று கேட்டவர் ஜெயலலிதா.

5 ஆண்டு கால ஜெயலலிதா ஆட்சியில் ஊழல் பெருகிவிட்டது. 2016ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி ஓசூர், சென்னையில் மோடி பேசியதை மறந்துவிட்டீர்களா? ஊழல் மேல் ஊழல் செய்யும் ஜெயலலிதா என்று 2016 மே மாதம் 5ம் தேதி மதுரையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.  அப்போது தமிழக பாஜக ஒரு கார்ட்டூன் வெளியிட்டது. அதில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை முதல்வர் சந்திக்க மறுத்துவிட்டார். அதையொட்டி வெளியிடப்பட்ட கார்ட்டூனில், அம்மா பியூஸ் கோயல் வந்திருக்கார் என்று வீட்டுப்பணியாளர் சொல்ல, சசிகலா அம்மா பிஸியாக உள்ளார் என எழுதி, ஜெயலலிதாவும் சசிகலாவும் சீட்டு விளையாடுவது போல வெளியிட்டார்கள். அப்படிப்பட்ட மோடி அதிமுக தொண்டர்களை ஏமாற்ற வந்துள்ளார். இதுபோன்ற நாடகங்களை பார்த்து பார்த்து பழகியவர்கள் தமிழக மக்கள். தனது கொள்ளையில் இருந்து தப்ப மோடியை ஆதரிக்கிறார் பழனிசாமி. அ.தி.மு.க. தொண்டர்களின் வாக்கை அபகரிக்க வருகிறார் மோடி. இந்த சந்தர்ப்பவாத கூட்டணியை மக்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளனர். மக்கள் ஏமாற மாட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

ராணுவ வீரர் பாலுச்சாமிக்கு மு.க.ஸ்டாலின் வீரவணக்கம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில்,‘நமது ராணுவத்தின் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையில் சேவையாற்றி, சட்டீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர் மதுரை அழகர்கோவில் பாலுச்சாமிக்கு வீரவணக்கம். அவரது குடும்பத்தினர், கிராமத்தினரின் துயரத்தில் பங்கேற்று, ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

புடம் போட்ட தங்கம் போல் வாழ்ந்த பொதுவுடைமை போராளி தா.பாண்டியன்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கை: பொதுவுடைமைப் போராளியும்-இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான தா.பாண்டியன் மறைவெய்தினார் என்ற வேதனை மிகுந்த  பேரிடிச் செய்தி கேட்டு-பெருந்துயரத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.  நினைத்த கருத்தை எவ்வித தயக்கமும் இன்றி எத்தகைய தலைவர்களிடமும் எடுத்து வைக்கும் அற்புதமான ஆற்றல் படைத்த அவர் மேடைகளிலோ-விவாதங்களிலோ பேசத் துவங்கி விட்டால் கேட்டுக் கொண்டே இருக்கலாம். நாடாளுமன்ற விவாதங்களில் பொருள் பொதிந்த வாதங்களை முன்வைத்து அகில இந்திய தலைவர்களிடமும் நன் மதிப்பைப் பெற்றவர்.  புடம் போட்ட தங்கம் போல் வாழ்ந்த பொதுவுடைமைப் போராளி இன்று நம்மை விட்டுப் பிரிந்து விட்டார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும்-உறவினர்களுக்கும்-பொதுவுடைமை இயக்க தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.



Tags : India ,Gujarat ,Modi ,Dimu ,Q. ,Stalin , India has not forgotten the 2002 Gujarat massacre: Modi has no right to talk about DMK: MK Stalin
× RELATED என்னை வீழ்த்த வெளிநாட்டு சக்திகள் சதி: பிரதமர் மோடி பேச்சு