×

எந்த மாநிலமும் கையில் நிதி வைத்துக்கொண்டு திட்டங்கள் அறிவிப்பதில்லை 5.70 லட்சம் கோடி கடன் வாங்கியது ஏன்? முதல்வர் எடப்பாடி விளக்கம்

சென்னை: எந்த மாநிலத்திலும் கையில் நிதியை வைத்துக்கொண்டு திட்டங்களை  அறிவிப்பதில்லை. தமிழக அரசு இன்று ரூ.5.70 லட்சம் கோடி வாங்கி இருக்கிறோம் என்றால், வளர்ச்சி திட்டங்களுக்காகத்தான் கடன்  வாங்கியுள்ளோம் என்று முதல்வர் எடப்பாடி கூறினார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக விவசாய பிரதிநிதிகள் என்னை சந்தித்து புயல், மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய பயிர் கடனை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று, ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்துள்ளோம. இதனால், 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். விவசாயிகளின் பம்புசெட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று ஏப்ரல் 1ம் தேதி முதல் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

ஏழை, எளிய மக்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக தங்களது நகைகளை கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைத்துள்ளனர். 6 சவரன் வரை நகை கடன் ரத்து செய்யப்படும். சுயஉதவி குழுவினரும் கடனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் வைத்த கோரிக்கையை அதிமுக அரசு நிறைவேற்றி வருகிறது. முதல்வர் என்ற முறையில் மட்டுமல்ல, விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். மக்களுடைய தேவைகள், பிரச்னைகள் எல்லாம் மக்களோடு மக்களாக இருந்து தெரிந்த காரணத்தினால் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை அறிந்து இன்று நடைமுறைப்படுத்தியுள்ளோம். இன்று தமிழக அரசு ரூ.5.70 லட்சம் கோடி கடனில் இருக்கும்போது எப்படி இதையெல்லாம் சமாளிக்க முடியும் என்று கேட்கிறீர்கள். இந்தியா முழுவதும் கடன் வாங்கிதான் சமாளிக்கிறார்கள். எந்த மாநிலத்திலும் கையில் நிதியை வைத்துக்கொண்டு திட்டங்களை அறிவிப்பதில்லை. மக்களுக்கு ஒரு பிரச்னை வரும்போது மக்கள்தான் முக்கியம். அதை கருதி இந்த திட்டங்களை அறிவிக்கப்பட்டது. இன்று ரூ.5.70 லட்சம் கோடி வாங்கி இருக்கிறோம் என்றால், வளர்ச்சி திட்டங்களுக்காகத்தான் கடன் வாங்கியுள்ளோம்.

 இன்று உலக அளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில்கூட தமிழகத்ைத இன்று அதிலிருந்து மீட்டெடுத்து மக்கள் எவ்வித பிரச்னையும் இல்லாமல் சகஜநிலையில் வாழும் சூழ்நிலையை உருவாக்கி தந்திருக்கிறோம். திமுக ஆட்சியிலும் உலக வங்கியில் கடன் வாங்கிதான் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. ஆண்டுக்கு ஆண்டு திட்ட மதிப்பீட்டு தொகை கூடுகிறது. 10 வருடம் முன் விலைவாசி என்ன, இன்று விலைவாசி என்ன என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.
விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் கூறுகிறார்கள். இதுபற்றி நாடாளுமன்றத்தில், சட்டமன்றத்தில் திமுக குரல் கொடுக்கவில்லை. எல்லா கட்சிகளும் அவரவர்கள் கட்சியின் நிலைப்பாட்டை தெரிவிப்பார்கள். எங்களுடைய நிலைப்பாட்டை பொறுத்தவரை, இன்றைக்கு மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து செயல்படுகிறோம். தேர்தலுக்கும் கடன் தள்ளுபடி அறிவிப்புக்கும் சம்பந்தம் இல்லை. திமுக தலைவர் ஸ்டாலின் போகிற இடமெல்லாம், முதல்வர் பழனிசாமி அறிவிப்பதோடு சரி, எதையும் செய்ய மாட்டார் என்று கூறுகிறார். அதிமுக அரசு, அறிவிக்கும் திட்டத்தை நிறைவேற்றி காட்டும். அதிமுக ஆட்சியில் இ-டெண்டர் விடப்படுகிறது. எங்கிருந்து வேண்டுமானாலும் டெண்டர் கோரலாம். இதில் ஊழலுக்கு வாய்ப்பு இல்லை. இன்று ரூ.40 ஆயிரம் கோடிக்கு டெண்டர் விடப்பட்டது என்றால், இதை உடனே செலவு செய்துவிட முடியாது.

காவிரி-குண்டாறு திட்டம் இன்று தொடங்கியுள்ளோம். குறிப்பிட்ட நிதி, அதாவது ரூ.350 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளோம். அவர் (மு.க.ஸ்டாலின்) திட்டத்தின் மதிப்பை வைத்து கூறுகிறார். திட்டம் ஒரே ஆண்டில் நிறைவேறாது. 4, 5 ஆண்டுகள் ஆகும். பெரும்பாலான திட்டம் உலக வங்கியிடம் பணம் வாங்கி தான் செய்கிறோம். உலக வங்கி ஒப்புதல் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. இதில் எந்தவித ஊழலும் கிடையாது. பெண் காவல்துறை அதிகாரி மீதான பாலியல்  தொந்தரவு பிரச்னை குறித்து விசாரணை நடத்த விசாரணை கமிஷன்  அமைக்கப்பட்டுள்ளது. அந்த கமிஷன் விசாரணைக்கு பிறகுதான் அது உண்மையை,  பொய்யா என்று சொல்ல முடியும். விசாரணை முறையாக நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.

தலைமை செயலகத்தில் எடப்பாடி கடைசி பேட்டி
தமிழகத்திற்கான தேர்தல் தேதி நேற்று மாலை 4.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம்  நேற்று காலையே அறிவித்தது. அப்போது தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடந்து  கொண்டு இருந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத முதல்வர் எடப்பாடி, உடனடியாக  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ்  அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார். தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு முதல்வர் தலைமை செயலகம் வர முடியாது என்பதால், நேற்று  மாலை 3 மணிக்கு தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி  அளிப்பதாக திடீரென அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தலைமை செயலகம் வந்து  முதல்வர் நேற்று மாலை பேட்டி அளித்தார். இனி மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் மட்டுமே எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகம் வந்து பேட்டி அளிக்க  முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Edipati , No state announces plans with funds in hand Why borrow ₹ 5.70 lakh crore? Chief Edappadi Description
× RELATED நாம் ஒன்றாக வேண்டும்; அதிமுக வென்றாக...