பெண் எஸ்பியிடம் அத்துமீறிய சிக்கலில் இருந்து மீள திருப்போரூர் கோயிலில் எஸ்பி கண்ணன் பூஜை

சென்னை:  தமிழக காவல்துறையில் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ், அண்மையில் முதல்வர் டெல்டா மாவட்ட சுற்றுப்பயணம் சென்றபோது உடன் சென்றார். அப்போது அவரை வரவேற்க வந்த மாவட்ட பெண் எஸ்.பி. ஒருவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய சம்பவம் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் ராஜேஷ்தாஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.  இந்த சம்பவத்தில் பாதிப்புக்கு உள்ளான பெண் எஸ்பி சென்னையில் டிஜிபி திரிபாதியிடம் புகார் அளிப்பதற்காக தனது காரில் ஜிஎஸ்டி சாலையில் சென்றுகொண்டிருந்தார். இந்நிலையில், டிஜிபி ராஜேஷ்தாஸ் உத்தரவின்பேரில் அவரது காரை செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் வழிமறித்து, ராஜேஷ்தாஸ் குறித்து டிஜிபியிடம் புகார் செய்ய வேண்டாம்; இதனால் தேவையில்லாத பிரச்னை ஏற்படும்; ஒருமுறை ராஜேஷ் சாருடன் செல்போனில் பேசுங்கள் என்று மிரட்டும் தொனியில் கூறியதாக தெரிகிறது.

மேலும், தன்னுடன் இருந்த செங்கல்பட்டு டிஎஸ்பி மூலமாக பெண் எஸ்பி.யின் கார் சாவியையும் பிடுங்கி வைத்துக் கொண்டாராம். இதனால், மனவேதனையடைந்த பெண் எஸ்பி, செங்கல்பட்டு எஸ்பி கண்ணன், அவருடன் இருந்த டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டிஜிபி திரிபாதியிடம் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் மீது நடவடிக்கை பாய்வது உறுதியாகி உள்ளது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு வந்த செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் சிறப்பு வழிபாடு நடத்தி தன்னை இந்த சிக்கலில் இருந்து மீட்குமாறு வேண்டிக்கொண்டாராம்.  காவல்துறையில் உள்ள பெண் அதிகாரிக்கே பாலியல் சீண்டல் மற்றும் அதற்கு ஆதரவாக செயல்படும் மாவட்ட காவல் உயர் அதிகாரி என இருந்தால், காவல்துறையினர் எவ்வாறு சாமானிய பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பார்கள் என பொதுமக்கள் பரவலாக கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

உள்துறை செயலர், டிஜிபி அறிக்ைக தர வேண்டும்: மனித உரிமை ஆணையம் உத்தரவு

ராஜேஷ்தாஸ் மீது புகார் கொடுக்க பெண் ஐபிஎஸ் அதிகாரி தனது காரில் கடந்த 22ம் தேதி சென்னைக்கு வந்தபோது, ராஜேஷ்தாஸ் தனக்கு நெருக்கமான செங்கல்பட்டு எஸ்.பி.யை சமாதானம் பேச அனுப்பியுள்ளார். அவர்கள் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் அதிரடிப்படை காவலர்கள் மூலமாக பெண் ஐபிஎஸ் அதிகாரி வந்த காரை மறித்துள்ளனர். பின்னர் புகார் கொடுக்க வேண்டாம் என்று கூறி சமாதானப்படுத்தி அவரை திருப்பி அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது சென்னைக்கு புகார் அளிக்க செல்லவிடாமல் தடுக்கும் விதமாக கார் சாவியையும் எஸ்பி கண்ணன் எடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனாலும், பெண் அதிகாரி தொடர்ந்து உறுதியாக இருந்து, டிஜிபியிடம் புகார் கொடுத்துள்ளார். இதுசம்பந்தமாக  பத்திரிகையில் செய்தியாகவும், சமூகவலைதளங்களில் வீடியோவும் வெளியானது. இந்த செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். மேலும், இது சம்பந்தமாக உரிய விசாரணை செய்து உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகிய இருவரும் இரண்டு வாரங்களில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்தச் சம்பவம் காவல்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>